முன்னாள் காவல் அதிகாரியின் வீட்டுத் தோட்டத்தில் பெண்களின் சடலங்கள்

முன்னாள் காவல் அதிகாரியின் வீட்டுத் தோட்டத்தில் பெண்களின் சடலங்கள்

தென்னமெரிக்க நாடான எல் சால்வடோரில் ஒரு முன்னாள் காவல் அதிகாரியின் வீட்டுத் தோட்டத்தில் குறைந்தது எட்டு பேரின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்று அந்த நாட்டு காவல் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இன்னும் அந்த வீட்டில் மேலதிகப் பிணங்கள் கண்டுபிடிக்கப்படலாம் என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

அவ்வாறு அந்த வீட்டில் புதைக்கப்பட்டுள்ள பிணங்கள் பெரும்பாலானவை பெண்கள் அல்லது சிறுமிகளுடையதாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

பாலியல் காரணங்களுக்காக பெண்கள் அல்லது சிறுமிகள் அதிகம் கொல்லப்படும் லத்தின் அமெரிக்க நாடுகளில் எல் சால்வடோரும் ஒன்று.

சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்ட வீட்டின் உரிமையாளரான முன்னாள் காவல் அதிகாரி ஹியூகோ எர்னஸ்டோ ஒசாரியோ என்பவர் சாவேஸ் சான்ச்சுவாபா எனும் நகரத்தில் 57 வயதாகும் தாய் மற்றும் 26 வயது மகளை கொலை செய்ததற்காக இந்த மாதம் கைது செய்யப்பட்டார்.

இதற்கு முன்பு பாலியல் குற்றங்களில் ஈடுபட்டதாக விசாரணைக்கு உள்ளாகியிருந்த அவர் தாயையும் மகளையும் கொன்றதை ஒப்புக்கொண்டார்.

தலைநகர் சான் சால்வடோரில் இருந்து சுமார் 78 கிலோ மீட்டர் தூரம் வடக்கே இருக்கும் இந்த நகரத்தின் இருக்கும் ஹியூகோ எர்னஸ்டோவின் வீட்டை வியாழனன்று தடயவியல் நிபுணர்கள் சோதனை செய்தனர்.

அப்போது இறந்த உடல்கள் புதைக்கப்பட்டிருந்த குறைந்தது ஏழு குழிகளை அவர்கள் கண்டுபிடித்தனர். அவற்றில் சில உடல்கள் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே புதைக்கப்பட்டு இருந்தன.

சுமார் பத்தாண்டு காலத்துக்கும் மேலாக தொடர் கொலைகள் நிகழ்ந்து இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக இந்த ஆதாரங்கள் காட்டுகின்றன என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

தற்போது எட்டு சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன நிலையில், இறந்தவர்களை அடையாளம் காண்பதற்காக டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்று வெள்ளிக்கிழமையன்று விசாரணை மேக்ஸ் முனோஸ் அதிகாரி கூறியுள்ளார்.

முன்னதாக குறைந்தபட்சம் 24 பேரின் உடல் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் அந்த எண்ணிக்கை எட்டு என்று ஏன் மாற்றப்பட்டது என்பது குறித்து எந்தவிதமான விளக்கமும் அளிக்கப்படவில்லை.

ஆள் கடத்தல் காரர்கள், முன்னாள் காவல் அதிகாரிகள், முன்னாள் ராணுவத்தினர் உள்பட குறைந்தது 10 பேர் இந்த வழக்கில் விசாரணையை எதிர்கொண்டு உள்ளதாக எல் சால்வடோர் தேசிய காவல் துறையின் இயக்குநர் மரிசியோ ஆரியாசா சிகாஸ் கூறியதாக எல் சால்வடோரில் இருந்து வெளியாகும் 'லா ப்ரெண்சா' எனும் செய்தித்தாள் கூறுகிறது.

சுமார் பத்தாண்டு காலமாக ஹியூகோ கொலைகளில் ஈடுபட்டு வந்திருப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

உயிரிழந்தவர்களில் இரண்டு வயது குழந்தையும் இருக்கலாம் என்று விசாரணை அதிகாரிகள் கூறுவதாக ஏபி செய்தி முகமை கூறுகிறது.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபரையோ வழக்கறிஞரையோ கருத்து கேட்பதற்காக உடனடியாகத் தொடர்பு கொள்ள முடியவில்லை.

எலும்புக் கூடுகளை தடயவியல் நிபுணர்கள் புதைகுழியிலிருந்து வியாழனன்று வெளியே எடுத்துக் கொண்டிருந்த நேரத்தில் காணாமல் போனவர்களின் உறவினர்கள் அந்த வீட்டின் முன்பு குவிந்திருந்தனர்.

சுமார் 65 லட்சம் பேர் வாழும் எல் சால்வடார் நாட்டில் கடந்த ஆண்டு 70 பெண்கள் கொலை செய்யப்பட்டிருந்தனர் 2019 ஆம் ஆண்டு 111 பேர் கொலை செய்யப்பட்டு இருந்தனர் என்று காவல்துறை தரவுகள் தெரிவிக்கின்றன.

BBC

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image