ஆஸி. நாடாளுமன்றில் துஷ்பிரயோகத்திற்குள்ளான பெண் அதிகாரி

ஆஸி. நாடாளுமன்றில் துஷ்பிரயோகத்திற்குள்ளான பெண் அதிகாரி

நாடாளுமன்றத்தில் உள்ள அமைச்சர் அலுவலம் ஒன்றில் உடன் பணிபுரியும் மூத்த ஊழியர் ஒருவரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக குற்றம் சாட்டிய முன்னாள் அரசியல் ஆலோசகரிடம் ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் மன்னிப்பு கோரியுள்ளார்.

கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த இந்த சம்பவத்திற்கு பிறகு தனது வேலை பறிபோகும் என்று அஞ்சியதாக கூறும் பிரிட்டானி ஹிக்கின்ஸ் என்ற அந்த பெண் அதிகாரி, இதுதொடர்பாக தனது மேலதிகாரிகளிடம் இருந்து குறிப்பிடத்தக்க அளவுக்கு ஆதரவு கிடைக்கவில்லை என்று தெரிவித்திருந்தார்.

26 வயதாகும் பிரிட்டானி ஹிக்கின்ஸ், நேற்று (பிப்ரவரி 15, திங்கட்கிழமை) இதுதொடர்பாக தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டி, ஆஸ்திரேலியா முழுவதும் அதிர்வலைகளை எழுப்பியது.

இந்த நிலையில், ஹிக்கின்ஸின் புகார் கையாளப்பட்டது தொடர்பாக ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் மன்னிப்பு கோரியுள்ளார்.

மேலும், இந்த குற்றச்சாட்டு தொடர்பான விசாரணை மீண்டும் முடுக்கிவிடப்பட்டுள்ளது.

பெண் அதிகாரியின் குற்றச்சாட்டுகளை கேட்டு தான் "நொறுங்கிவிட்டதாக" கூறிய மோரிசன், ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் பணிப்பாதுகாப்பு மற்றும் கலாசாரத்தை ஆய்வுக்குட்படுத்துவதற்கும் அழைப்பு விடுத்துள்ளார்.

இதையடுத்து சம்பவ இடத்தை விட்டு அந்த மூத்த அதிகாரி சென்றுவிட்டதாகவும், ஆனால் நாடாளுமன்றத்தை விட்டு தான் வெளியே சென்றபோது அங்கிருந்த காவலாளிகள் யாரும் தனக்கு உதவவில்லை என்றும் பிரிட்டானி தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவத்திற்கு அடுத்த சில நாட்களில், இதை அமைச்சரின் அலுவலகம் "சமாளிக்க" முற்படுவதை கண்டு தான் அதிர்ச்சியடைந்ததாக அவர் கூறினார்.

இதுதொடர்பாக காவல்துறையினரிடம் புகார் அளித்தால் தான் ஆதரவு கொடுப்பதாக பாதுகாப்புத் துறை அமைச்சர் லிண்டா ரெனால்ட்ஸ் தன்னிடம் கூறியதாகவும், ஆனால் இது தனது பணிவாழ்க்கைக்கு ஊறுவிளைவிப்பதாக அமையும் என்று கருதியதால் தவிர்த்துவிட்டதாகவும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

இந்த நிலையில், தன்னை பாலியல் வன்கொடுமை செய்த மூத்த அதிகாரி அமைச்சரின் அலுவலகத்திலிருந்து நீக்கப்பட்டகாக பிரிட்டானி தனது தொலைக்காட்சி பேட்டியின்போது மேலும் கூறினார்.

இந்த சம்பவத்தை தொடர்ந்தும் மோரிசன் அமைச்சரவையில் உள்ள மற்றொரு அமைச்சரின் அலுவலகத்தில் பணியாற்றிய இவர், பிறகு அந்த துறையிலிருந்தே விலகிவிட்டார்.

நாட்டின் நாடாளுமன்ற வளாகத்திலேயே நடைபெற்ற இந்த சம்பவம் பெண்களின் பணிப்பாதுகாப்பு குறித்த விவாதத்தை ஆஸ்திரேலிய முழுவதும் ஏற்படுத்தியுள்ளது.

பிபிஸி- தமிழ்

Author’s Posts