மீண்டும் முடங்கிய பிரித்தானியா

மீண்டும் முடங்கிய பிரித்தானியா

நாடு முழுவதும் குறிப்பாக லண்டன், ஸ்கொட்லாந்து மற்றும் வேல்ஸ் ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் மிக அவசியம் தவிர்ந்து வௌியில் வரவேண்டாம் என்று பிரித்தானியா பிரதமர் பொரிஸ் ஜோன்சன் அறிவித்துள்ளார்.

பிரித்தானியாவில் வேகமாக பரவி வரும் வைரஸ் தொற்று காரணமாக இன்று (05) தொடக்கம் அமுலுக்கு வரும் வகையில் முடக்கல் நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் தொலைகாட்சியில் உரையாற்றும் போதே அந்நாட்டு பிரதமர் இவ்வாறு கூறியுள்ளார்.

மேலே குறிப்பிடப்பட்ட பகுதிகளில் பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதுடன் வடக்கு அயர்லாந்து பாடசாலைகளில் தொலைக்கல்வி தொடர்ந்தும் முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் வாரங்கள் கடினமாக இருக்கும் என்று அறிவித்துள்ள அவர், இம்முடக்கல் தீர்மானம் எதிர்வரும் பெப்ரவரி மாதம் நடுப்பகுதி வரை தொடரக்கூடும் என்றும் ஜனவரி இறுதியளவில் மீளாய்வு செய்யப்படும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

பிரித்தானியாவில் நேற்று மட்டும் 58,784 தொற்றாளர்கள் அடையாளங்காணப்பட்டதுடன் 28 நாட்களுக்குள் 407 மரணங்கள் பதிவாகியுள்ளன.

பராமரிப்பு நிலையங்களில் தங்கியுள்ளவர்கள், அவர்களுடைய பராமரிப்பாளர்கள், 70 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைத்து முன்னிலை சுகாதார மற்றும் சமூக சேவை ஊழியர்கள் மற்றும் மருத்துவரீதியாக பலவீமனாவர்கள் அனைவருக்கும் பெப்ரவரி நடுப்பகுதியளவில் தடுப்பு மருந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்நாட்டு பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சுகாதார விதிகள் நாளை காலையாகும் போது சட்டமாக்கப்படும் என்றும் அவற்றை கட்டாயமாக கடைப்பிடிக்கவேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Author’s Posts