தொழிலாளர் சட்ட மறுசீரமைப்பும் தனித் தொழிலாளர் சட்டவரைவும்!

தொழிலாளர் சட்ட மறுசீரமைப்பும் தனித் தொழிலாளர் சட்டவரைவும்!

தொழிலாளர் சட்ட மறுசீமைப்பு சமகாலத்தில் இலங்கையின் மிக முக்கிய பேசுபொருளாக உள்ளது. அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள தொழிலாளர் சட்ட மறுசீரமைப்பு வரைவுக்கு பெரும்பாலான தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்து தொழிற்சங்க நடவடிக்கைளையும் முன்னெடுத்து வருகின்றன. தலைநகர் கொழும்பிலும், நாட்டின் ஏனைய சில பாகங்களிலும் போராட்டங்களும் முன்னெடுக்கப்படுகின்றன.

நடைமுறையில் உள்ள தொழிலாளர் சட்டங்கள் காலாவதியானவை எனக் கூறி, தொழிலாளர் சட்டத்தின் 13 முக்கியச் சட்டங்களை, தனித் தொழிலாளர் சட்டம் (Single Employment Law) என்ற பெயரில் ஒரே சட்டத்தை அறிமுகப்படுத்தும் நடவடிக்கையை தொழில் அமைச்சு முன்னெடுத்துள்ளது.

இலங்கையின் தொழிற்படை

இலங்கையின் தொழிற்படையில் 8,547,062 உள்ளடங்குகின்றனர். இது ஒட்டுமொத்த சனத்தொகையில் 49.8% ஆகும். ஆண் தொழிலாளர்களின் எண்ணிக்கை 5,580,786 (70.5%) பெண் தொழிலாளர்களின் எண்ணிக்கை 2,966,276 (32.1) என தொகைமதிப்பு மற்றும் புள்ளி விபரத் திணைக்களத்தின் 2022 ஆம் ஆண்டுக்கான ஆண்டறிக்கையிலும், மத்திய வங்கியின் 2022 ஆம் ஆண்டுக்கான ஆண்டறிக்கையிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. 85 இலட்சம் தொழிலாளர்களின் வாழ்க்கை நிலையைத் தீர்மானிப்பதில் தொழிலாளர் சட்ட மறுசீரமைப்பு முக்கிய பங்கு வகிக்கிறது.

மறுசீரமைப்பு நடைமுறை

சுமார் 30 சதவீதத்திற்கும் அதிகமான தமிழ்மொழி பேசும் தொழிலாளர்கள் இலங்கையின் தொழிற்படையில் அங்கம் வகிக்கின்ற நிலையில், தொழிலாளர் சட்ட மறுசீரமைப்பு வரைவு, அரசாங்கத்தினால் சிங்கள மொழியில் மாத்திரமே முன்வைக்ப்பட்டுள்ளது. எனவே தமிழ்மொழி பேசுகின்ற தொழிலாளர்கள் இந்த சட்டவரைவு குறித்து அறிந்துகொள்ளவேண்டிய அவசியப்பாடு இல்லையா? அல்லது அவர்களின் பங்கேற்பை இந்த சட்ட மறுசீரமைப்பு நடைமுறையில் அவசியமாக அரசாங்கம் கருதவில்லையா? என தொழிற்சங்கத்தினரும், மனித உரிமை செயற்பாட்டாளர்களும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிபந்தனைகளுக்கு அமையவே தொழிலாளர் சட்ட மறுசீரமைப்பு இடம்பெறுவதாக தொழிற்சங்கங்களும், மனித உரிமை செயற்பாட்டாளர்களும் தெரிவித்து வருகின்ற நிலையில், சர்வதேச நாணய நிதியம் அல்லது அரச சார்பற்ற அமைப்புக்களின் அறிவுறுத்தலுக்கு அமைவாக அரசாங்கம் நாட்டின் தொழில்துறை சட்ட மறுசீரமைப்புக்கான நடவடிக்கையை மேற்கொள்ளவில்லை என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்திருந்தார்.

சுமார் 100 ஆண்டுகால பழமையான தொழிலாளர் சட்டங்களை மறுசீரமைத்து, அதன்மூலம் நவீன தொழில் உலகிற்கு ஏற்ற வகையில் வேலைவாய்ப்புச் சட்டம் கொண்டுவரப்படும் எனவும் அவர் கூறியிருந்தார்.

தொழிலாளர் சட்டமூலத்தை தயாரிப்பதற்கான உத்தேச வரைவு கடந்த மே மாதம் 16ஆம் திகதி தொழில் அமைச்சால் சமர்ப்பிக்கப்பட்டது. இது தொடர்பில் தொழிற்சங்கங்கள் மற்றும் சிவில் அமைப்புகள் தங்களது ஆலோனைகளையும், பரிந்துரைகளையும் முன்வைக்க ஜூன் 14 ஆம் திகதிவரை கால அவகாசம் வழங்கப்பட்டு பின்னர் அது தொடர்ச்சியாக நீடிக்கப்பட்டது.

1935 ஆம் ஆண்டு காலப்பகுதியில் கொண்டுவரப்பட்ட காலாவதியான தொழிலாளர் சட்டங்களை மாற்றிய புதிய தொழிலாளர் சட்டத்திற்கான வரைவை தேசிய தொழிலாளர் ஆலோசனை சம்மேளனத்தில் சமர்ப்பித்து அதன் யோசனைகள் மற்றும் பரிந்துரைகளுக்கான வாய்ப்புகளை தாங்கள் உருவாக்கியுள்ளதாக தொழில் அமைச்சர் குறிப்பிட்டிருந்தார்.

காலாவதியான மற்றும் பழமையான தொழிலாளர் சட்ட அமைப்பு, எதிர்கால வேலை உலகத்திற்கு பொருந்தாது மற்றும் நவீன சமூக போக்குகளுக்கு பொருந்தாது என்றும் அவர் கூறியுள்ளார்.

மறுசீரமைப்பின் சில முக்கிய அம்சங்கள்

• பணியிடத்தில் அனைத்து வகையான வன்முறை மற்றும் பாலியல் துன்புறுத்தல்களைத் தடுக்க தேவையான சட்ட ஏற்பாடுகளை கொண்டுவரல்

• பாலியல் வன்முறை தொடர்பான C190 சமவாயத்தை அங்கீகரிக்க உதவுவதுடன், C190ஐ அங்கீகரிக்கும் நிலுவையில் உள்ள கோரிக்கைகளை இதன் மூலம் நிறைவேற்றுதல்.
• ஊழியர்களின் விருப்பப்படி ஐந்து நாள் வேலை வாரம் மற்றும் நெகிழ்வான வேலை நேரம் அறிமுகப்படுத்தல்.

• சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு இரவில் பணிபுரியும் பெண்களுக்கு தற்போதுள்ள சட்ட விதிகளை தளர்த்தல்.

• தந்தைக்கும் மகப்பேறு விடுமுறை வழங்கல். ஒரு குழந்தை பிறந்தால், குறித்த தந்தை, தாய் மற்றும் குழந்தையுடன் இருக்க ஒரு தந்தைக்கு 3 நாள் விடுமுறை வழங்கல்

• தொழிலாளர் சட்டத்தில் வீட்டுப் பணியாளர் துறையை சேர்த்தல். இதன்மூலம், C 189 சர்வதேச சமவாயத்தையும் அங்கீகரிக்க நடவடிக்கை எடுத்தல்.

• தற்போது, தொழிற்சங்கம் அமைக்க குறைந்தபட்ச உறுப்பினர்களின் எண்ணிக்கை 7 ஆக உள்ளது. அதனை 100 ஆக உயர்த்தல்.

• தொழிற்சங்கத்தில் 25 சதவீத பெண்களின் பிரதிநிதித்துவத்தை கட்டாயமாக்குதல்.

• வேலைநிறுத்தத்தைத் தொடங்கமுன் தொழில் வழங்குநர்களுக்கு தெரிவிக்கவேண்டும் மற்றும் வேலைநிறுத்தம் செய்ய பெரும்பான்மை உறுப்பினர்களின் ஒப்புதல் பெறப்பட வேண்டும் என்று ஏற்பாடுகள்.

என்றவாறு இந்த தொழிலாளர் சட்ட மறுசீரமைப்பு தொடர்பாக தொழில் அமைச்சரின் விளக்கம் அமைந்திருந்தது.

உலகலாவிய தொழிற்சங்க சம்மேளனம்

உலகெங்கிலும் உள்ள 200 மில்லியன் தொழிலாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் உலகளாவிய தொழிற்சங்க சம்மேளனம், இலங்கை தொழிலாளர்களின் சம்பளம், நிபந்தனைகள் மற்றும் தொழிற்சங்க உரிமைகளை கத்தரிப்பதற்காக வடிவமைக்கப்பட்ட "தனித் தொழிலாளர் சட்டமூலத்தை" திட்டவட்டமாக நிராகரிப்பதில் இலங்கை தொழிற்சங்க இயக்கத்தில் இணைந்துள்ளது. இந்த சட்டமூலத்தில் சர்வதேச சட்டத்தை மீறும் பல விதிகள் உள்ளதாக உலகளாவிய தொழிற்சங்க சம்மேளனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை தொழிற்சங்கங்களால் ‘அடிமைத் தொழிலாளர் சட்டமூலம்’ என்று அழைக்கப்படும் தொழிலாளர் சட்டமூலம், பல ஆண்டுகளாக சமூக உரையாடல் மூலம் உருவாக்கப்பட்ட 13 தொழிலாளர் சட்டங்களை நீக்க முயற்சிக்கிறது.

இலங்கையில் உள்ள சிறுபான்மை தமிழ் சமூகத்தின் மொழி உரிமையை மீறும் வகையில், சிங்கள மொழியில் மட்டுமே வரைவு வெளியிடப்பட்டுள்ளது.

தேசிய தொழிலாளர் ஆலோசனைக் சபையின் (NLAC) தேசிய அளவில் அங்கீகரிக்கப்பட்ட முத்தரப்பு செயல்முறையை புறக்கணித்தது. சட்டமூலம் நடைமுறைக்கு வருவதற்கு முன்பாகவே தேசிய தொழிலாளர் ஆலோசனைக் சபையில் இருந்து நான்கு தொழிற்சங்கங்கள் தன்னிச்சையாக நீக்கப்பட்டன என்பதும் ஆழ்ந்த கவலைக்குரியது.

இந்த சட்டவரைவு சர்வதேச தொழிலாளர் தரங்களின் பின்வரும் மீறல்களை உள்ளடக்கியது.

• 8 மணிநேர வேலை நாள் நீக்கம்,

• மேலதிக நேரம் இல்லாமல் 16 மணிநேர நாட்கள் வரை நீட்டிக்கப்பட்ட வேலை சுழற்சி முறையை செயல்படுத்துதல்

• நியாயமற்ற பணிநீக்கத்திலிருந்து பாதுகாப்பை அகற்றுதல்

• வருடாந்த விடுப்பு உரிமைகளில் கடுமையான குறைப்பு

• தொழிற்சங்க உரிமை மற்றும் பயனுள்ள கூட்டு பேரம் பேசுவதற்கான உரிமையைப் பாதுகாக்கும் விதிகளை அகற்றுதல்

• சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உத்தரவின் பேரில், பாராளுமன்றம் உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது, இது செயல்படுத்தப்பட்டால், தொழிலாளர்களின் சமூக பாதுகாப்பு நிதியை குறைக்கும். தொற்றுநோய் மற்றும் மொத்த பொருளாதார தவறான நிர்வாகத்தின் விளைவாக இலங்கையில் 1 மில்லியனுக்கும் அதிகமான வேலைகள் இழக்கப்பட்டுள்ளன. உண்மையான ஊதியம் 50%க்கும் அதிகமாக குறைந்துள்ளதாக உலகளாவிய தொழிற்சங்க சம்மேளனம் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

உலகளாவிய தொழிற்சங்க சம்மேளனத்தின் வலியுறுத்தல்

தற்போதைய தொழிலாளர் சட்ட சீர்திருத்த செயல்முறையை உடனடியாக நிறுத்தவும்.

• அனைத்து எதிர்கால தொழிலாளர் சட்ட சீர்திருத்தங்களும் சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனம் (ILO) நிர்ணயித்த சர்வதேச தொழிலாளர் தரநிலைகளுக்கு மதிப்பளித்து, கண்ணியமான வேலைக்கான உரிமையை மேம்படுத்துவதை உறுதி செய்தல்

• ஜூன் 2023 இல் தேசிய தொழிலாளர் ஆலோசனைக் குழுவிலிருந்து சட்டவிரோதமாக நீக்கப்பட்ட நான்கு தொழிற்சங்கங்களை மீண்டும் இணைத்தல்.

தொழிற்சங்கங்களின் நிலைப்பாடு

நடைமுறையில் உள்ள 13 தொழிலாளர் ஆணைச் சட்டங்களை இரத்து செய்து அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள புதிய தொழிலாளர் சட்டமூலமானது, பல தசாப்த காலமாக தொழிலாளர்கள் அனுபவித்து வருகின்ற உரிமைகளை கத்தரிப்பதற்காகவே முன்மொழிக்கப்பட்டுள்ளதாக கடந்த செப்டம்பர் 3ஆம் திகதி கொழும்பில் இடம்பெற்ற தொழிற்சங்கப் பிரதிநிதிகள் மாநாட்டில் தெரிவிக்கப்பட்டது.

அதில் கூறப்பட்ட மேலும் சில முக்கிய விடயங்களாவன,

உத்தேச புதிய திருத்தங்களின் ஊடாக 1886 இல் அமெரிக்காவின் சிக்காகோ நகரில் ஏராளமான தொழிலாளர்களின் உயிர் தியாகத்தின் மூலம் வென்றெடுக்கப்பட்ட எட்டு மணித்தியால வேலை நாளானது, மேலதிக நேரம் கொடுப்பனவின்றி இல்லாமல் செய்யப்படுகின்றது. தொடர்ச்சியாக 12 மணித்தியாலங்கள் சேவையில் ஈடுபடுத்துவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

முதலாளிமாருக்கு சாதகமான முறையில் அனைத்து நிபந்தனைகளும் உள்ளீர்க்கப்பட்டு சேவையில் இணையும் போது கையொப்பமிடப்பட்டு பெற்றுக்கொள்ளப்படும் நியமனக்க கடிதம் மற்றைய தொழிலாளர் சட்டங்களை எல்லாம் தாண்டி செயல்படுகின்ற சட்டமாக மாற்றப்படுவதுடன், அதனை சவாலுக்கு உட்படுத்த குறித்து தொழிலாளருக்கு இயலுமை இல்லை. இந்த நியமனக் கடிதமானது முதலாளிக்கு தேவையானவாறு அவ்வப்போது மாற்றப்படலாம்.

தொழிற்சங்கம் ஒன்றை உருவாக்க தேவையான ஊழியர்களின் எண்ணிக்கை 7 இல் இருந்து 100 வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. புதிதாக விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளின் மூலம் தொழிற்சங்கங்களின் உருவாக்கம் தடுக்கப்படுகிறது.

புதிய தொழிலாளர் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டால் இலங்கையில் உள்ள தொழிலாளர்கள் தொழில் நிலைமைகள் சுமார் 200 வருடங்கள் பின்னோக்கிச் செல்லும். அதனால் இந்த சட்ட திருத்தங்களை தோற்கடிக்க வேண்டும் என்பது தங்களால் கைவிட முடியாத பொறுப்பாகும் என அந்த மாநாட்டில் தெரிவிக்கப்பட்டது.

116 பல்கலைக்கழக ஆசிரியர்களின் கூட்டறிக்கை

116 பல்கலைக்கழக ஆசிரியர்கள், ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் என எல்லோரும் இணைந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

இலங்கையில் தொழிலாளர் சட்டங்கள் பாரியளவில் மாற்றங்களை கொண்டு வராவிடினும் தொழிலாளர்களின் உரிமைகளை முற்றாக மறுக்கும் நிலையிலிருந்து சில உரிமைகளை அவர்களுக்கு வழங்கி இருக்கின்றது. இருப்பினும் தொழிற்படையை பிளவுபடுத்தல் முறைசார் தொழில்துறைகளை முறைசாரா தொழிலாக மாற்றுதல் போன்ற பலமிழக்கச் செய்யும் செயல்களால் தொழில் முகாமைத்துவங்கள் இவ்வுரிமைகளை தவறாக பாவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

முன்மொழியப்பட்டுள்ள சீர்திருத்தங்கள் தொழிலாளர் சட்டங்களை வலுவிழக்கச் செய்வதோடு தொழிலாளர்களுக்கு ஏற்கனவே உறுதி செய்யப்பட்டிருந்த அடிப்படை பாதுகாப்பு அம்சங்களை நீக்கி அவர்களையும் வலுவிழக்கச் செய்யும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்

இலங்கையில் தொழில்சார் சட்டங்களில் முன்னெடுக்கப்பட்டு வரும் மறுசீரமைப்பு தொடர்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமான், சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் கில்பர்ட் ஹூங்போ இன் கவனத்துக்கு கொண்டுசென்றார்.

செப்டம்பர் மாதம் ஜெனிவாவில் இடம்பெற்ற சர்வதேச தொழிற்சங்க மாநாட்டில் பங்கேற்ற போது, இலங்கையில் தொழில்சார் பல சட்டங்கள் இருந்தாலும் 17 மாத்திரமே நடைமுறையில் உள்ளன எனவும், தொழில் சட்ட மறுசீரமைப்பு தொடர்பில் தமது தரப்பால் முன்வைக்கப்பட்ட யோசனைகள் உள்வாங்கப்படாமலேயே உத்தேச திட்டம் வெளிவந்துள்ளது எனவும், எனவே, இதனை மீள்பரிசீலனை செய்யுமாறு கோரப்பட்டுள்ளது எனவும் அமைச்சர் ஜீவன் தொண்டமான் எடுத்துரைத்துள்ளார்.

தொழிலாளர் ஆலோசனை சபை

தொழில் அமைச்சால் முன்வைக்கப்பட்ட தனித் தொழிலாளர் சட்ட வரைவு, சிங்கள மொழியில் மாத்திரமே முனவைக்கப்பட்டது. தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் இந்த சட்ட வரைவு முன்வைக்கப்பட வேண்டும் என தொழிற்சங்கங்களும், சிவில் சமூக செயற்பாட்டாளர்களும் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், தொழிலாளர் ஆலோசனை சபையும் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் இந்த சட்டவரைவு முன்வைக்கப்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.

இதனடிப்படையில் அவதானிக்கும்போது, அரசாங்கத்தினால் அவசரமாக கொண்டுவரப்பட்ட தொழிலாளர் சட்ட மறுசீரமைப்பு, தொழிற்சங்கங்கள் மற்றும் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்களின் அழுத்தங்களினால் பின்வாங்கப்பட்டுள்ளது.

எந்தச் சட்டமும் காலத்திற்கு ஏற்றவாறு திருத்தப்பட வேண்டும் என்ற போதிலும், அந்தச் சட்டத்தை திருத்துவதற்குப் பதிலாக முற்றிலும் புதிய சட்டங்களைக் கொண்டுவர முயற்சிப்பது எந்தளவிற்குப் பொருத்தமானது என்பது குறித்தும் சிந்திக்கவேண்டியுள்ளது. எனவே தொழிலாளர்களுக்கு சாதகமான சட்ட மறுசீரமைப்பு உருவாக்கப்படும் வரையில், தொழிற்சங்கங்களினதும், மனித உரிமை செயற்பாட்டாளர்களினதும் ஒன்றிணைந்த செயற்பாடு தொடர்ச்சியாக அவசியம் என்பதே காலத்தின் தேவையாக உள்ளது.

 உசாத்துணைகள்

இலங்கை மத்திய வங்கி ஆண்டறிக்கை 2022 https://www.cbsl.gov.lk/sites/default/files/cbslweb_documents/publications/annual_report/2022/ta/6_Chapter_02.pdf

தொகைமதிப்பு மற்றும் புள்ளி விபரத் திணைக்கள ஆண்டறிக்கை 2022 http://www.statistics.gov.lk/LabourForce/StaticalInformation/AnnualReports/2022

உலகளாவிய தொழிலாளர் சம்மேளன அறிக்கை - https://pop-umbrella.s3.amazonaws.com/uploads/1384b882-499d-41ff-afc8-f33b221d2d96_Global_Unions_Statement_on_Labor_Reforms_in_Sri_Lanka_082123.pdf?key=

தொழில் அமைச்சு மற்றும் தொழில் திணைக்கள இணையத்தளங்கள்

தேசிய தொழில் ஆலோசனை சபை https://ta.labourmin.gov.lk/national-labour-advisory-council/

 பாரதி

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image
© 2024 Wedabima.lk. All Rights Reserved
Design by Vishmitha.com