ஓய்வூதியம் பெற்றவர்களின் பிரச்சினைகளுக்கு அரசாங்கம் தீர்வு வழங்குமா?

ஓய்வூதியம் பெற்றவர்களின் பிரச்சினைகளுக்கு அரசாங்கம் தீர்வு வழங்குமா?
ஓய்வூதியம் பெற்றவர்களின் பிரச்சினைகளுக்கு அரசாங்கம் தீர்வு வழங்க வேண்டும் என ஓய்வூதியர்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கான தேசிய அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
 
அக்டோபர்  8 ஆம் திகதி அமைந்த தேசிய ஓய்வூதிய தினத்தை முன்னிட்டு ஓய்வூதியர்களின் உரிமைகளை பாதுகாக்கும் தேசிய அமைப்பினால் கொழும்பில் ஊடக சந்திப்பு ஒன்று நடத்தப்பட்டது.
 
தேசிய ஓய்வூதிய தினத்தை முன்னிட்டு அரசாங்கம் நிகழ்வுகளை நடத்துவதை விடவும் ஓய்வூதியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வு வழங்குவது அரசாங்கத்தின் பொறுப்பாகும். அதற்காக அரசாங்கம் தீர்வு வழங்க வேண்டும் என வலியுறுத்தி அக்டோபர் 10ஆம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் எதிர்ப்பு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படுவதாக இந்த ஊடக சந்திப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
ஓய்வூதியர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான தேசிய அமைப்பின் தேசிய அமைப்பாளர் சந்தன சூரிய ஆராச்சி, ஓய்வூதியர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான தேசிய அமைப்பின் செயலாளர் சரத்லால் பெரேரா, ஓய்வுபெற்ற ஆசிரியர் - அதிபர் ஒன்றியத்தின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் டி.பிரியங்கா ஆகியோர் இதன்போது கருத்து தெரிவித்தனர்.
 
ஓய்வூதியர் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான தேசிய அமைப்பின் தலைவர் யு. பலிஹவடன உள்ளிட்ட பிரதிநிதிகளும் இதில் கலந்துகொண்டனர். இந்த ஊடக சந்திப்பில் ஓய்வூதிய உரிமைகளைப் பாதுகாப்பதற்கான தேசிய அமைப்பு முன்வைத்த முக்கிய விடயங்களாவன. 
 
தற்போது பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள் பாரியளவில் அதிகரித்துள்ளதால் சொற்ப ஓய்வூதியத்தில் வாழ முடியாத நிலை உள்ளது.
 
அரச மருத்துவமனைகளில் மருந்துகள், மருத்துவ பரிசோதனை வசதிகள், அறுவை சிகிச்சைகள் போன்றவற்றைப் பெறுவதற்கான வசதிகள் இல்லாத சூழ்நிலையில் அவர்கள் அதற்காக மிக அதிக பணத்தை செலவுசெய்ய வேண்டியுள்ளது.
 
மூத்த குடிமக்களுக்கு அந்த சுகாதார வசதிகளை வழங்க தனியார் துறையிலிருந்து 15% தள்ளுபடி கூட வழங்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
 
60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களின் வங்கி வைப்புத்தொகையின் மீதான வட்டிக்கு வரிவிதிப்பது மிகவும் நியாயமற்றது.
 
தனியார் துறையில் ஓய்வூதியம் பெறுவோர் நிரந்தர வைப்புத்தொகையில் கிடைக்கும் பணிக்கொடை மற்றும் வட்டியில் வாழ்கின்றனர். 
 
மூத்த குடிமக்களுக்கு வழங்கப்படும் 15% வட்டியை 9.75% ஆக குறைத்ததன் மூலம், மூத்த குடிமக்கள் பல பொருளாதார மற்றும் சமூக பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளனர்.
 
2016ஆம் ஆண்டுக்கு முன் ஓய்வு பெற்ற ஓய்வூதியர்களுக்கு அக்ரஹார காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்படாதுள்ளது.
 
2016 - 2019 ஓய்வு பெற்ற ஓய்வூதியதாரர்கள் 01-01-2020 முதல் வழங்கப்படவேண்டிய ஓய்வுதிய கொடுப்பனவு மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக தற்காலிகமாக இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. அதனை வழங்க இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
 
1997 இல் இல்லாமல்செய்யப்பட்ட இலக்கம். 3/2016(iv) மற்றும் 2022-01-05 அரச நிர்வாக சுற்றறிக்கைகளால் புறக்கணிக்கப்பட்ட ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் - அதிபர்களுக்கு கிடைக்கவேண்டிய சம்பளம் வழங்கப்படாமையால் ஏற்பட்டுள்ள கடுமையான அநீதியை சரி செய்யப்படவில்லை.
 
ஓய்வூதியம் பெறுவோர் ஓய்வூதியத்தை அடகுவைத்து வாங்கிய கடனுக்கான வட்டி விகிதம் திடீரென பெருமளவில் உயர்த்தப்பட்டும் இதுவரை குறைக்கப்படவில்லை.
 
இவற்றின் காரணமாக ஓய்வூதியர்களின் குடும்பத்தினர் மிகவும் நிர்க்கதியான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக இந்த ஊடக சந்திப்பில் ஓய்வூதியர்களின் உரிமைகளை பாதுகாக்கும் தேசிய அமைப்பு தெரிவித்துள்ளது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image