இன்று சர்வதேச வீட்டுப் பணிப் பெண்கள் தினமாகும்.
உலகப் பொருளாதாரத்தில் வீட்டுப் பணியாளர்களினால் வழங்கப்படும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை அங்கீகரித்து, நினைவு கூறும் வகையில் சர்வதேச வீட்டுப் பணியாளர்கள் தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. இலங்கையில் வீட்டுப் பணிப்பெண்களின் உரிமைக்காக குரல்கொடுக்கும் ப்ரொடெக்ட் சங்கத்தின் பொதுச் செயலாளர் கல்ப்ப மதுரங்கவுடனான நேர்காணல்
கேள்வி - இலங்கையில் தற்போது வீட்டுப் பணியாளர்கள் நிலை எவ்வாறு இருக்கின்றது?
பதில் - இலங்கையில் வீட்டு பணியாளர்களின் நிலைமை மாற்றம் அடையவில்லை. சாதகமான பக்கத்திற்கு அல்லாமல் பாதகமான பக்கத்திற்கு மாற்றமடைந்துள்ளது. பொருளாதார பிரச்சினைகளுக்கு மத்தியில் அவர்கள் பாதிப்பை எதிர்நோக்கி இருக்கின்றனர். அதாவது தங்களுடைய தொழில் தருநர்கள் கொரோனா தொற்றின் பின்னர் வீடுகளில் தங்களது வேலைகளை தாங்களே செய்து கொள்ள பழகியுள்ளனர். இதேநேரம் பொருளாதார தாக்கம் காரணமாக வீடுகளில் உள்ள தொழில் தருநர்கள் தங்களது வேலைகளை தாங்களே செய்து கொள்ள வேண்டிய நிலையை பழகிவிட்டனர். இதன் காரணமாக வீட்டுப் பணியாளர்கள் தொழிலை இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அதேநேரம் மலையகம் மற்றும் ஏனைய பின்தங்கிய பாகங்களை எடுத்துக் கொண்டால் அவர்கள் புலம்பெயர் தொழிலாளர்களாக வெளிநாட்டுக்கு புலம்பெயர் ஆரம்பித்தனர் என்பது ஒரு விடயமாகும்.
இரண்டாவது விடயம், கொவிட் தொற்றின் பின்னர் முறைசாரா தொழில்துறை சார்ந்த தரப்பினரின் வாழ்க்கை மேம்படுத்துவதற்காக அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்தது. எனினும் அந்த முறை சாரா தொழில்துறையில் உள்ள வீட்டுப் பணியாளர்கள் குறித்து இதன் போது கவனம் செலுத்தப்படவில்லை. அவர்களுடைய பொருளாதாரத்தை மேம்படுத்த தலையீடு செய்யவில்லை.
இதேநேரம் மலையாக மற்றும் ஏனைய பின்தங்கிய பகுதிகளில் உள்ள வீட்டுப் பணியாளர்களை கொழும்பு உள்ளிட்ட பகுதிகளுக்கு அழைத்து வரும் இடைத்தகர் அதன் மூலமாக பாரியளவில் பணத்தை ஈட்டும் மோசடி நிலமையும் ஏற்பட்டது. இலங்கையை பொறுத்தமாட்டில் வீட்டு பணியாளர்கள் இலங்கையில் தொழில் செய்யும் தரப்பினராக ஏற்றுக் கொள்ளப்படவில்லை. சமூக ரீதியாகவும் அவர்களுக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை. அதே நேரத்தில் சட்டரீதியாகவும் அவர்களுக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை.
கேள்வி - இலங்கையில் வீட்டு வேலையில் ஈடுபட்டுள்ள பணியாளர்கள் தொடர்பில் எண்ணிக்கை ரீதியான மதிப்பீடு உள்ளதா?
பதில் - சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனத்தினால் 2020 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட வீட்டுப் பணியாளர்களுக்கான கண்ணியமான வேலை திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் 80,000 முதல் 85 ஆயிரத்துக்கு இடைப்பட்ட வீட்டு பணியாளர்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேள்வி - தற்போது வீட்டு தொழிலாளர்கள் நாள் ஒன்றுக்கு எவ்வளவு சம்பளத்தை பெறுகின்றனர்? மாதாந்தம் அவர்கள் எவ்வளவு சம்பளத்தை பெறக்கூடியதாக இருக்கின்றது?
பதில் - இதிலே இரண்டு விடயங்களை குறிப்பிட வேண்டும். குறிப்பாக மலையகத்தில் வீட்டு தொழிலில் ஈடுபடுகின்றவர்கள் நாளாந்தம் 300 முதல் 500 ரூபாய்க்கு இடைப்பட்ட சம்பளத்தை பெறுகின்றனர். ஹட்டன் போன்ற பகுதிகளில் காலை 7:00 மணிக்கு சென்று மாலை 7 மணிக்கு வேலையை முடிக்கும் வீட்டு பணியாளர்கள் சுமார் 500 முதல் 600 ரூபாய் நாளாந்த சம்பளமாக பெறுகின்றனர். சிறு அளவானோர் நாள் ஒன்றுக்கு 700 - 800 ரூபாய் அளவில் சம்பளத்தை பெறுகின்றதையும் காணக்கூடியதாக இருக்கின்றது.
இதே நேரம் கொழும்பை எடுத்துக் கொண்டால் நாள் ஒன்றுக்கு ஆயிரம் முதல் ஆயிரத்து 500 ரூபாய் சம்பளம் பெறுகின்றவர்களும் 2000 ரூபாய் சம்பளம் பெறுகின்றவர்கள் இருக்கின்றனர். இதிலே ஒரு இடைவெளி காணப்படுகின்றது. வீட்டு பணியாளர்களுக்கு சம்பளம் தொடர்பில் நாங்கள் துல்லியமாக கண்டறிய முடியாது. கொழும்பில் சிலர் மாதாந்தம் 50,000 ரூபாய் அளவில் சம்பளம் பெறுபவர்களும் உள்ளனர். அதே நேரத்தில் மாதாந்தம் 25000 முதல் 35 000 இடைப்பட்ட அளவில் சம்பளம் பெறுபவர்கள் இருக்கிறார்கள். அதேநேரம் கொழும்பில் சுமார் 15,000 சம்பளத்திற்கு வேலை செய்கின்ற தொழிலாளர்கள் இல்லாமல் இல்லை.
கேள்வி - இலங்கையில் தற்போது வீட்டு தொழிலாளர்களுக்கான சட்ட நிலைமை எப்படி இருக்கின்றது? அதே நேரம் தற்போது தொழில் சட்டத்தில் திருத்த மேற்கொள்ளப்படுகின்ற நிலையில் அதில் உங்களுடைய சங்கத்தின் எவ்வாறான தலையீடு அல்லது யோசனைகள் முன் வைக்கப்பட்டுள்ளன.
பதில் - இலங்கையில் வீட்டு தொழிலாளர்கள் தொடர்பில் எந்த ஒரு சட்டமும் இல்லை. பிரித்தானியர் காலத்தில் வீட்டு தொழிலாளர்கள் ஒழுங்கு விதி என்ற ஒரு விதி காணப்பட்டது. அதாவது வீட்டுப் பணியாளர் ஒருவர் அவசியமாயின் அவர் பதிவு செய்யப்பட வேண்டும் என்ற ஒரு விடயமே அதில் குறிப்பிடப்பட்டுள்ளது அது ஒரு காலாவதியான சட்டமாகும். இலங்கையில் வீட்டு தொழிலாளர்களுக்கு என ஒரு சட்டம் இல்லை. அதாவது வீட்டு தொழிலாளர்கள், தொழிலாளர்கள் என்ற அடிப்படையில் கருத்தில் கொள்ளவில்லை என்ற நிலைமையை காணப்படுகின்றது. குறிப்பாக இலங்கையின் ஊழியர் சேமலாப நிதியம், ஊழியர் நம்பிக்கை நிதிய சட்டம் மற்றும் சம்பள கட்டளை சட்டம் ஆகியவற்றில் வீட்டு தொழிலாளர்கள் தொழிலாளர்களாக ஏற்றூக் கொள்ளப்படவில்லை.
ப்ரொடெக்ட் சங்கமானது 2018, 2019 ஆம் ஆண்டுகளில் வீட்டு தொழிலாளர்களை ஒன்றிணைக்கும் பணியை ஆரம்பித்தது. அந்த காலப்பகுதியில் இருந்து தற்போது வரை தொழிலாளர்களுக்காக சிறந்த தொழில் நிபந்தனைகளுடன் தொழில் சட்டத்தை உருவாக்குமாறு தொழில் அமைச்சிடமும் தொழில் திணைக்களத்திமும் கோரி வருகின்றோம். அவர்கள் இது தொடர்பில் கவனம் செலுத்தவில்லை. இறுதியாக எமக்கு கடந்த 2021 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் அப்போதைய தொழிலாளர் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவினால் வாக்குறுதி ஒன்று வழங்கப்பட்டது.
ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதிய சட்டத்தை திருத்தி வீட்டுத் தொழிலாளர்களுக்கு அவற்றை பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்பு ஏற்படுத்துவதாக தெரிவித்தார். அத்துடன் வீட்டு தொழிலாளர்களுக்கு அமைவாக சம்பள நிர்ணய சபையை உருவாக்குவதாகவும் தேசிய குறைந்தபட்ச வேதனை சட்டத்திற்கு அமைய அவர்களுக்கு குறைந்தபட்ச சம்பளத்தை நிர்ணயிப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார். இதற்கு அமைவான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக அவர் அப்போது நாடாளுமன்றத்திலும் தெரிவித்திருந்தாலும் அது தொடர்பாக எந்த நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை.
தற்போது தொழில் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றன. தொழில் அமைச்சர் மனுஷ நாணயக்காரவினால் இதற்காக 7 ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்பட்டிருக்கின்றன. இதன்போது தொழிலாளர் சட்டங்கள் திருதத்தப்பட வேண்டும் என நாங்கள் அவரிடம் யோசனைகளை முன் வைத்திருக்கின்றோம். தொழிலாளர் ஸ்தாபனத்தினால் 2011 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட கண்ணியமான வேலை என்ற திட்டத்தின் கீழ் சி 189 சமாவாயதத்தை அங்கீகரிக்குமாறு திருத்தம் மேற்கொண்டு அதில் வீட்டு தொழிலாளர்களையும் உள்ளீர்க்குமாறு நாங்கள் கேட்டிருக்கின்றோம். இதுவரையில் நாங்கள் ஆராய்ந்து பார்த்ததன் அடிப்படையில் உத்தேச புதிய தொழில் சட்ட திருத்தத்தில் வீட்டுப தொழிலாளர்கள் தொடர்பில் உள்ளடக்கியிருப்பதாக எமக்கு தெரியவில்லை.
கேள்வி - ப்ரொடெக்ட் சங்கம் என்ற அடிப்படையில் வீட்டுத் தொழிலாளர்களின் சேவையில் நீங்கள் எப்படியான மாற்றத்தை கொண்டு வந்திருக்கின்றீர்கள்? உங்களுடைய தொழிற்சங்கம் என்ற அடிப்படையில் இலக்குகள் எட்டப்பட்டுள்ளனவா?
பதில் - நாங்கள் தொடர்ச்சியாக முன்வைத்த கோரிக்கைகளின் அடிப்படையில் முன்னாள் தொழில்துறை அமைச்சர் தொழில் சட்டங்களில் மாற்றத்தை ஏற்படுத்தப்படவுள்ளதாக பாராளுமன்றத்தில் சொல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. இது குறித்து நாங்கள் தகவல் அறியும் சட்டம் ஊடாக தகவல்களை கோரி இருக்கின்றோம். இன்னும் பதில் வழங்கப்படவில்லை.
வீட்டுப் பணியாளர்களை ஒன்றிணைப்பது என்பது இலகுவான விடையம் அல்ல. எனினும் தொழிற்சங்கம் என்ற அடிப்படையில் நாங்கள் அந்த கடினமான பணியை செய்து கொண்டிருக்கின்றோம். ஏனெனில் சில வீட்டு தொழிலாளர்களே தங்களை தொழிலாளர்களாக ஏற்றுக் கொள்வதில்லை. அவர்களை தொழிலாளர்களாக அங்கீகரிப்பது என்பது மிகவும் சிக்கலான விடயமாகும் எனினும் அந்த பணியை நாங்கள் செய்து கொண்டிருக்கின்றோம். வீட்டு தொழிலாளர்கள் என்ற அடிப்படையில் அவர்கள் எங்களுடைய சங்கத்தில் பல்வேறு முக்கிய பதவிகளை வகிக்கின்றனர். தங்களுடைய உரிமைகளுக்காக அவர்கள் தொடர்ந்தும் குரல் கொடுத்து வருகின்றனர்.
அதே நேரம், வீட்டுப் பணியாளர்களை ஒன்றிணைக்கும் தொழிற்சங்கம் என்ற அடிப்படையில் எமது தொழிற்சங்கமானது ஏனைய தொழிற்சங்களுடன் ஒப்பிடும் போது தனித்து இயங்க கூடிய ஒன்றாக இருக்கின்றது. முறைசாரா தொழில்துறைக்கு இலங்கையில் வரவேற்பு இல்லை. எனினும் தொழிற்சங்கம் என்ற அடிப்படையில் அந்த வரவேற்பை நாங்கள் ஏனைய தொழிற்சங்கங்களுக்கு இடையே பெற்றிருக்கின்றோம். சர்வதேச தொழிலாளர் அமைப்பு எங்களை அங்கீகரித்திருக்கின்றது. அத்துடன் சர்வதேச வீட்டு தொழிலாளர்கள் சம்மேளனத்தில் ப்ரொடெக்ட் அமைப்பு அங்கத்துவம் பெற்றுள்ளது. 68 நாடுகள் அங்கம் வகிக்கும் இந்த சம்மேளனத்தில் எமது அமைப்பும் அங்கத்துவத்தைப் பெற்றுள்ளது. இவ்வாறாக இலங்கையின் வீட்டு தொழிலாளர்களுக்கு சர்வதேச அங்கீகாரத்தை நாங்கள் பெற்றுக் கொண்டிருக்கிறோம். வீட்டு தொழிலாளர்கள் தற்போது தங்களுடைய உரிமைக்காக போராடுகின்றார்கள் என்பதை அரசாங்கம் அறிந்துள்ளது. இந்த அடைவுகள் எமக்கு மிக முக்கியமானவை.