எரிபொருளையே வாழ்வாதாரமாக கொண்ட மீனவச்சமூகம் கவனிப்பாராற்ற நிலையில்...

எரிபொருளையே வாழ்வாதாரமாக கொண்ட மீனவச்சமூகம் கவனிப்பாராற்ற நிலையில்...

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார மற்றும் எரிபொருள் நெருக்கடி என்பவற்றின் காரணமாக பல சமூகங்கள் பாதிக்கப்பட்டிருந்தபோதிலும் எரிபொருளையே வாழ்வாதாரமாக கொண்ட மீனவச்சமூகமே கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என்று யாழ் மாவட்ட மீனவர்கள் சம்மேளனத்தின் தலைவர் அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்தார்.

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமை மீனவச்சமூகத்திற்கு ஏற்படுத்தி பாதிப்பு தொடர்பில் 'வேலைத்தளம்' இணையதளத்திற்கு கருத்து தெரிவித்தபோதே அவர் இவ்வாறு கூறினார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், எமது வாழ்வாதாரம் முழுமையாக எரிபொருளில் தங்கியுள்ளது. எமக்கு எரிபொருள் வழங்கு சுமார் 30 நாட்கள் ஆகிறது. கடந்த மாதம் ஆரம்பத்தில் வழங்கப்பட்ட 20 லீற்றர் எரிபொருளைக் கொண்டே மீன்பிடி நடவடிக்கைகள் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் முன்னெடுக்கப்படுகிறது.

மீன்பிடியை நம்பி அன்றாடம் வாழ்க்கை நடத்தும் பெண் தலைமைத்துவக் குடும்பங்கள், பிடித்த மீன்களை அன்றாடம் கொண்டு விற்பனை செய்து பிழைக்கும் தொழிலாளர்கள் முழுமையாக பட்டினிக் கிடக்க வேண்டிய அவல நிலை தோன்றியுள்ளது. இலங்கை அரச பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதை குறித்து கதைக்கிறது. ஆனால் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக திகழும் விவசாயத்தையும் மீன்பிடியையும் முற்றாக கைவிட்டுள்ளமை கவலைக்குரியது.

மக்களுக்கு சேவை செய்யவேண்டிய அரச அதிகாரிகள் தமக்கு எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக வரிசைகளில் சண்டைப்பிடித்துக்கொண்டிருக்கின்றனர். தற்போது நாட்டின் நிருவாகம் முழுமையாக சீர்குழைந்துள்ளது. இந்நிலையில் அவர்கள் எரிபொருளை பெற முண்டியடிப்பதில் என்ன ஆகப்போகிறது. எமக்கு அந்த எரிபொருளை வழங்கினால் மீன் விற்பவர்களும் பயன்பெறுவார்கள். அவர்களும் ஒருநேரம் சத்தான உணவை சாப்பிட முடியும். மீனவர்களுக்கு அத்தியவசியமான மண்ணெண்ணெய் வழங்கி ஒரு மாதத்திற்கும் மேலாகிறது.

இது இவ்வாறு இருக்க இந்திய மீனவர்கள் எமது கடல் எல்லைக்குள் நுழைந்து கடல்வளத்தை அள்ளிச்செல்கின்றனர். இதனாலும் நாம் கடுமையாக பாதிக்கப்படுகிறோம். இது தொடர்பில் ஆராய்ந்து எமக்கு மாற்றுவழிகளை அறிவிக்க எந்த நிருவாகமும் இல்லை. அரசாங்கம் எம்மை இவ்வாறு கைவிட்டுள்ளமையினால் வட மாகாணத்தில் உள்ள 50,000 மீனவக் குடும்பங்களைச் சேர்ந்த 200,000 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. கடற்றொழிலை அன்றாடம் பிழைப்பு நடத்திய 30,000 பேர் இன்று பட்டினியில் வாழ்கின்றனர்.

இப்போதைக்கு மீனவக்குடும்பங்கள் தம்மிடமுள்ள நகைகள் போன்றவற்றை அடகு வைத்து நாட்களை சமாளிக்கின்றனர். 5, 6 வீதமானவர்கள் பாரம்பரிய முறைகளை பின்பற்றி மீன்பிடிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர். இது அவர்களுடைய குடும்பத் ​தேவைக்கு மாத்திரமே போதுமானது. விற்பனைக்கோ ஏற்றுமதிக்கோ சாத்தியமாகாது. நாமும் மீனவர்கள் மத்தியில் கட்டுமரங்களில் சென்று மீன்பிடிக்கும் பாராம்பரிய முறையை மீனவர்கள் மத்தியில் ஊக்குவிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளோம். இல்லையென்றால் மீனவக் குடும்பங்கள் பட்டினியால் இறந்துவிடும். அதன் பின்னர்தான் அரசாங்கம் எம்மை நோக்கிப் பார்க்கும்போலிருக்கிறது.

மீனவச் சம்மேளனத்தின் தலைவர் என்றவகையில் உரிய துறைசார் அமைச்சர், அதிகாரிகள் என அனைவரிடமும் எமக்கு எரிபொருள் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகோள் விடுத்தபோதிலும் எவ்வித நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை.

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை காரணமாக வீட்டுத்தோட்டங்களை ஊக்குவிக்குமாறு அரசாங்கம் கோருகிறது. ஆனால் வடக்கைப் பொருத்தவரை பெரும்பாலான பிரதேசங்களில் அரச அதிகாரிகள் வினைத்திறனுடன் செயற்படவில்லை என்பதே எனது கவலை. மிகப்பெரிய கூட்டுறவு அமைப்பைக் கொண்ட, யுத்தினால் பாதிக்கப்பட்ட மாவட்டமாக இருந்தபோதிலும் நிருவாக ரீதியாக நிலைமையை சமாளிக்க சரியான திட்டங்கள் இன்றும் இல்லை.

நாட்டில் சர்வகட்சி அரசாங்கம் அமைக்கப்பட்டு, புத்திஜீவிகளைக் கொண்ட குழுவினூடாக திட்டங்கள் முன்வைக்கப்பட்டு செயற்படுத்தினால் மாத்திரமே இந்தபிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் என்பது என் கருத்து என்றும் அவர் தெரிவித்தார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image