அரசியல் நெருக்கடி நிலையில் தொழிலாளர் வர்க்கம் என்ன செய்ய வேண்டும்?

அரசியல் நெருக்கடி நிலையில் தொழிலாளர் வர்க்கம் என்ன செய்ய வேண்டும்?

சமகால அரசியல் நிலைமைக்கு மத்தியில் தொழிலாளர் வர்க்கமும். சிவில் சமூகம், பொதுமக்களும் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பது தொடர்பான விசேட அறிவிப்பை  தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புகளின் கூட்டிணைவு வௌியிட்டுள்ளது.

தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புகளின் கூட்டிணைவினால் நேற்று (18) கொழும்பு பொது நூலக கேட்போர் கூடத்தில் விசேட மாநாடு நடத்தப்பட்டது.

அதில் கலந்து கொண்டு உரையாற்றிய இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கருத்து தெரிவிக்கையில், 

பாராளுமன்றத்திலும் அதற்கு வெளியேயும் இருக்கின்ற மக்களின் கருத்து மாறுபட்டதாகும். இவ்வாறான நிலையில் இந்த சவாலுக்கு நாங்கள் எப்படி முகம் கொடுப்போம் என்ற நிலையே தற்போது உள்ளது. கடந்த நூறு நாட்களுக்கு அதிக காலம் நாட்டின் அரசியலை பொதுமக்களை முழுமையாக தீர்மானித்தனர். பொதுமக்களின் போராட்டம் - பொதுமக்கள் எழுச்சியே இதனை தீர்மானித்தது. மக்கள் தங்கள் போராட்டத்தின் மூலம் முன்னோக்கி வந்தனர்.

இதன்படி மே மாதம் 9 ஆம் திகதி பிரதமர் மஹிந்த ராஜபக்ச பதவி விலகினார். ஜூலை மாதம் ஒன்பதாம் திகதி பசில் ராஜபக்ச பதவியிலிருந்து விலகினார். ஜூலை மாதம் ஒன்பதாம் திகதி ஆகும் போது முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் பின்னர் கோட்டாபய ராஜபக்ஷ நாட்டைவிட்டு வெளியேறினார். மக்கள் பலத்தின் மூலமாகவே அனைத்தும் தீர்மானிக்கப்படுகின்றது. இந்த மக்களின் நடவடிக்கையின் மூலம் தற்போது புதிய ஜனாதிபதியைத் தெரிவுசெய்வதற்காக அரசியலமைப்பு சட்டத்திற்கு அமைய இந்த 225 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டு இருக்கின்றது. இந்த 225 பேரும் மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள. ஆனால் அவர்களுக்கு தான் தற்போது இந்த நாட்டின் அதிகாரத்தை தீர்மானிக்கின்ற பொறுப்பு இருக்கின்றது.

வெளியே இருக்கின்ற எதிர்ப்பு உள்ளே இல்லை. எனவே வெளியே இருக்கின்ற இந்த எதிர்ப்பை உள்ளே இவ்வாறு கொண்டு செல்வது என்ற சவால் எங்களுக்கு இருக்கின்றது. ஜனாதிபதி பதவிக்கான போட்டியில் பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் அறிவித்திருக்கின்றார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இவ்வாறான தீர்மானத்தை எடுக்கும் அவர்களின் அவசியப்பாடு என்ன என்பதற்பான காரணம் தெளிவாகின்றது. கள்வர்களை விரட்ட வேண்டும் என்பதே மக்களுடைய போராட்டமாக இருக்கிறது. ஆனால் இன்று கள்வர்களைப் பாதுகாக்கும் ஒரு செயல்பாடு இங்கே நடக்கப்போகின்றது.

எனவே எங்களுக்கு பாரிய பொறுப்பு இருக்கின்றது. நாம் அனைவரும் ஒன்றிணைந்து கலந்துரையாடி இந்த செயற்பாடுகளின் மூலம் முன்னோக்கி செல்ல வேண்டும். இதுவரையில் நாங்கள் பல்வேறு வெற்றிகளை பெற்றிருக்கின்றோம். எனவே மீண்டும் ஒரு சூழ்ச்சி வருமாயின் அந்த சூழ்ச்சியை தோற்கடிப்பது எங்களுடைய கரங்களிலேயே  இருக்கின்றது. அது வேறு எவரதும் கரங்களில் இல்லை. எனவே, நாங்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். அல்ல விட்டால் வேறு ஒரு நபர் இந்த விடயத்தை குழப்ப முடியும். இதனை நாங்கள் செய்திருக்கின்றோம். எனவே எங்களுடைய பலத்தை பயன்படுத்தி ரணில் விக்கிரமசிங்க என்ற நபருக்கு இடமளிக்காமல் செயற்பாட்டு ரீதியில் செல்லவேண்டும். அதேபோன்று ஜனநாயக மறுசீரமைப்புக்காக தொழிற்சங்கங்கள் முன்னிற்க வேண்டும். - எனறார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image