எரிபொருள் நெருக்கடியும் வீதியில் போராடும் பரீட்சை விடைத்தாள் திருத்தும் ஆசிர்களும்
எரிபொருள் நெருக்கடி காரணமாக கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
நாட்டின் பல பாகங்களிலும் பரீட்சை கடமைகளில் ஈடிபடும் ஆசிரியர்கள் தங்களுக்கான எரிபொருளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியுள்ளனர்.
நேற்று மின்தினம் (19) முதல் 10 நாட்களுக்கு விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் நடைபெற உள்ளன. இந்த நிலையில், எரிபொருள் நிரப்புவதற்கு விசேட அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்ட போதிலும், எரிபொருள் நிலையத்திலும் எரிபொருளை பெற்றுக்கொள்ள முடியவில்லை என ஆசிரியர்கள் குறிப்பிட்டனர்.
நேற்று முன்தினம் காலை இலங்கை ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு புனித மைக்கேல் கல்லூரிக்கு முன்பாக இந்த ஆர்ப்பாட்ட பேரணியானது ஆரம்பமானது. இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் பொன்னுத்துரை உதயரூபன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் க.பொ.த சாதாரண பரீட்சை மதிப்பீட்டு பணியில் ஈடுபட்ட சுமார் 1200 ஆசிரியர்கள் இன்றையதினம் கலந்துகொண்டார்கள்.
இந்நிலையில், கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு நாளாந்தம் ஒதுக்கப்பட்ட நேரத்தில் எரிபொருளை விநியோகிக்க தயார் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த நேற்ற முன்தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்தார். இதற்கமைய, காலை 6 மணி முதல் 7 மணி வரையான மற்றும் மாலை 5 மணி முதல் 6 மணி வரையான காலப்பகுதியில் ஆசிரியர்களுக்கான எரிபொருளை பெற்றுக்கொடுப்பதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
இதற்காக ஆசிரியர்கள் தமது நியமனக் கடிதம், கடமை அடையாள அட்டை மற்றும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்தினால் வழங்கப்பட்டுள்ள கடிதம் என்பனவற்றை எரிபொருள் நிரப்பு நிலையத்தில் காண்பிக்க வேண்டியது கட்டாயமானதென கல்வியமைச்சர் தெரிவித்தார். இதனிடையே, பரீட்சை மதிப்பீட்டு பணிகளில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த கூறினார்.
எவ்வாறிருப்பினும், ஆசிரியர்கள் நேற்றும் (20) யாழ்ப்பாணத்தில் க.பொ.த சாதாரன தர விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் எரிபொருள் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரிக்கு முன்னால் ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு எரிபொருள் நிரப்பு நிலையங்களில் உரிய எரிபொருள் வழங்கப்பட வேண்டும் அல்லது தமக்கான எரிபொருளை பெறுவதற்கு குறிப்பிட்ட எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றினை ஒதுக்குமாறும் கோரியே இப்போராட்டம் இடம்பெற்றது. “இதன் போது றோட்டில் நிற்பதா? போட்டில் நிற்பதா?”, “பெற்றோல் அடிப்பதா?விடைத்தாள் திருத்துவதா?” போன்ற கோசங்களும் எழுப்பப்பட்டன.