ஒவ்வொரு வருடமும் மார்ச் 8ஆம் திகதி உலகம் முழுவதும் சர்வதேச பெண்கள் தினம் கொண்டாடப்படுவது அனைவரும் அறிந்த ஒரு விடயமே! இவ்வருடமும் அது கொண்டாடப்பட்டது. ஆனாலம் இது கொண்டாட்டங்களினால் உருவானது அல்ல போராட்டத்தில் தான் உருவானது பெண்களின் உரிமைக்கான ஆதியில் இருந்தே போராட்டங்கள் நடந்தவண்ணமே இருக்கின்றன.
கிட்டதட்ட 18ம் நூற்றாண்டில் பெண்களின் உரிமைக்கான போராட்டங்களில் முன்னெடுக்கப்பட்டன. இதன் விளைவாக தொடர்ந்து ஒவ்வொரு இடங்களிலும் பெண்களுக்கான உரிமை போராட்டங்கள் நடந்த வண்ணம் இருக்கின்றன. 1908ம் ஆண்டு மார்ச் 8ம் திகதி நியூயோர்க் நகரில் நடந்த பேரணிக்கு பின்னர் 1909ம் ஆண்டு அந்த தினத்தை அமெரிக்க சோஷியலிஸ்ட் கட்சி தேசிய பெண்கள் தினமாக அறிவித்தது.
அதன் பின் 1910ம் ஆண்டு கோபன் ஹெகனில் நடந்த உழைக்கும் பெண்களின் சர்வதேச மாநாட்டில் மார்ச் 8ம் திகதியை சர்வதேச பெண்கள் தினமாக அனுசரிக்க வேண்டுமென்ற யோசனையை 'கிளாரா ஜெட்கின்' முன்வைத்தார். இதனையடுத்து 1911ம் ஆண்டு முதல் அவுஸ்திரேலியா, டென்மார்க், ஜேர்மனி, ஸ்விட்சர்லாந்து அகிய நாடுகளில் பெண்கள் தினம் கொண்டாடப்பட்டது.
1975ம் ஆண்டே ஐக்கிய நாடுகள் மார்ச் 8ம் திகதியை சர்வதேச பெண்கள் தினமாக அதிகாரபூர்வமாக அறிவித்தது. அன்றிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு கருப்பொருளின் அடிப்படையில் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது. 2011ம் ஆண்டு நூறாவது சர்வதேச பெண்கள் தினமும் கொண்டாடப்பட்டது.
ஒவ்வொரு வருட கொண்டாட்டத்தின் போதும் சர்வதேச மகளிர் தின வரலாற்றை மீட்பதும், சாதனை புரிந்த பெண்களின் சாதனைகளை முன்மொழிவதும், வாழ்த்துக்கள் கூறுவதும் என பெண்களை அடிமைபடுத்துகின்றார்கள் எனவே, அவர்களை மீட்க வேண்டும். சமுதாயம் பெண்களுக்கான அங்கீகாரத்தை வழங்க மறுகின்றது. எனவே, அவற்றை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்றெல்லாம் பேசுகின்றோம்.
நாம் ஒன்றை மட்டும் புரிந்து கொள்ள வேண்டும், எல்லா உயிரினமும் போலவே ஆண் ஒருவகையான உயிரி ஆணுடைய தன்மைகளுக்கேற்றாட் போல் ஆண் வாழ வேண்டும். பெண்ணின் தன்மைகளுக்கு ஏற்ப பெண் வாழ வேண்டும். இதில் யாரும் ஆள்பவரும்; அல்ல அடிமையும் அல்ல யாரும் யாருக்காகவும் வாழமுடியாது. அவரவரின் வாழ்க்கை அவரவர் கையில்.
இந்த தாட்பரியத்தை பெண் ஒருத்தி தன் பெற்றோரிடமிருந்தே ஆரம்பிக்க வேண்டும். என்றுமே பெண்கள் எல்லாவற்றிற்கும் பயந்தவராக வாழ வேண்டும், எல்லோரையும் அனுசரித்து வாழ வேண்டும், எப்போதும் யாராவது ஒருவரில் தங்கியே வாழவேண்டும் எனும் கட்டமைப்பை பெண்களுக்குள் பெண்களே ஏற்படுத்திக் கொள்கின்றார்கள்;. பெண் மென்மையானவள், வெட்கம் கொண்டவள். இவ்வாறான நிறச்சாயங்களை பெண்களே அவர்களுக்குள் பூசிக்கொள்கிறார்கள்.
நன்றாக யோசித்துப்பாருங்கள் பெண்கள் பலவீனமானவர்களா? இல்லை, அவர்கள் தான் மிக உன்னதமான பலசாலிகள். மிக நுணுக்கமான நிர்வாகிகள். இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம். இன்று எத்தனை பெற்றோர் உங்கள் வீட்டு பெண்களின் மேல் உங்களுக்கு உள்ள நம்பிக்கையை அளவிட்டு கூறியிருக்கின்றீர்கள்? எப்போது பார்த்தாலும் யாரைப் பார்த்தாலும் பயம், பயந்து வாழ் 'அவன் அதைக் கூறிவிடுவான். இவன் இதைக் கூறிவிடுவான்' என வளர்க்கின்றீர்களே தவிர 'எவன் எதைக் கூறினாலும் மகளே நான் துணை நிற்பேன். எந்த விடயத்திலும் தைரியமாக, சுதந்திரமாக முடிவெடு' என எத்தனை பெற்றோர் பெண் பிள்ளைகளுக்கு ரௌத்திரம் சொல்லிக் கொடுத்து வளர்த்திருக்கின்றீர்கள்?
தன் மகள் சுதந்திரமாக வாழ வேண்டுமென நினைக்கும் பெற்றோர், தன் மகனின் மனைவியை நிம்மதியாக வாழவடுவதில்லை. எனென்றால் இவள் மருமகள். பெண் என்ற ஒரே காரணத்தினால் எத்தனை அறிவும் தெளிவும் திறமையும் இருந்தாலும் பெண்கள் வீட்டிலேயே முடக்கப்படுகின்றனர். மகளிர் தினம் வந்ததும் சாதித்த பெண்களின் பட்டியலைப் பார்த்து ஆச்சரியப்படும் சகோதரர்களே, உங்களின் வீட்டில் எத்தனையோ சாதனையாளர்கள் உங்கள் சகோதரிகளாக, மனைவியாக, தாயாக உங்களில் அருகிலேயே இருக்கிறார்களே அவர்களை நீங்கள் அடையாளம் காணவில்லையா?
பெற்றோர்களை ஏனையவர்களை விட்டுவிடுங்கள் பெண்களே உங்களை பற்றிய உங்களின் கருத்துக்களை எண்ணி பார்த்திருக்கின்றீர்களா? பெண்களினால் எதையும் சாதிக்க முடியும். மிகச் சிறந்த படைப்பாளிகள் பெண்கள் தான். உங்களை நீங்களே கட்டமைத்துக்கொள்ளுங்கள். கூர்மையான சிந்தனையை வளர்த்துக் கொள்ளுங்கள். தெளிவாக, ஆழமாக கற்றுக் கொள்ளுங்கள் உயர்வான எண்ணங்களை நினைவில் வையுங்கள்.
நிச்சயமாக அவள் தவறவே மாட்டாள். பயம் என்பதை எப்போதும் அவர்கள் மனதில் விதைக்காதீர்கள். யாரையும் சார்ந்து வாழ அவளை வற்புறுத்தாதீர்கள். வாழ்க்கைக்கான தகுதியை சொல்லிக்கொடுங்கள்
த - தன்னம்பிக்கை
கு - குறிக்கோள்
தி - திட்டமிடல்
வாழ்க்கையில் விழாமல் யாரும் வாழ்ந்து விட முடியாது. விழும் போதெல்லாம் 'எழு' என சொல்லி கொடுங்கள். அப்போது நீங்கள் உங்கள் பெண்ணுக்கு சொத்து சேர்த்து வைக்க தேவையில்லை. எல்லா சவால்களையும் தாண்டி அவள் சாதித்துக் கொண்டே இருப்பான்.
எனவேதான் பெற்றோர்களே உங்களின் பெண்பிள்ளைகளுக்கும் நிர்வாகம், தைரியம், நம்பிக்கை, பேச்சாற்றல், கல்வி என எல்லாவற்றையும் சிறு வயதிலிருந்தே கொடுங்கள். 'குழந்தாய் நான் உன்னை இவ்வளவு நம்புகிறேன்' என அவளுக்கு உங்களை நிருபித்துக் காட்டுங்கள்.
பெண்களுக்கு நான்கு குணங்கள் இருக்கிறது எனக் கூறுவார்கள். அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு இதில் பயிர்ப்பு என்பது என்ன தெரியுமா? ஒருவர் எங்களை பார்க்கும் விதத்தை உள் உணர முடிவதுதான். அப்போது ஆபத்து எம்மை நெருங்காது. உங்களின் பார்வை நேர்மையானதாகவும் உங்களின் நோக்கம் ஆழமானதாகவும் இருக்கும் போது தேவையில்லாத விமர்சனங்கள் உங்களைத் தேடி வரும். எதிர்மறையான விமர்சனங்களுக்கு உங்கள் காதுகளை செவிடாக்கி கொள்ளுங்கள்.
நேர்கணிய எண்ணங்களுடன் உங்களின் இலக்கை நோக்கி செல்கின்ற போது அது உங்களின் கையில் கிடைக்கும். நாம் என்னவாகவேண்டுமென்று எண்ணுகின்றோமோ அதுவாகவே ஆகின்றோம். யார் யாரையும் சாராதவர்களாக... யாரும் நிகரில் சாராதவர்களாக.... வாழ்வோம், சாதிப்போம்.
பெண்களே!
நேற்றைய தலைமுறை கடந்ததாகவே இருக்கட்டும். இன்றைய தலைமுறையில் பதனிடுவோம். நாளைய தலைமுறை தன்நம்பிக்கையோடு கண்விழிக்கட்டும்.
அடுத்த வருட மகளிர் தினம் பெண்களின் உரிமைகள் அடையப்பெற்றதாக இருக்க நாம் அனைவரும் வழிசெய்ய வேண்டும்.
நிக்கலஸ்
கரிட்டாஸ் செட்டிக்
கண்டி