துறைசார் நிபுணர்களின் வகிபாகம் இல்லாத சம்பள பேச்சுவார்த்தைகள்

துறைசார் நிபுணர்களின் வகிபாகம் இல்லாத சம்பள பேச்சுவார்த்தைகள்

தோட்டத்தொழிலாளர்களின் சம்பளப்பேச்சு வார்த்தைகள் இரண்டு விடயங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.

1) தொழிற்சங்க ரீதியான அதிகாரத்துடன் பேரம் பேசுதல்.

2) சம்பளத்தொகையை நியாயப்படுத்தும் தரவுகள் மற்றும் புள்ளி விபரங்கள்.

இதில் கடந்த காலகட்டங்களில் தொடர்ச்சியாக தொழிற்சங்க ரீதியான பேர பேச்சுக்களே அதிகமாக இடம்பெற்று வந்துள்ளன. ஏதோ மனதுக்கு தோன்றிய ஒரு தொகையை தொழிற்சங்கங்கள் கேட்பதும் அந்தத் தொகையை தர முடியாது என கம்பனிகள் கைவிரிப்பதுவுமே இடம்பெற்று வருகின்றன. ஆனால் இதில் ஒரு விடயத்தை நோக்க வேண்டியுள்ளது. இத்தனை காலமும் இடம்பெற்ற பேச்சு வார்த்தைகளில் தொழிற்சங்கங்கள் கேட்ட தொகையை மறுத்திருக்கும் கம்பனிகள் தாம் முன்வைக்கும் நட்ட கணக்குகள் அல்லது குறித்த தொகையை வழங்க முடியாமைக்கான காரணங்களை சிறந்த ஆவணங்களாகவும் புள்ளி விபர தரவுகளாகவும் முன்வைத்தே வந்துள்ளன.

ஆனால் தொழிற்சங்கங்களோ இது வரை தாம் கேட்கும் தொகைக்கான நியாயங்களை நாட்டின் பொருளாதார நிலைமைகளோடு ஒப்பிட்டு அதை விவாதத்துக்குட்படுத்தியதாக இல்லை. கேட்பதை கொடுக்க வேண்டும் என பேச்சுக்களை ஆரம்பித்து பின்னர் கம்பனிகள் கூறும் தொகைக்கே இத்தனை நாட்களாக கூட்டு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டு வருகின்றது. அது குறித்து கேட்கும் போது ஆயிரம் ரூபாய் கேட்டால் தானே 800 ரூபாயாவது கிடைக்கும் என்ற ஆறுதல்களே தொழிற்சங்கங்களிடமிருந்து வருகின்றன. இதை வெற்றிகரமான பேரப் பேச்சு என்று கூற முடியுமா?

தொழிலாளர்களுக்கு வாழ்வதற்கான அல்லது நியாயமான நாட்சம்பளம் இந்த காலகட்டத்தில் எவ்வளவாக அமைய வேண்டும் என கடந்த காலங்களில் துறைசார்ந்தோரினால் பல ஆய்வுகள் நடத்தப்பட்டு புள்ளி விபரங்களுடனான ஆவணங்கள் பல பரிமாறப்பட்டுள்ளன. அதை எக்காலமும் தொழிற்சங்கங்கள் ஏறெடுத்தும் பார்த்ததில்லை. இந்த செயற்பாடுகளே கம்பனிகள் தமக்கு சாதமான முடிவை எடுக்கக் காரணமாகின்றன.

அதன் காரணமாகவே ஐந்து வருடங்களுக்கு முன்பு அவசரப்பட்டு கேட்கப்பட்ட ஆயிரம் ரூபாய் அடிப்படை சம்பளத்துக்கு இத்தனை இழுபறிகள். ஏன் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட வேண்டும் என்ற எந்த நியாயப்படுத்தல்களோ அந்த நேரத்தில் முன்வைக்கப்பட்டிருக்கவில்லை. அக்காலகட்டத்துக்குரிய வாழ்க்கைச் செலவு புள்ளி என்னவென்று தொழிற்சங்கங்கள் அறிந்திருக்கவில்லை. இப்போதும் இதே தவறை தொழிற்சங்கங்கள் செய்து வருகின்றன.

கம்பனிகளின் தயார்ப்படுத்தல்கள்

சம்பள பேச்சு வார்த்தைகளின் போது முதலாளிமார் சம்மேளனத்தின் பக்கமிருந்து வரும் நியாயங்களை கேட்கும் போதும் அவர்கள் முன்வைக்கும் தரவுகளை ஆய்வு செய்யும் போதும் உண்மையில் தொழிலாளர்களுக்கு தொழிற்சங்கங்கள் கேட்டும் தொகையை வழங்க முடியாது என்ற உணர்வே அங்கு அமர்ந்திருக்கும் தொழில் அமைச்சர் உட்பட அனைவருக்கும் ஏற்படும். அவர்களின் பக்கம் துறை சார்ந்தோரினால் தயாரிக்கப்பட்டிருக்கும் சிறந்த புள்ளி விபரங்களுடன் கூடிய ஆவணம் மிகப்பெரிய பலமாக அங்கு விளங்கும்.

ஆனால் தொழிற்சங்கங்களின் பக்கம் இப்படியான எந்த தரவுகளும் இருப்பதில்லை. இதன் காரணமாகவே அநாவசியமான விவாதங்களுடன் பேச்சுக்கள் முடிவடைகின்றன. இரண்டு வருடங்களுக்கு ஒரு தடவை கூட்டு ஒப்பந்தம் இடம்பெறுகின்றது. ஒரு ஒப்பந்தம் காலாவதியாவதற்கு 6 மாதங்களுக்கு முன்பே முதலாளிமார் சம்மேளனம் தன்னை தயார்ப்படுத்திக் கொள்கின்றது. தொழிற்சங்கங்கள் கேட்கும் தொகையெல்லாம் அமைப்புக்கு ஒரு பொருட்டே இல்லை. அடுத்த இரண்டு வருடங்களுக்கு தம்மால் இவ்வளவு தான் வழங்க முடியும் என்ற இறுதியான முடிவை எடுப்பது மட்டுமல்லது அதற்கான ஆவணங்களையும் கம்பனிகள் தயார்ப்படுத்தி விடுகின்றன. இதே போன்ற செயற்பாட்டை கூட்டு ஒப்பந்த தொழிற்சங்கங்களும் முன்னெடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றன. எந்த வித ஆயத்தங்களும் இல்லாது பேச்சு நடத்தவும் பேரம் பேசவும் இது ஏதோ ஒரு பத்து பேர் சம்பந்தப்பட்ட விடயமல்லவே? அடுத்த இரண்டு வருடங்களுக்கு வாழ்க்கையை கொண்டு நடத்த வேண்டிய ஒன்றரை இலட்சம் தொழிலாளர் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை தீர்மானிக்கப்போகின்ற விடயமாகும்.

துறைசார் நிபுணர்களின் ஆலோசனைகள்

அமரர் செளமியமூர்த்தி தொண்டமானின் காலத்தில் துறைசார் நிபுணர்களின் ஆலோசனைகள் பெரிதும் மதிக்கப்பட்டன. அக்காலத்தில் கல்வி புலத்தில் மலையக சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்திய பேராசிரியர்களான ம.செ.மூக்கையா , சி.சின்னத்தம்பி, சோ.சந்திரசேகரன் மற்றும் கட்சியின் உறுப்பினர்களாக இருந்த பி.பி.தேவராஜ், எஸ்.சதாசிவம், எஸ்.ஏ.கந்தசாமிநாயுடு, சட்டத்தரணி மாரிமுத்து உட்பட பலரினதும் ஆலோசனைகள் பெற்றுக்கொள்ளப்பட்டன. இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பல அபிவிருத்தித் திட்டங்களுக்கு அவை பயன்படுத்தப்பட்டன. அது கல்வி மற்றும் அரசியல் ,பொருளாதார யோசனைகளுக்கு உதவியது. சில விவகாரங்களை கையாள சிரேஷ்ட ஊடகவியலாளர்களின் ஆலோசனைகள் கூட பெறப்பட்டிருந்தன.

காலமாற்றத்தில் அவ்வாறானவர்களை தக்க வைத்துக்கொள்ள இ.தொ.கா தவறி விட்டது. இப்போதும் கூட ஆரம்ப கால உறுப்பினர்களான பி.பி.தேவராஜ் மற்றும் தற்போதும் செயற்படும் சட்டத்தரணிகளான மாரிமுத்து , ஆர்.ராஜதுரை போன்றோரின் ஆலோசனைகள் இந்த சம்பள விவகாரத்தில் பெற்றுக்கொள்ளப்படுகின்றனவா என்பது தெரியவில்லை. பேராசிரியர் சின்னத்தம்பி பொருளியல் துறை விற்பன்னர். மலையகத்தின் முதல் பேராசிரியர். அவரது மாணவராக விளங்குபவர் பேராசிரியர் விஜேசந்திரன். இருவரும் இணைந்து மூன்று வருடங்களுக்கு முன்பு தொழிலாளர்களின் நாட்சம்பளம் எவ்வளவாக இருக்க வேண்டும் என்றும் அதற்கான காரணங்களையும் ஆய்வு ரீதியாக ஆராய்ந்து சிறந்த ஆவணம் ஒன்றை தயார் செய்திருந்தனர். அதன் படி அந்த ஆண்டு ஒரு தொழிலாளியின் வாழ்க்கைக்கான நாட் சம்பளம் (Living Wage) 1108 ரூபாயாக இருந்தது. இது தொடர்பில் பல செயலமர்வுகள் நடத்தப்பட்டன. தொழிற்சங்கங்களுக்கும் அழைப்புகள் விடுக்கப்பட்டன. எனினும் பொருளியல் துறைசார் இரண்டு கல்விமான்களின் இந்த ஆவணம் பற்றி கூட்டு ஒப்பந்த தொழிற்சங்கங்கள் எந்த வித பிரதிபலிப்புகளையும் வெளிப்படுத்தவில்லை. இந்த ஆய்வின் போது 2022 ஆம் ஆண்டு எதிர்ப்பார்க்கப்படும் வாழ்வதற்கான நாட்சம்பளமாக 1244 ரூபாய் குறிப்பிடப்பட்டிருந்தமை முக்கிய விடயம்.

2018 ஆம் ஆண்டு அடிப்படை சம்பளம் மட்டுமே 200 ரூபாவாக அதிகரிக்கப்பட்டது. தொழிலாளர்களின் சம்பள விவகாரத்தை தொழிற்சங்க ரீதியாக மாத்திரம் அணுகி வெற்றி கொள்ள முடியாது என்பதை கடந்த இரு தசாப்த காலமாக உணர்ந்து கொள்ள தவறி விட்டன தொழிற்சங்கங்கள். அரசியல் தொழிற்சங்க பேதங்களை ஒரு பக்கம் ஒதுக்கி வைத்து விட்டு இந்த விடயத்தில் துறைசார் நிபுணர்களை அணுக வேண்டிய தேவைப்பாடு கூட்டு ஒப்பந்த தொழிற்சங்கங்களுக்கு இருக்கின்றன. இதை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மட்டும் தான் செய்ய வேண்டும் என்ற கட்டாயமில்லை. ஏனைய இரண்டு அமைப்புகள் ஏன் இத்தனை காலமும் அதை முன்னெடுக்கவில்லை என்ற கேள்வி எழுகின்றது. பேச்சு வார்த்தைகள் ஆரம்பிப்பதற்கு சில மாதங்களுக்கு முன்பே இவ்வாறான ஆவணத்தை முதலாளிமார் சம்மேளனத்துக்கு தொழிற்சங்கங்கள் வழங்குவதன் மூலம் அநாவசியமான வாதங்களையும் பொறு வாக்குறுதிகளையும் தவிர்த்து கொள்ளலாம்.
இப்போதும் கூட என்ன நடக்கின்றது? அடிப்படை சம்பளமாக ஆயிரம் ரூபாய் வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்படுகின்றது. ஆனால் கம்பனிகளோ எந்த சந்தர்ப்பதிலும் அடிப்படை சம்பளத்தை 700 ரூபாயிலிருந்து அதிகரிக்க உடன்படவில்லை. மாறாக இரண்டு முறைகளில் தொழிலாளர்களின் சம்பளத்தை ஆயிரம் ரூபா வரை காட்டுவதற்கு முற்படுகின்றனர். இதில் முக்கியமான விடயம் என்னவென்றால் ஊழியர் சேமலாப மற்றும் நம்பிக்கை நிதியாக அவர்கள் 105 ரூபாவை சேர்த்துக்கொள்கின்றனர்.

சேமலாப மற்றும் நம்பிக்கை நிதி என்பது ஓய்வூதியத்துக்குப்பிறகு தொழிலாளர்களுக்கு கிடைக்கும் வரப்பிரசாதமாகும். அது ஒரு சட்டரீதியான ஏற்பாடாகவும் உள்ளது. அதை இவ்வாறு நாட்சம்பளத்தில் சேர்த்து காட்டுவதை இந்த தொழிற்சங்கங்கள் ஏற்றுக்கொள்வதாக இருந்தால் இவர்களுக்கு அடிப்படை புரியவில்லை என்று அர்த்தமாகும். மேலும் முதலாளிமார் சம்மேளனம் முன்மொழிந்துள்ள சம்பளம் வழங்கும் இரண்டு அம்சங்கள் தொழிலாளர்களுக்கு எந்த வகையில் நன்மைகளைப் பெற்றுத் தரப்போகின்றன , அதில் உள்ள பாதக அம்சங்கள் என்ன என்பது குறித்து அலசி ஆராயும் அளவுக்கு பொருளாதார நிபுணத்துவம் கொண்டவர்கள் கூட்டு ஒப்பந்த தொழிற்சங்கங்களின் பக்கம் இப்போது இருக்கின்றனரா அல்லது அதை அத்தொழிற்சங்கங்கள் பரிசீலிக்கும்படி யாரிடமாவது வழங்கியுள்ளனவா என்பதெல்லாம் கேள்வியாக மட்டுமே உள்ளன.

இப்போது கூட காலம் கடந்து விடவில்லை. இம்மாதம் 7 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டிருக்கும் பேச்சு வார்த்தைகளின் போது தமக்கு சற்று கால அவகாசத்தை தொழிற்சங்கங்கள் கோரலாம். கம்பனிகளுக்கு சவாலாக, தமது கோரிக்கைகளை நியாயப்படுத்தும் தரவுகளைக் கொண்ட ஆவணங்களை சமர்ப்பிக்கலாம். அதற்கு சற்று நேரம் ஒதுக்கி இந்த விவகாரங்களில் நிபுணத்துவம் கொண்ட பொருளியலாளர்களை அணுகி ஆலோசனைகளை கேட்கலாம். பல பிரச்சினைகள் தீர்க்க வல்ல பல துறைசார் நிபுணர்கள் எமது சமூகத்திலேயே இருக்கும் போது, அவர்களை பயன்படுத்திக்கொள்ளாது பலரினதும் விமர்சனங்களுக்குட்பட்டு குறைந்த தொகையில் கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுமாயின் அது இவர்களின் இயலாமையின் பலகீனங்களையும் தமக்கு வாக்களித்த மக்களின் மீது எந்த கரிசனையும் இல்லாத தன்மையையுமே வெளிக்காட்டுவதாக அமையும். மட்டுமன்றி இந்த விவகாரத்தை அனைவரும் அவதானித்துக்கொண்டிருக்கின்றனர் என்பது முக்கிய விடயம். கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் அதிகாரம் கொண்டுள்ள மூன்று தொழிற்சங்க அமைப்புகளும் இந்த விடயம் குறித்து ஆராயுமா?

சிவலிங்கம் சிவகுமாரன்- வீரகேசரி 03.01.2021

Author’s Posts