நாட்டிலுள்ள அனைத்து அரச, பகுதி நிலை அரச, தனியார் மற்றும் பெருந்தோட்டத்துறை சார் ஊழியர்கள் அனைவருக்கும் 20,000 ரூபாய் கொடுப்பனவை பெற்றுக் கொடுப்பதற்கான தொடர் போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக தேசிய தொழிற்சங்க மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
கொழும்பில் நேற்று (19) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தொழிற்சங்க பிரதிநிதிகள் இது தொடர்பில் இவ்வாறு கருத்து வெளியிட்டனர்
தொழிற்படையை சேர்ந்த சுமார் 70 லட்சம் பேருக்கு பல்வேறு முறைமையில் சம்பள உயர்வு இடம்பெறுகின்றது. அரசதுறை சார் ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பு போன்று தனியார் துறைகளுக்கான சம்பவ அதிகரிப்பு இல்லை. அதேபோன்று பகுதி நிலை அரச ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பு போன்று பெருந்தோட்டத்துறைசார் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு இல்லை. இந்த நான்கு வகையான தரப்பினருக்கும் சம்பள அதிகரிப்பிற்கு வேறுவேறு முறைமைகள் உள்ளன.
இவ்வாறான முறையை அரசாங்கம் கையாண்டாலும் தற்போது நாட்டில் தொழிலாளர் வர்க்கத்திற்கு வாழக்கூடிய நிலைமை இல்லை. எனவே தற்போது இருக்கின்ற சந்தை நிலைமைகளை கருத்தில்கொண்டு வேலை செய்யும் மக்கள் வாழ்வதற்கான ஒரு கொடுப்பனவு அதிகரிப்பு அவசியமாகும். அரசாங்கம் இந்த கொடுப்பனவை வழங்காவிட்டால் அல்லது முதலாளிமார் அல்லது வேறுதரப்பினர் வழங்காவிட்டால் உழைக்கும் வர்க்கம் என்ற அடிப்படையில் ஒன்றாக இணைந்து போராடி நியாயமான சம்பளத்தை பெற்றுக் கொள்வதற்கான போராட்டத்திற்கான அவசியம் தற்போது உள்ளது.
அந்த நோக்கத்தை வென்றெடுப்பதற்காக தேசிய தொழிற்சங்க மத்தியம் என்ற அடிப்படையில் நாங்கள் போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானித்துள்ளோம். அரச துறையினருக்கு 2016 ஆம் ஆண்டு 10,000 ரூபாய் சம்பளம் அதிகரிக்கப்பட்டது. அதுவும் நான்கு சந்தர்ப்பங்களில் கட்டம் கட்டமாக அரசாங்கத்தால் வழங்கப்பட்டது. தற்போது ஏழு ஆண்டுகள் கடந்தும் எந்த விதமான சம்பள அதிகரிப்பும் இடம்பெறவில்லை. ஆனால் நாட்டில் விலைவாசியானது நூற்றுக்கு 300 முதல் 400 சதவீதத்தினால் பல்வேறு சந்தர்ப்பங்களில் அதிகரித்துள்ளன.
எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயு வலை மற்றும் மின்சார கட்டணம் என்பன அதிகரித்துள்ளன. அதே போன்று பஸ் கட்டணமும், பாடசாலை பஸ் கட்டணமும் அதிகரித்துள்ளன. உணவு பானங்களின் விலையும் தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றது.
பொருட்களின் விலை அதிகரிப்பு ஏற்றவாறு உழைக்கும் வர்க்கத்தின் சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும். ஆனால் அவ்வாறு இடம்பெறவில்லை. புள்ளி விபரவியல் திணைக்களத்தின் அறிக்கைகளின் அடிப்படையில் 2023 ஆம் ஆண்டு ஜூலை மாதமாகும் போது நான்கு பேர் கொண்ட குடும்பம் ஒன்றுக்கு மாதம் ஒன்றிற்கு ஒரு லட்சத்து 2421 ரூபா குறைந்தபட்ச செலவாக உள்ளது. அரசாங்கமும் அமைச்சரவையும் இதனை ஏற்றுக் கொள்கின்றது. ஆனால் சம்பளம் எங்கே இருக்கின்றது?
ஆட்சேர்க்கப்படும் பட்டதாரிகளுக்கான மாதாந்த சம்பளம் 35,000 ஆகவும், உயர்தரத்தின் பின்னர் அரச சேவைக்கு உள்ளீர்க்கப்படும் அரச ஊழியர்களின் சம்பளம் சுமார் 32 ஆயிரம் ரூபாவாக உள்ளது. எந்த ஒரு அரச ஊழியரும் தங்களுடைய முழுமையான சம்பளத்தை கையில் பெற முடியாது. சம்பளத்தை வங்கியில் இருந்து எடுக்கும் போது வங்கி கடன் அறவிடப்பட்டு எஞ்சிய தொகை வருகின்றது. அந்த பணத்தை எடுக்கும்போது உணவு தேவை, பிள்ளைகளுக்கான கல்வி மற்றும் மருத்துவ தேவைகளுக்காக, போக்குவரத்து செலவுகளுக்காக பார்க்கும்போது மாதாந்தம் உழைக்கும் வர்க்கத்தினர் பாரிய தொகையை செலவு செய்ய வேண்டியுள்ளது.
உழைக்கும் வர்க்கத்தினர் தொடர்ந்தும் இந்த நிலையில் முன்செல்ல முடியாது. எனவே உழைக்கும் வர்க்கத்தினருக்கு 20,000 ரூபாய் சம்பள உயர்வு அல்லது கொடுப்பனவு வேண்டுமென அரசாங்கத்திற்கும் ஜனாதிபதியிடமும் பிரதமரிடமும் நாங்கள் கோரிக்கை விடுக்கின்றோம். உழைக்கும் வர்க்கத்தினர் வாழ்வதற்கான நியாயமான சம்பளத்தை பெற்றுக் கொள்வதற்கான போராட்டத்தை நாங்கள் முன்னெடுக்க வேண்டும். தேசிய தொழிற்சங்க மத்தியில் இந்த போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுக்கும். - என தெரிவிக்கப்பட்டுள்ளது