தீராமல் தொடரும் தோட்டத் தொழிலாளர் 'ஆயிரம்' ரூபா சம்பள பிரச்சினை
கொட்டகலை டிரேட்டன் (மண்வெட்டி) தோட்டத்தின் ஸ்மோல் டிரேட்டன் (சின்ன மண்வெட்டி) பிரிவு தொழிலாளர்கள் நேற்று (03) நண்பகல் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுப்பட்டனர்.
அட்டன் - நுவரெலியா பிரதான வீதியில் கொட்டகலை ரொசிட்டா பிரதேசத்தில் பாதை ஓரத்தில் அமர்ந்து தமது கோரிக்கைகளை முன்வைத்தனர். இவர்கள் பதாதைகளை ஏந்தி இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
தாம் தின சம்பளத்திற்கு இதுவரை பறித்த 17 கிலோகிராம் தேயிலையை பறிக்க தயாராக உள்ளதாகவும் தமக்கு வாரத்தில் ஆறு நாட்கள் தொழில் வழங்கப்பட வேண்டும் என்று இவர்கள் கோரிக்கை விடுத்தே இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.
இதில் ஆர்ப்பாட்டத்தில் கலந்துக் கொண்டவர்கள் கருத்து தெரிவிக்கும் போது., தமக்கு ரூபா 1000 சம்பளம் கிடைத்து மூன்று மாதங்கள் ஆகியும் தாங்கள் இதுவரை இந்த ரூபா 1000 சம்பளத்தை நிம்மதியாக வாங்கவில்லை. பல மாத போராட்டங்களின் பின்னர் தாம் பெற்றுக் கொண்ட இந்த சம்பளத்தை தமக்கு நிம்மதியாக பெற்றுக் கொள்ள முடியாது பல்வேறு சிரமங்களை தாம் எதிர்நோக்க வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டுள்ளோம்.
ஆயிரம் ரூபா சம்பளம் வழங்குவதற்கு நிகராக தம்மை மேலதிகமாக கொழுந்து பறிக்க சொல்லி முகாமை நிர்ப்பந்திக்கிறது. இதுவரை தின சம்பளத்திற்கு 17 கிலோகிராம் தேயிலை கொழுந்து பறித்ததோம். தினமும் மேலதிகமாக 6 கிலோகிராம் தேயிலை பறிக்கவேண்டியுள்ளது. அதுவும் நிரை பார்க்கும் போது நீர் என்று கூறி பிடிக்கப்படுவதாகவும் இவர்கள் கேட்பது போல் தாம் தினமும் 26 கிலோகிராம் தேயிலை பறிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தேயிலை மலையில் கொழுந்து இல்லாத காரணத்தினால் முகாமை கூறும் அளவுக்கு தேயிலையை பறிப்பது சிரமமான விடயம்.
நாம் இவ்வாறு பணிபகிஷ்கரிப்பு மற்றும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் ஈடுப்பட்டுள்ள நிலையில் வெளி தொழிலாளர்களை பயன்படுத்தி கொழுந்து பறிக்கப்படுவதால் தாம் மண்ணை தான் சாப்பிடவேண்டி வரும் என்று தெரிவித்தனர்.
சுமார் இரண்டு மணித்தியால கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் பின்னர் இவர்கள் கலைந்து சென்றனர்.