பெருந்தோட்டத் தொழிலாளர்களின் தொழில் பிணக்குகளை தீர்க்க ILO இன் தலையீடு வேண்டும்

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் தொழில் பிணக்குகளை தீர்க்க ILO இன் தலையீடு வேண்டும்

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பளத்தை பெற்றுக்கொடுத்து அவர்களின் தொழில் பிணக்குகளை தீர்ப்பதற்கு சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனத்தின் (ILO) தலையீடு அவசியம் என என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

 
இதற்கான கோரிக்கை விடுத்து, சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனத்திற்கு கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ஹற்றனில் நேற்று (05) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் தெரிவித்துள்ளார்.
 
இதன்போது மேலும் தெரிவித்துள்ள அவர், 
 
ஆயிரம் ரூபா விவகாரத்தின் பின்னர் தோட்டப்பகுதிகளில் தொழிலாளர்கள் நிர்வாகத்தால் பெரும் நிர்ப்பந்தங்களுக்கு உள்ளாக்கப்படுகின்றனர். தொழில் சுமைகள் அதிகரிக்கப்பட்டு, வேலை நாட்கள் குறைக்கப்பட்டுள்ளன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தோட்டப்பகுதிகளில் தொழிலாளர்கள் இன்று போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
 
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு எவ்வித நிபந்தனைகளும் இன்றி, முன்பு செய்த வேலையின் அளவுக்கே நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா கிடைப்பதை உறுதிப்படுத்தப்பட வேண்டும், வேலை சுமை அதிகரிக்கப்படக்கூடாது, அவர்களின் தொழில்சார் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு அவசியம் என்பன உட்பட மேலும் சில கோரிக்கைகளை முன்வைத்து தொழில் ஆணையாளருக்கு நாம் கடிதம் எழுதினோம். 
 
தொழிலாளர்களின் பிரச்சினைகளைத் தீர்க்க ஒத்துழைப்பு வழங்குமாறு கம்பனிகளிடமும் கோரினோம். இரு தரப்புகளுமே எமது கோரிக்கைகளுக்கு செவிமடுக்கவில்லை. இது விடயம் தொடர்பில் அரசாங்கம் இனியும் காத்திரமான நடவடிக்கைகளை எடுக்குமா என தெரியவில்லை. 
 
எனவே, அரசு, கம்பனிகள் இணைந்து தீர்வுகளை வழங்கவேண்டும். இதற்கான தலையீடுகளை மேற்கொள்ளுமாறு சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனத்திற்கு தமிழ் முற்போக்கு கூட்டணியாக கடிதம் அனுப்பியுள்ளோம். சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனம் தலையிடவிட்டால், பெருந்தோட்டத் தொழிலாளர்களளின் நிலை மிகவும் மோசமாகும். என்று அவர் தெரிவித்துள்ளார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image