சர்வதேச தொழிலாளர் தாபனத்தின் சமவாயங்களான C189 மற்றும் C190 ஆகியவை தொடர்பில் ஊடகவியலாளர்களை தௌிவுபடுத்தும் செயலமர்வொன்று நேற்று (09) ஹட்டன் லா அடெம்ஸ் ஹோட்டலில் நடைபெற்றது.
பாலின அடிப்படையிலான வன்முறைகளில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிராக இடம்பெறும் வன்முறைகளுக்கு எதிரான 16 நாட்கள் உலக பிரசார செயற்பாட்டை முன்னிட்டு ப்ரொடெக்ட் தொழிற்சங்கத்தினால் இச்செயலமர்வு நடத்தப்பட்டது.
இச்செயலமர்வில் 16 ஊடக நிறுவனங்களைச் சேர்ந்த நுவரெலிய மாவட்ட ஊடகவியலாளர்கள் கலந்துகொண்டிருந்தனர். இதன்போது உலக தொழிலாளர்களுக்கும் கண்ணியமான தொழில் உரிமையை பெற்றுக்கொடுப்பதற்கான உலக தொழிலாளர் தாபனத்தின் C189 சமவாயம் மற்றும் தொழில் உலகில் இடம்பெறும் பாலிய அடிப்படையிலான அனைத்து வன்முறைகளுக்கும் முற்றுப்புள்ளி வைப்பதற்கான C190 சமவாயம் என்பவற்றை இலங்கையில் அங்கீகரிப்பதன் முக்கியத்துவம் குறித்து இதன்போது விளக்கமளிக்கப்பட்டது. மேலும் இலங்கையில் குறித்த சமவாயங்களை அங்கீகரிப்பதற்காக முன்னெடுக்கப்படும் முயற்சிகள் மற்றும் செயற்பாடுகள் குறித்தும் ஊடகவியலாளர்கள் தௌிவுபடுத்தப்பட்டனர்.
இதில் கலந்துகொண்ட ஊடகவியலாளர்கள் தமது கருத்துக்களை பகிர்ந்துகொண்டதுடன் எதிர்காலத்தில் தொழிற்சங்க செயற்பாடுகளுக்கான ஒத்துழைப்பையும் வழங்குவதாக உறுதியளித்தனர்.
அத்துடன் வீட்டுப் பணியாளர்களின் ஆரோக்கியமான சேவைக்கான தொழில் நிபந்தனைகளை வெற்றிக்கொள்வதற்கு தற்போது தொழிற்சட்டத்தில் உள்ளடக்கப்படவேண்டிய விடயங்கள் தொடர்பிலும் விளக்கமளிக்கப்பட்டது.
ப்ரொடெக் சங்கத்தின் பிரதான செயலாளர் கல்ப்ப மதுரங்கவினால் இத்தௌிவுபடுத்தல் செயலமர்வு நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.