உலகலாவிய ரீதியில் பரவிக் காணப்படும் பெண்கள் மீதான வன்முறைகள்!

உலகலாவிய ரீதியில் பரவிக் காணப்படும் பெண்கள் மீதான வன்முறைகள்!

உலகலாவிய ரீதியில் பெண்கள் மீதான வன்முறைகள் மற்றும் பாலியல் துன்புறுத்தல்கள் என்பது பரவி காணப்படுகின்றன. அபிவிருத்தி, மற்றும் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகள் என்ற வித்தியாசமின்றி இந்த வன்முறைகள் அதிகரித்துவருகின்றன என்கிறார் பேராதனை பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் எஸ்.விஜேசந்திரன்.

பல்வேறு ஆய்வுகளின் அடிப்படையில் அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளில் சுமார் 75 வீதமான பெண்கள் பாலியல் வன்முறை மற்றும் துன்புறுத்தல்களுக்கு உட்படுவதாகவும் அதே நேரம் அபிவிருத்தி அடைந்த நாடுகளில் 25 வீதமான பெண்களும் இத்தகைய பாதிப்புகளை எதிர்நோக்கியுள்ளனர்.

தொழில் புரியும் இடங்களில் இத்;தகைய பாலியல் வன்முறைகள் பல்வேறு வடிவங்களில் ஏற்படுவதாக அறியப்பட்டுகின்றது. உலகலாவிய ரீதியில் இந்த நிலைமை தொடர்பாக பல வருட காலமாக சர்வதேச தொழில் அமையம் ஐக்கிய நாடுகளின் மனித உரிமை தொடர்பான அமைப்புகள் என்பன இவ்விடயம் குறித்து ஆராயப்பட்டு வந்த நிலையில் 2019ஆம் ஆண்டு யூன் மாதம் சர்வதேச தொழிலாளர் அமையம் பாலியல் வன்முறை மற்றும் துன்புறுத்தலுக்கு எதிராக சி 190 என்ற சமவாயத்தை பிரகடனப்படுத்தியுள்ளது.

தொழில் புரியும் இடங்களில் பெண்கள் மற்றும் ஆண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல்கள் மற்றும் வன்முறைகளை ஒழிப்பதற்கான இச்சமவாயத்தை சர்வதேச தொழிலாளர் அமையத்தில் அங்கத்துவம் பெற்றுள்ள அனைத்து நாடுகளும் ஒரு வருட காலத்திற்குள் அதற்கான சட்ட ஏற்பாடுகளை செய்து அதனை கடைப்பிடிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் இலங்கையிலும் தொழில் செய்யும் இடங்களில் பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் மற்றும் துன்புறுத்தல்கள் பொதுவான விடயமாக காணப்படுகின்றது. இலங்கையில் தொழில் செய்யும் பெண்களில் 39.8 வீதமான பெண்கள் இந்த பாதிப்பினை எதிர்நோக்கியுள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

பெருந்தோட்ட துறையில் பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல்கள் மற்றும் வன்முறைகள் அதிகளவில் காணப்படுவதாகவும் ஆடைத்தொழிற்சாலைகள் மற்றும் கடைகளில் தொழில் செய்யும் பெண்கள் கட்டிட தொழிற்துறையில் தொழிற் புரியும் பெண்களும் இந்த கொடுமைக்கு ஆளாவதாகவம் இந்த ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதற்கு மேலதிகமாக அரச மற்றும் தனியார் தொழிற்துறைகளில் உயர்மட்ட பணிப்புரியும் பெண்களும் இந்த கொடுமைக்கு முகம் கொடுத்துள்ளதாகவும் அறியப்பட்டுள்ளது.

இந்நிலையில், சி190 சமவாயமானது தொழிற்புரியும் மற்றும் தொழிலுக்கு விண்ணப்பித்துள்ளவர்கள் தொழிலிருந்து ஓய்வு பெற்றவர்கள் முகங்கொடுக்கும் வன்முறை மற்றும் துன்புறுத்தல்களிலிருந்து அவர்களை பாதுகாக்கும் வகையில் சர்வதேச தொழில் தாபனத்தினால் கொண்டு வரப்பட்டுள்ளது.

இலங்கையில் தொழிற்துறைகள் தனியார் மயப்படடுத்தப்பட்டு வரும் நிலை மற்றும் பெருந்தோட்ட சார் தொழிற்துறையில் தொழிற்சங்க கட்டமைப்பு நீக்கப்பட்டு முகாமைத்துவத்தின் முழுமையான கட்டுப்பாடுகளின் கீழ் தொழிலாளர்கள் கொண்டு வரப்படுகின்ற நிலைமையானது இத்தகைய வன்முறைகள் அதிகரிக்க அதிகளவான வாய்ப்புகளை கொண்டுள்ளன. எனவே இந்தச் சமவாயம் எதிர்காலங்களில் தொழில் புரியும் இடங்களில் நடைபெறும் பாலியல் மற்றும் துன்புறுத்தல்களிலிருந்து தொழிலாளர்கள் தம்மை பாதுகாத்து கொள்ள உறுதுணையாக இருக்கும்.

ஐக்கிய நாடுகள் சபையினூடாக சர்வதேச தொழிலாளர் அமையம் ஏற்படுத்தியுள்ள சி 190 சமவாயமானது பெண்களை பாலியல் மற்றும் துன்புறுத்தல்களிலிருந்த முழுமையாக பாதுகாப்பதற்கான ஓர் சட்ட. ஏற்பாடாக காணப்படுவது வரவேற்த்தக்கதாகும்.

சர்வதேச ரீதியாக கொண்டுவரப்படும் இவ்வாறான சமவாயங்களை இலங்கை அரசாங்கம் நடைமுறைப்படுத்துவதில் அசமந்த போக்கை காட்டி வந்துள்ள நிலைமையில் சி190 சமவாயத்தை உடனடியாக இலங்கையில் நடைமுறைப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே எனது கோரிக்கையாகும்.

இந்த சி190 சமவாயத்தை இலங்கையில் உடன் அமுலுக்கு கொண்டு வரும் வகையில் பாராளுமன்ற பெண் உறுப்பினர்களுடன் பாராளுமன்ற ஆண் உறுப்பினர்களும் இனணந்து அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கின்றேன்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image