பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு எதிராக பிரசாரங்களை மேற்கொள்ளும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்ட 16 நாட்கள் உலக பிரசார நடவடிக்கை (16 days global campaign) இன்று (25) ஆரம்பமாகிறது.
பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் 1991ம் ஆண்டு முதலாவது மகளிருக்கான சர்வதேச தலைமைத்துவ நிறுவனம் இந்த 16 நாட்கள் பிரசார நடவடிக்கையை ஆரம்பித்தது. தற்போது 30 வருடங்கள் பூர்த்தியடைந்து இப்பிரசார செயற்பாட்டின் இவ்வாண்டுக்கான தொனிப்பொருள் "பெண் கொலை அல்லது "பால்நிலைசார் பெண் கொலை" என்பதாகும். முத்து விழா தொனிப்பொருளுக்கு மேலதிகமாக வீட்டு வன்முறைகள் மற்றும் தொழில் உலகில் பால்நிலைசார் வன்முறைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கிலான பல பிரசார செயற்பாடுகளும் முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக உலக தொழில் தாபனத்தின் 190வது சமவாயம் (Convention 190 - C190) ஐ முன்னிலைப்படுத்தி பரிந்துரை 206 (Recommendation 206 - R 206) இல் குறிப்பிட்ட விடயங்களை செயற்படுத்துவதும் இவ்வாண்டுக்கான 16 நாட்கள் பிரசார நடவடிக்கையின் நோக்கமாகும். இப்பிரசார செயற்பாட்டின் உத்தியோகப்பூர்வ வர்ணாக ஆரஞ்சு வர்ணம் தெரிவு செய்யப்பட்டுள்ளமை கவனத்திற்கொள்ளத்தக்கது.
இவ்வாண்டு இப்பிரசார செயற்பாட்டுக்கு பிள்ளையார் சுழி போடும் வகையில் இலங்கையில் கொழும்பு மாநகர சபையின் கட்டிடத்தில் அண்மையில் ஆரஞ்சு நிறத்தில் பெண்கள் உதவி இலக்கம் மற்றும் 'மிதுரு பியச' வின் உடனடி தொலைபேசி இலக்கம் என்பன ஔிரவிடப்பட்டிருந்தது. தமக்கு நெருங்கியவர்களினால் துன்புறுத்தப்படும் பெண்கள் குறித்து தேசிய கவனத்தை ஏற்படுத்துவதும் அவ்வாறான சூழ்நிலையில் தொடர்புகொண்டு உதவி பெறுவதற்கான வாய்ப்புண்டு என்பதை உணர்த்தி பெண்களை வலுப்படுத்துவதும் இதன் நோக்கமாகும்.
ஐநா மக்கள் தொகை நிதியம், கொழும்பு மாநகரசபை மற்றும் கனேடிய தூதரகம் ஆகியன இணைந்து இச்செயற்பாட்டை முன்னெடுத்திருந்தன. மேற்கூறப்பட்ட விழிப்புணர்வு செயற்பாட்டின் தொடர்ச்சியாக, மேலதிக செயற்பாடாக 16 நாட்கள் உலக பிரசார செயற்பாட்டின் தொனிப்பொருளுக்கு அமைய, தமது நெருங்கிய உறவுகளினால் இடம்பெறும் வன்முறைகள் உட்பட பால்நிலை அடிப்படையிலான அனைத்து வகையான வன்முறைகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கிலான விசேட செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படவுள்ளன.
இவ்விசேட செயற்பாடுகளாவன, இலங்கை பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகள் தொடர்பான தேசிய ஆய்வில் Women’s Wellbeing Survey’ (WWS) கிடைக்கப்பெற்ற தரவுகளுக்கமைய மும்மொழியினாலும் முன்னெடுக்கப்பட்டதேசிய ஊடக பிரசாரத்தின் இறுதிக்கட்டமாக அமைகின்றமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் 5 பெண்களில் ஒருவர் (20.4 %) தமது நெருங்கிய துணையினால் உடல் மற்றும் பால்நிலை சார் வன்முறைகளுக்கு முகங்கொடுக்க வேண்டிய துரதிர்ஷ்ட நிலை காணப்படுகின்றமை ஆய்வில் தெரிய வந்துள்ளது. எனினும் துணையினால் பாலியல் துன்புறுத்தலுக்குள்ளான பெண்களில் அரைவாசிபேர் (49.7) அவர்களுக்கான உதவிச் சேவையை பெற்றுக்கொள்ளவில்லை என்பது கவலைக்குரியது. அதேபோல் நெருங்கிய துணையினால் உடல்ரீதியான அல்லது பாலியல் ரீதியான துன்புறுத்தல்களுக்குள்ளான பெண்களில் மூன்றில் ஒரு பகுதியினர் (35.7%) தமக்கு தற்கொலை செய்யும் எண்ணத்தை தூண்டியது என்று ஆய்வில் தெரிவித்துள்ளனர். துன்புறுத்தல்கள், வன்முறைகள் காரணமாக பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் வாழ்வில் எத்ததைய அழுத்தங்கள் ஏற்படுகின்றன என்பதை விளக்குவதற்கு இது சிறந்த சான்றாக அமைகிறது. இவற்றை குறைப்பதற்கு அல்லது முற்றாக ஒழிப்பதற்கு பாதிக்கப்படும் பெண்கள் தமக்கான தேசிய உதவிச்சேவையை பெற்றுக்கொண்டு தம்மை வலுப்படுத்திக்கொள்ள வேண்டும். அந்த சேவையை அவர்களுக்கு வழங்குவதற்கு அவசியமான முறையான செயற்றிட்டமொன்றை உருவாக்குவதும் காலத்தின் தேவையாகும்.
இன்று (25) ஆரம்பமாகும் இந்த 16 நாட்கள் பிரசார செயற்பாடானது எதிர்வரும் டிசம்பர் மாதம் 10ம் திகதி மனித உரிமைகள் தினைத்துடன் நிறைவகின்றமை குறிப்பிடத்தக்கது.