கடந்த 2019ம் ஆண்டு பயிலுநர்களாக பல்நோக்கு அபிவிருத்திச் சேவைகள் செயலணி திணைக்களத்தில் இணைத்துக்கொள்ளப்பட்ட பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படாமை தொடர்பில் ஒன்றிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கம் திணைக்கள பணிப்பாளருக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளது.
ஏற்கனவே 2019ம் ஆண்டு பட்டதாரி பயிலுந்ர்களாக சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்ட பட்டதாரிகளை நிரந்தர சேவையில இணைத்துக்கொள்ளப்படும் நடவடிக்கை ஜனவரி மாதம் முன்னெடுக்கப்பட்டபோதிலும் குறித்த திணைக்களத்தில் பணியாற்றிய பயிலுநர்கள் பட்டதாரிகள் உள்வாங்கப்படவில்லையென இதன்போது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பட்டதாரி பயிலுநர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கும் நடவடிக்கை இம்மாதம் முதலாம் திகதி தொடக்கம் 9ம் திகதி வரை நடைபெற்றது. எனினும் குறித்த திணைக்களத்தில் பணியாற்றிய பயிலுநர் பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம் வழங்கும் பணிகள் முன்னெடுக்கப்படவில்லை. அத்துடன் இடமாற்றம் பெறுவதற்கான செயற்பாடுகள் உட்பட பல பிரச்சினைகள் காணப்படுகின்றன.
இவ்விடயம் தொடர்பில் அரச சேவைகள், மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சிசபைகள் அமைச்சிடம் வினவியபோது நிரந்தர நியமனம் வழங்குதல் உட்பட அனைத்து செயற்பாடுகளும் முன்னெடுக்குமாறு திணைக்களத்திற்கு தெரியப்படுத்தியுள்ளதாக அமைச்சில் தெரிவிக்கப்பட்டது.
எனவே, இவ்விடயம் தொடர்பில் கவனம் செலுத்தி பயிலுநர் பட்டதாரிகளுக்கு விரைவில் நிரந்தர நியமனம் வழங்குமாறு கோருவதாக அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.