பெண்களின் கல்வியே மலையக சமூகத்தின் மாற்றத்திற்கு வித்திடும் - சட்டத்தரணி ரனிதா ஞானராஜா

பெண்களின் கல்வியே மலையக சமூகத்தின் மாற்றத்திற்கு வித்திடும் - சட்டத்தரணி ரனிதா ஞானராஜா

(ஆர். சிவானுஜா)

அட்டன், நுவரெலியா தோட்ட பகுதிகளில் எனது கால்கள் பதியாத இடங்களே இல்லை என்று கூறும் அளவிற்கு நான் எல்லா இடங்களுக்கும் சென்று சட்ட ஆலோசனைகளையும் உதவிகளையும் வழங்கியுள்ளேன் என்று அமெரிக்காவினால் 'தைரியமிக்க பெண்'; என்ற விருது வழங்கி கௌரவிக்கப்பட்ட சட்டத்தரணி ரனிதா ஞானராஜா தெரிவித்தார்.

அட்டன்; சமூக நல நிறுவனத்தினால் நடாத்தப்பட்ட சர்வதேச மகளிர் தின நிகழ்வில் சிறப்பு அதிதியாக கலந்துகொண்டு கருத்து வௌியிட்டபோதே அவர் இதனை தெரிவித்தார்
இதன் போது, தைரியமிக்க பெண்களுக்கான அமெரிக்காவின் சர்வதேச விருதை (2021) பெற்றக் கொண்ட சட்டத்தரணி ரனிதா ஞானராஜா பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.
இவர் வலிந்து காணாமலாக்கப்பட்ட மற்றும் கட்டாய பயங்கரவாத் தடுப்பு சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு தனது குடும்பத்தினருடன் இணைந்து குரல் கொடுத்ததுடன் அவர்களுக்கான இலவச சட்ட உதவிகளையும் வழங்கியுள்ளார்.
அமெரிக்காவின் முதல் பெண்மனி ஜில் பைடன் மற்றும் இராஜாங்க செயலாளர் அண்டனி பிளிங்கனி ஆகியோரால் சூம் தொழிநுட்பம் ஊடாக இவருக்கு 'தைரியமிக்க பெண்' விருது வழங்கப்பட்டது.

சர்வதேச மகளிர் தின நிகழ்வில் இவர் தொடர்ந்து உரையாற்றம் போது நான் அட்டனில் அமைந்துன்ன 'மனித உரிமைகள் இல்லம்' என்ற நிறுவனத்தில் இளம் வயது சட்டத்தரணியாக எனது பயணத்தை ஆரம்பித்தேன். இங்கு பணியாற்றிய காலத்தில் மலையக பகுதி எங்கும் மனித உரிமைகள் தொடர்பான கருத்தரங்குகள் மற்றும் நிகழ்வுகளில் எனது முழுமையான பங்களிப்பை வழங்கியுள்ளேன்.
.
மேலும் பெருந்தோட்ட பகுதிகளில் கட்டாயப்படுத்தப்பட்ட கருத்தடை மற்றும் பெண்களுக்கான பொறுப்புகள் தொடர்பான ஆய்வு மேற்கொண்டதுடன் அந்த பெண்களுக்கான தெளிவினையும் பெற்றக் கொடுத்துள்ளேன். இவ்வாறு பல்வேறு பரிமாணங்களில் மலையக மக்களுடன் நான் பணியாற்றி உள்ளதுடன் தொடர்ந்தும் எனது பணி மலையகத்தில் இடம் பெறும் என்பதையும் கூறிக் கொள்ள விரும்புகின்றேன்.

மேலும் மலையக பெண்களே உங்களை நீங்கள் கல்வி ரீதியாக கட்டி எழுப்பி கொள்ளுங்கள். அன்னையார்களான நீங்கள் எதிர்கால சந்ததியின் கல்வியை கட்டி எழுப்ப வேண்டிய பொறுப்பை கொண்டுள்ளீர்கள் அதனை செவ்வனே செய்யுங்கள். கல்வி என்பது கட்டி எழுப்பப்டுமானால் குடும்ப வன்முறை தடுக்கப்படுவதுடன் சமூக அந்தஸ்து உயர்வு இயல்பாக நடைபெறும் என்பதால் மலையக பெண்களின் கல்வி என்பது மிக மிக அவசியமான ஒன்றாக கருதப்பட்டு அதற்கு தங்களின் முழுமையான கவனத்தை செலுத்துங்கள் என்று கேட்டுக் கொண்டார்.

R1

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image