கொரோனா தொற்று பரவியுள்ளபோதிலும் இலங்கையர்களுக்கு எல்லையற்ற வாய்ப்புகள் கொண்ட நாடாக ஐக்கிய அரபு இராச்சியம் காணப்படுகிறது என்று அமீரகத்திற்கான இலங்கை தூதுவர் தம்மிக்க மல்ராஜ் டி சில்வா தெரிவித்துள்ளார்.
கொரோனா பரவல் அதி உச்சத்தில் இருந்தபோது வேலையிழந்த பல இலங்கையர்கள் நாடு திரும்புவதற்கு பதிவு செய்தனர். எனினும் அவர்கள் அமீரகத்திலேயே தங்கவைக்கப்பட்டதுடன் புதிய வாய்ப்புகளையும் பெற்றுகொண்டனர். நாட்டை விட்டு சென்றவர்கள் மறுபடியும் புதிய வாய்ப்புகளை பெற மீள திரும்பியுள்ளனர். இது ஐக்கிய அமீரகத்தில் தொழிலாளர் சந்தை வலுவாக உள்ளதை காட்டுகிறது.
பதிவு செய்தவர்களில் 7000- 8000 பேர் வரை மட்டுமே இலங்கை திரும்பினர். நாட்டுக்கு திருப்பி அனுப்பும் பணிகள் கிட்டத்தட்ட நிறைவடைந்துள்ளது. நாடு திரும்ப பதிவு செய்தவர்களில் பலர் வேலையிழந்த அதே நிறுவனங்களில் மீள தொழில்வாய்ப்பினை பெற்றுக்கொண்டனர். சிலர் புதிய வாய்ப்புகளை பெற்றனர். நாட்டுக்கு சென்ற பலர் புதிய வாய்ப்புகளை தேடி மீண்டும் அமீரகம் வந்தனர். தூதரகம் அவர்களுக்கு புதிய தொழில்வாய்ப்புகள் குறித்து தௌிவுபடுத்தியதுடன் புதிய தொழில்வாய்ப்புகளை பெற உதவிகளையும் வழங்கியது. எமது மீளனுப்பும் நடவடிக்கைக்கு ஐக்கிய அரபு இராச்சிய அரசு ஒத்துழைப்பு வழங்கியது என்றும் இலங்கை தூதுவர் தெரிவித்துள்ளார்.