கட்டிடம் உடைந்து விழுந்ததில் கட்டாரில் இலங்கையர் பலி!

கட்டிடம் உடைந்து விழுந்ததில் கட்டாரில் இலங்கையர் பலி!

கட்டாரில் ஐந்து மாடி கட்டிடம் ஒன்று உடைந்து விழுந்ததில் இரு இலங்கையர்கள் உயிரிழந்துள்ளனர்.

கட்டாரின் அல் மன்சூரா பிரதேசத்தில் உள்ள கட்டிடமொன்றே இவ்வாறு உடைந்து விழுந்துள்ளது.

கடந்த 23ம் திகதி காலை 8,30 மணியளவில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் இவ்விபத்தில் ஒரு இலங்கையர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் காணாமல் போயுள்ளார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. காணாமல் போனவரும் உயிரிழந்திருக்கலாம் என்று இலங்கை வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார் என்று தினமின பத்திரிகை செய்தி வௌியிட்டுள்ளது.

இலங்கையைச் சேர்ந்த நிஸ்ஸங்க சில்வா (56) மற்றும் அப்துல் றசாக் ஜமில் (60) ஆகியோரே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளனர். அப்துல் றசாக் ஜமீலின் மகனும் கட்டாரில் பணியாற்றுகிறார் என்று தெரிவிக்கப்படுகிறது.

இவ்விலங்கையர்கள் தங்கியிருந்த கட்டிடமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்து தொடர்பில் விசாரணை மேற்கொள்ள கட்டாருக்கான இலங்கை தூதரகத்தின் தொழிலாளர் பிரிவு அதிகாரிகள் அவ்விடத்திற்கு சென்றுள்ளனர் என்றும் உடைந்து விழுந்த கட்டிடத்தில் இருந்து சுமார் 12 குடும்பங்களைச் சேரந்த அங்கத்தவர்கள் மீட்கப்பட்டுள்ளனர் என்றும் காயமடைந்த 9 பேர் சிகிச்சைக்காக ஹமாத் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் தூதரக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கட்டாரில் அதிக எண்ணிக்கையான வௌிநாட்டுத் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவ்வாண்டு மட்டும் சுமார் 13,042 இலங்கையர்கள் கட்டாரில் பணிக்காக சென்றுள்ளனர். கட்டாரில் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான இலங்கையர்கள் பணியாற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image