கட்டார் வாழ் இலங்கையர்கள் ஜனாதிபதிக்கு கடிதம்

கட்டார் வாழ் இலங்கையர்கள் ஜனாதிபதிக்கு கடிதம்

 கட்டாரில் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையர்கள் தம்மை தாய்நாட்டுக்கு மீள அழைக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

கொவிட் 19 தொற்றின் காரணமாக கட்டாரில் உள்ள இலங்கையர்கள் 1,20000 பேர் தாய்நாடு திரும்ப எதிர்பார்த்துள்ளனர் என ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுவரை 12,000 பேர் வரை நாடு திரும்புவதற்காக கட்டாருக்கான இலங்கை தூதரகத்தில் பதிவு செய்துள்ளனர். அவர்களில் தொழிலற்றவர்கள், வீஸா காலாவதியானவர்கள், வீஸா ரத்தானவர்கள், சுகயீனமானவர்கள் உள்ளடங்குகின்றனர்.

இதுதவிர, வர்த்தகர்கள், சுற்றுலாப்பயணிகள், குடும்ப வீஸாவூடாக சென்றவர்களும் உள்ளனர். குறுகிய கால சுற்றுலா வீஸா பெற்று கட்டார் விஜயம் செய்தவர்களும் தற்போது அங்கு பணியாற்றும் விடுமுறையில் இலங்கைக்கு வருகைத் தர எதிர்பார்த்துள்ளவர்களும் தூதரகத்தில் பதிவு செய்துள்ளனர்.

இவர்களைத் தவிர சுகயீனம் காரணமாக சில இலங்கையர்கள் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருவதாகவும் சிலர் தத்தமது சொந்த இடங்களிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் சிலர் நண்பர்கள் மற்றும் தொண்டர்களின் உதவியுடன் தமது அடிப்படை பொருளாதார சேவைகளை பூர்த்தி செய்துக்கொள்கின்றனர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியா, பங்களாதேஷ், பிலிப்பபைன்ஸ், நேபாளம் போன்ற நாடுகளில் இருந்து கட்டார் வருகைத் தந்தவர்களை சொந்த நாட்டுக்கு அழைப்பதற்கான நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அதுபோல தம்மையும் தாய்நாட்டுக்கு அழைப்பதற்கான நடவடிக்கை எடுக்குமாறும் பற்றாக்குறைகள் காரணமாக தாம் பல்வேறு இன்னல்களுக்கு முகங்கொடுத்து வருவதாகவும் ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image