இலங்கை உட்பட 7 நாடுகளுக்கான தடையை நீடித்த பிலிப்பைன்ஸ்
இலங்கை உட்பட 7 நாடுகளில் இருந்து பயணிகள் தமது நாட்டுக்குள் நுழைவதற்கான தடையை எதிர்வரும் ஜூன் 30ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக பிலிப்பைன்ஸ் ஜனாதிபதியின் ஊடகப் பேச்சாளர் ஹாரி ரோக் நேற்று (16) அறிவித்துள்ளார்.
நாட்டில் கொவிட் 19 தொற்று பரவலை தடுப்பதற்காக இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், நேபாளம், ஓமான் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய நாடுகளில் இருந்து பயணிகள் உள்நுழைய விதிக்கப்பட்டிருந்த தடையை நீடிப்பதற்கான அனுமதியை பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ரொட்ரிகோ டூர்ட்டே வழங்கியுள்ளதாக ஊடகப் பேச்சாளர் வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிலிப்பைன்ஸின் கொவிட் 19 தொற்று பரவலை தடுக்கும் முகமாக கடந்த ஏப்ரல் மாதம் 29ம் திகதி இந்திய பயணிகள் உள்நுழைவதற்கான தடை விதிக்கப்பட்டது. தொடர்ந்து கடந்த மே மாதம் 7ம் திகதி ஏனைய நாடுகளான இலங்கை, பங்களாதேஷ், நேபாளம், பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு தடை விதிக்கப்பட்டது. நாடு திரும்பிய பிலிப்பைன்ஸ் புலம்பெயர் தொழிலாளர்களிடம் நடத்தப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் இந்தியாவில் பரவிய கொவிட் தொற்றிய கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளவர்கள் அடையாளங்காணப்பட்டதையடுத்து மே மாதம் 15ம் திகதியளவில் ஓமான் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய நாடுகளின் பயணிகள் உள்நுழைவதற்கான தடை விதிக்கப்பட்டது.
இதுவரை பிலிப்பைன்ஸ் நாட்டில் 1,322,053 தொற்றாளர்கள் அடையாளங்காணப்பட்டுள்ளதுடன் இறப்பு 22,845 ஆக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Bernama.com