இலங்கையர்களை கடலில் தவிக்க விட்டு தப்பி சென்ற 'லேடி ஆர் 3 கப்பல் கேப்டன்
'லேடி ஆர்3' கப்பலில் இருந்து மீட்கப்பட்ட 303 இலங்கையர்களில் கப்பலின் கேப்டன் இல்லை என வியட்நாம் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கப்பலில் ஏற்பட்ட பழுது காரணமாக கப்பல் கடலில் மிதக்கும் வேளையில் கப்டன் அங்கிருந்து சென்றுவிட்டதாகவும், அவர் திரும்பி வரவில்லை என்றும் மீட்கப்பட்ட இலங்கையர்கள் தெரிவித்ததாக வியட்நாம் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இதனை வியட்நாம் அதிகாரிகள் உறுதி செய்துள்ள நிலையில், கேப்டன் தொடர்பான விசாரணையை ஆரம்பிக்கவுள்ளதாக வியட்நாம் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
வியட்நாம் மற்றும் பிலிப்பைன்சுக்கு இடையிலான கடலில் இயந்திரக் கோளாறு காரணமாக மூழ்கும் நிலையில் இருந்த 'லேடி ஆர்3' கப்பலில் பயணித்த 303 இலங்கையர்கள் அண்மையில் மீட்கப்பட்டனர்.
வியட்நாம், சிங்கப்பூர் மற்றும் மலேசியா அரசாங்கங்களை தொடர்பு கொண்டு குறித்த கப்பல் தொடர்பான தகவல்களை பரிமாறிக்கொண்டதுடன், குறித்த கப்பலுக்கு அருகில் பயணித்த ஜப்பானிய கப்பல் மூலம் இலங்கையர்கள் மீட்கப்பட்டனர்.
தொழிநுட்பக் கோளாறு ஏற்பட்ட போது கப்பலில் இருந்த ஊழியர்கள் தப்பிச் சென்றுள்ளதாக வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் திரு.தாரக பாலசூரிய தெரிவித்துள்ளார்.
newsfirst