மின்சார வாகன இறக்குமதிக்கான வர்த்தமானி அறிவித்தலுக்கு பாராளுமன்ற அனுமதி கோர தீர்மானம்!

மின்சார வாகன இறக்குமதிக்கான வர்த்தமானி அறிவித்தலுக்கு பாராளுமன்ற அனுமதி கோர தீர்மானம்!

நாட்டிற்கு அந்நிய செலாவணி அனுப்பும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு மின்சார வாகனத்தை இறக்குமதி செய்ய அனுமதிக்கும் வகையில் செப்டெம்பர் மாதம் வெளியிடப்பட்ட வர்த்தமானிக்கு இலங்கை பாராளுமன்றத்தின் அனுமதியை கோரவுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

செப்டெம்பர் 23 ஆம் திகதி வெளியிடப்பட்ட இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) ஒழுங்குமுறை வர்த்தமானியின் சட்டபூர்வமான தன்மை குறித்து புலம்பெயர்ந்தோர் கேள்வி எழுப்பியுள்ள​மையினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பிக்கப்படவுள்ளது என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பல தசாப்தங்களின் பின்னர் இலங்கை மிக மோசமான அந்நிய செலாவணி நெருக்கடியை சந்தித்து வருகிறது. இந்நிலையில், வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார ஓகஸ்ட் 31 அன்று புலம்பெயர் தொழிலாளர்கள் முறையான வழிகளில் பணம் அனுப்புவதை ஊக்குவிக்கும் மின்சார வாகனத்தை இறக்குமதி செய்ய அனுமதிப்பது குறித்த சுற்றரிக்கையை வௌியிட்டார்.

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு அதிகபட்சமாக 65,000 அமெரிக்க டொலர்கள் வரையிலான வாகனத்தை இறக்குமதி செய்ய அனுமதிக்கும் அமைச்சர் நாணயக்காரவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியதை அடுத்து இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

இத்தீர்மானத்திற்கமைவாக மே மாதம் முதலாம் திகதி தொடக்கம் 2023 ஏப்ரல் மாதம் 30ம் திகதி வரை 3,000 டொலருக்கு மேல் மற்றும் 20,000 டொலருக்கும் குறைவாக அனுப்பும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், அனுப்பப்படும் பணத்தில் பாதிக்கு மின்சார இருசக்கர வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

"ஒரு சிலர் ஏற்கனவே தங்கள் பணத்தை உத்தியோகபூர்வ வழிகளில் அனுப்பிய பின்னர் வாகனங்களை இறக்குமதி செய்திருப்பதை நாங்கள் அவதானித்துள்ளோம்" என்று குணவர்தன கூறினார்.

"இதற்கிடையில் சிலர் இன்னும் இறக்குமதி செய்யலாமா வேண்டாமா மற்றும் விதிமுறைகள் அதிகாரப்பூர்வமாக உள்ளதா என்று யோசித்துக்கொண்டிருக்கிறார்கள்."

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை நீக்கும் வகையில், வர்த்தமானியின் ஒப்புதலுக்காக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றார்.

அதிக வெளிநாட்டுப் பணத்தைப் பெறுவதற்கும், எரிபொருள் செலவைக் குறைப்பதற்கும், நாட்டில் மின்சார வாகனங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கும் இத்தீர்மானம் எடுக்கப்பட்டதாக அமைச்சரவைப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image