வௌிநாட்டு வேலைவாய்ப்பைப் பெற்றுத்தருவதாக கூறி ஆட்கடத்தல் நடவடிக்கையில் ஈடுபடுவோருக்கு எதிராக கடுமையான சட்டநடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக என இலங்கையின் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம், குடிவரவு - குடியகல்வு திணைக்களம் மற்றும் விமான நிலையம் ஆகியன இரகசிய பொலிஸாருடன் இணைந்து இந்த நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளதாக கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக பலரும் புலம்பெயர்ந்து தொழில் வாய்ப்பினை நாடி செல்வதில் அதிகம் ஆர்வம் செலுத்தி வருகின்றனர். சிலர் தமது சூழ்நிலைகளைக் கருத்திற்கொண்டு வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்யாமலும் செல்கின்றனர். பலர் சுற்றுலா வீசாவினை பயன்படுத்தியும் வெளிநாடுகளுக்கு தொழில்வாய்ப்பினை நாடி செல்கின்றனர். இதனால் பல்வேறு சிக்கல்களில் மக்கள் சிக்கிக்கொள்கின்றனர். குறிப்பாக பெண்கள் பாரிய அச்சுறுத்தல்களை எதிர்நோக்கி வருகின்றனர். இந்நிலையில் இருந்து மக்களை பாதுகாக்கும் நோக்கில், இலங்கை வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம், குடிவரவு குடிகல்வு திணைக்களம் மற்றும் விமானநிலையம் என்பன இணைந்து சட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளன.
புலம்பெயர் தொழிலாளர்கள் நாடு திரும்பும் போதும் மீண்டும் செல்லும் போதும் சிறப்பு வசதிகளை எதிர்வரும் செப்டெம்பர் முதலாம் திகதி தொடக்கம் விமானநிலையங்களில் தனிப்பிரிவொன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளது. வௌிநாட்டு வேலைவாய்ப்பை பெற்றுத் தருவதாக ஏமாற்றும் போலி முகவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவ்வாறனவர்கள் குறித்து உரிய அதிகாரிகளிடம் முறையிடுமாறும் அமைச்சர் கோரினார்.