போலி வௌிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையம் சுற்றி வளைப்பு
கொழும்பில் சென்ரல் பிளாசா கட்டிடத்தொகுதியில் அனுமதிப்பத்திரமின்றி இயங்கி வந்த போலி வௌிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையமொன்று நேற்று (03) சுற்றி வளைக்கப்பட்டதுடன் அதன் உரிமையாளர் வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இச்சுற்றி வளைப்பின் போது 16 வயது சிறுமி ஒருவர் பணிக்கமர்த்தப்பட்டிருந்ததுடன் மருதானை பொலிஸ் மகளிர் மற்றும் சிறுவர் பிரிவு அதிகாரிகள் அவ்விடத்திற்கு அழைக்கப்பட்டு குறித்த சிறுமி ஒப்படைக்கப்பட்டார்.
இதன்போது 50 கடவுச்சீட்டுக்கள், போலியாக தயாரிக்கப்பட்ட கிராமசேவகர் சான்றிதழ்கள் மற்றும் சத்தியகடதாசி என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளன.
குறித்த சந்தேகநபர் மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டு பின்னர் 2 இலட்சம் ரூபா சரீர பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். அவர் மீண்டும் எதிர்வரும் 25ம் திகதி நீதிமன்றில் ஆஜராகவேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இப்போலி முகவர் நிலையத்துடன் தொடர்புபட்ட பிரதான சந்தேகநபரை தேடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது