ஜப்பான் குடிவரவு அலுவலக அதிகாரிகளுக்கு எதிராக முறைப்பாடு
கடந்த மார்ச் மாதம் ஜப்பான் குடிவரவு மையமொன்றில் தங்க வைக்கப்பட்டிருந்தநிலையில் இலங்கை பெண் உயிரிழந்தமைக்கு கவனயீனமே காரணம் என்று அம்மையத்தின் உயரதிகாரிகளுக்கு எதிராக பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.
மத்திய ஜப்பானின் நாகோயா பிராந்திய குடிவரவு சேவைகள் அலுவலகத்தினால் நடத்தப்பட்ட தடுப்புநிலையத்தின் தமது சகோதரியான 33 வயது ரத்நாயக்க லியனகே விஷ்மா சந்தமாலிக்கு உரிய சிகிச்சை வழங்க தவறியமையினாலேயே அவர் உயிரிழந்துள்ளார் என்று அவருடைய இரு சகோதரிகளான பூர்ணிமா மற்றும் வயோமி ஆகியோர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
கடந்த 9ம் திகதி செவ்வாய்க்கிழமை நகோயா மாவட்டத்தின அரச வழக்கறிஞர் அலுவலகத்தில் குற்றவியல் முறைப்பாட்டை பதிவு செய்யவுள்ளதாக பதிவு செய்வதற்கு முன்னர் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது அவருடைய சகோதரி பூர்ணிமா கருத்து வௌியிட்டிருந்தார்.
குறித்த குடிவரவு அலுவலக தடுப்பு முகாமின் உயரதிகாரி மற்றும் பிரதி அதிகாரி ஆகியோருக்கு எதிராக இம்முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. தடுப்பில் உள்ள ஒருவர் சுகயீனமுற்றால் அவருக்கு உரிய சிகிச்சை வழங்க நடவடிக்கை எடுப்பது உயரதிகாரிகளின் கடமை என்றும் சகோரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
கடந்த 2017ம் ஆண்டு ஜப்பான் நாட்டுக்கு கற்றலுக்கான வீசாவுடன் சென்றுள்ளார். அவருடைய வீசா காலாவதியாகியிருந்த நிலையில் கடந்த ஓகஸ்ட் மாதம் 2020ம் ஆண்டு தடுப்பு முகாமில் வைக்கப்பட்டுள்ளார். அங்கு ஜனவரி மாத நடுப்பகுதியில் வயிற்று நோ உட்பட பல நோய் அறிகுறிகள் ஏற்பட்டிருந்த நிலையில் மார்ச் மாதம் 6ம் திகதி உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.