மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து இலங்கை திரும்ப விதிக்கப்பட்ட தடை நீக்கம்!
சவுதி அரேபியா உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளுக்கு, கடந்த 14 நாட்களுக்கு பயணித்தவர்கள், இலங்கைக்கு வருவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை, இன்று முதல் சில நிபந்தனைகளின் அடிப்படையில் நீக்கப்பட்டுள்ளதாக சிவில் விமான போக்குவரத்து சேவைகள் அதிகார சபை அறிவித்துள்ளது.
ஜுலை மாதம் முதலாம் திகதி முதல் 14 ஆம் திகதி வரை குறித்த தற்காலிக தடை அமுலில் இருக்கும் என அதிகார சபை நேற்று (29) அறிவித்திருந்தது.
இந்த நிலையில், குறித்த தடை இன்று முதல் நீக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு இராச்சியம், கட்டார், குவைத், ஓமான் மற்றும் பஹ்ரேன் முதலான நாடுகளுக்கு, கடந்த 14 நாட்களுக்குள் பயணித்தவர்கள், இலங்கை வருவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை, நிபந்தனைகளுடன் நீக்கப்பட்டுள்ளதாக அதிகார சபை அறிவித்துள்ளது.
அதற்கமைய அண்டிஜன் பரிசோதனை முடிவுகள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டது. அரச அல்லது அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் மூலம், பி.சி.ஆர் பரிசோதனை அறிக்கை பெற்றிருக்க வேண்டும் என்பதுடன், அதற்கமைவான QR அல்லது Bar குறியீடு குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். குறித்த நாடுகளில் இருந்து இலங்கைக்கு வரும் அனைத்து பயணிகளிடமும், தங்களுக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகவில்லை என்பதை உறுதிப்படுத்துவதற்கான பி.சி.ஆர் பரிசோதனை அறிக்கை இருக்க வேண்டும். பயணி ஒருவரினால் சமர்ப்பிக்கப்படும் பரிசோதனை அறிக்கையின் உண்மைத் தன்மை குறித்து, விமான சேவை நிறுவனம் திருப்தியடைய வேண்டும். என்றும் சிவில் விமான போக்குவரத்து சேவைகள் அதிகார சபையினால் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.