புலம்பெயர் தொழிலாளர் உரிமையை பாதுகாக்க புரிந்துணர்வு ஒப்பந்தம்
ஐக்கிய அரபு இராச்சியத்துடன தொழிலாளர் உரிமைகளை பாதுகாப்பதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட நடவடிக்கை முன்னெடுக்க தொழில் அமைச்சு தீர்மானித்துள்ளது.
பிலிப்பைன்ஸை தொடர்ந்து இலங்கை புலம்பெயர் தொழிலாளர்களின் உரிமைகளை பாதுகாக்கும் வகையில் இவ்வொப்பந்தத்தில் கைச்சாத்திட இலங்கை எண்ணியுள்ளது.
இவ்வாறான ஒப்பந்தமொன்றில் இரு அரசாங்கங்களும் கைச்சாத்திடுவதற்காக ஐக்கிய அரபு இராச்சியத்தின் கவனத்தை கொண்டு வருவதற்கான பணிகளை முன்னெடுக்குமாறுக எயணஎ ஏற்கனவே வௌிவிவகார அமைச்சு மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கான தூதரகம் என்பவற்றிற்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது. அது தொடர்பான பணிகளை ஏற்கனவே வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் ஆரம்பித்துள்ளது என்று தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.
இவ்வாண்டு மார்ச் மாதம் 2ம் திகதி பிலிப்பைன்சஸ் அரசுக்கும் ஐக்கிய அரபு இராச்சிய அரசுக்கும் இடையில் இவ்வாறான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. இவ்வொப்பந்தமானது அந்நாட்டில் வீட்டுப்பணிசார்ந்து துறையில் பணியாற்றும் பிலிப்பைன்ஸ் தொழிலாளர்களுக்கு கூடுதல் பாதுகாப்பை ஏற்படுத்திக்கொடுத்துள்ளது.
குறிப்பாக, இரு நாடுகளுக்கிடையில் கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள பிலிப்பைன்ஸ் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கான அடிப்படை வேலை நிலைமைகளை உறுதிப்படுத்துகிறது, இதில் ஒவ்வொரு இரவும் குறைந்தபட்சம் எட்டு தொடர்ச்சியான மணிநேர தூக்கத்திற்கான உரிமை, வீட்டுத் தொழிலாளர்கள் அவர்களது கடவுச்சீட்டுக்களை வைத்திருக்கும் உரிமை அல்லது அடையாள ஆவணங்கள் அவர்களுடைய பாதுகாப்பில் வைத்திருக்கும் உரிமை. கடந்த 2014ம் ஆண்டு பிலிப்பைன் பெண்களை வீட்டுத்துறைசார் பணிகளுக்காக புலம்பெயர்ந்து செல்வதற்கு பிலிப்பைன்ஸ் விதித்திருந்த தடை இவ்வொப்பந்தின் பின்னர் நிறைவுக்கு வந்தது.
இலங்கையின் புலம்பெயர்ந்த தொழிலாளர்களில் 80 சதவீதத்திற்கும் அதிகமானோர் சவுதி அரேபியா, கட்டார், குவைத் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம ஆகிய நாடுகளில் பணியாற்றுகின்றனர் என்று தொழில் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
இதேவேளை, தற்போதைய கொரோனா தொற்று பரவல் காரணமாக நாடு திரும்ப விரும்பும் இலங்கை புலம்பெயர் தொழிலாளர்கள் நாட்டுக்கு அழைத்து வரப்படுவார்கள் என்று தெரிவித்த அமைச்சர் அதற்காக முதற்கட்டமாக 8 தனிமைப்படுத்தல் நிலையங்களை அமைக்க கொவிட் 19 தடுப்புக்குழு இணங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இன்னும் 20,000 - 30,000 வரையான புலமபெயர் தொழிலாளர்கள் இலங்கை வர எதிர்பார்த்துள்ளனர் என்று அமைச்சுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.