வௌிநாடுகளில் இருந்து இலங்கை வருவோருக்கான புதிய பாதுகாப்பு நடைமுறைகளை சுகாதார அமைச்சு வௌியிட்டுள்ளது.
அதற்கமைய, அனுமதிக்கப்பட்ட கொவிட் தடுப்பூசிகளை பெற்றுக்கொண்ட ஒருவர் 14 நாட்களின் பின்னர் உரிய பயண அனுமதிகளை பெற்ற பின்னரே நாட்டுக்கு வர முடியும். அவ்வாறு வருபவர் நாட்டுக்கு வருகைத் தந்த முதலாவது நாள் தனியார் விடுதியில் தங்க வைக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்ட பரிசோதனை நிலையத்தில் பிசிஆர் பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும். அதன் பின்னர் அந்நபர் தொடர்ந்து அத்தனியார் விடுதியில் 7 நாட்கள் தங்க வைக்கப்படுவார்.
அவ்வாறு அவர் தங்கியிருக்கும் 7 நாட்களுக்கு சுகாதார பாதுகாப்பு வழங்கப்பட்ட பகுதிகளுக்கு செல்ல அனுமதியிருந்தபோதிலும் எங்கும் தங்க அனுமதிக்கப்படுவதில்லை. 7வது நாள் மீண்டும் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு தொற்றில்லையென உறுதிப்படுத்தப்படுவாராயின் தனிமைப்படுத்தலில் இருந்து விலக்கப்படுவார்.
இதேவேளை, தடுப்பூசி பெறாத நிலையில் நாடு திரும்புபவர்கள் 14 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்படுவார்கள். இவர்களுக்கு முதலாவது நாள், 11வது நாள் மற்றும் 14வது நாள் என்பவற்றில் மேற்கொள்ளப்படும் பிசிஆர் பரிசோதனையில் தொற்றில்லையென உறுதிப்படுத்தப்பட்டால் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படுவார்கள். இந்நிலையில் சுற்றுலாப்பயணியொருவர் 3 தினங்களுக்கு மாத்திரமே நாட்டில் தங்கியிருப்பாயின் வௌியில் செல்வதாயிருந்தால் மட்டுமே பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படவேண்டும் என்றும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.