நாடு திரும்பும் புலம்பெயர் தொழிலாளரகளுக்கான தனிமைப்படுத்தல் நிலைம்
வௌிநாடுகளில் இருந்து தாயகம் திரும்பும் இலங்கை தொழிலாளர்களை தனிமைப்படுத்துவதற்காக நிலையமொன்றை நிறுவுவதற்கு வௌிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
நாடளாவிய ரீதியில் அவ்வாறான 100-க்கும் அதிகமான நிலையங்கள் காணப்படுவதாக அமைச்சின் செயலாளர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார்.
ஹோட்டல்கள், அரச நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களும் தனிமைப்படுத்தல் நிலையங்களாக இயங்குவதாக அவர் குறிப்பிட்டார்.
குறித்த நிலையங்கள் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்கு உகந்ததா என்பது தொடர்பில் தீர்மானிப்பதற்கான அனைத்து தகவல்களும் சுகாதார அமைச்சின் செயலாளர் மற்றும் COVID-19 ஒழிப்பு தேசிய செயலணியின் தலைவர் இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா ஆகியோரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக வௌிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் செயலாளர் கூறினார்.
இது தொடர்பில் தீர்மானிக்கப்பட்டதன் பின்னர் அனுமதியளிக்கப்பட்ட இடங்களை தனிமைப்படுத்தல் நிலையங்களாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
தொழில் நிமித்தம் வௌிநாடுகளில் உள்ள 21 ஆயிரத்திற்கும் அதிகமான இலங்கையர்கள் நாடு திரும்பும் எதிர்ப்பார்ப்பில் தம்மை பதிவு செய்துள்ளதாக வௌிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கிணங்க, குவைத், கட்டார் மற்றும் துபாய் உள்ளிட்ட 14 நாடுகளிலுள்ள இலங்கை தொழிலாளர்கள் நாடு திரும்பவுள்ளனர்.
நியுஸ் பர்ஸ்ட்