புலம்பெயர் தொழிலாளர் தனிமைப்படுத்தல்களுக்காக 14 ஹோட்டல்கள்- பணியகம்

புலம்பெயர் தொழிலாளர் தனிமைப்படுத்தல்களுக்காக 14 ஹோட்டல்கள்- பணியகம்

நாடு திரும்பும் புலம்பெயர் தொழிலாளர்களை தனிமைப்படுத்துவதற்கு நாடு முழுவதும் 14 ஹோட்டல்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.

தனிமைப்படுத்தல் விதிமுறைகளில் தளர்த்தல்களை கடந்த வாரம் அரசாங்கம் மேற்கொண்டது. அதற்கமைய, 14 நாட்களாகவிருந்த தனிமைப்படுத்தல் காலம் 7 ஆக குறைக்கப்பட்டது.

3 மாதகக்காலப்பகுதியில் வௌிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர்களுக்கான தனிமைப்படுத்தல் கட்டணங்களை தள்ளுபடி செய்ய தீர்மானித்துள்ளதாகவும் பணியகத்தின் பேச்சாளர் மங்கள ரந்தெனிய ஆங்கில நாளிதழான டெய்லி நியுஸிற்கு தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னர் நாடு திரும்பிய இலங்கை புலம்பெயர் தொழிலாளர்கள் அவர்களுக்கான விமானக்கட்டணம் மற்றும் தனிமைப்படுத்தல் என்பவற்றுக்கான கட்டணங்களை அவர்களே செலுத்த வேண்டியிருந்தது. சுமார் 400,000 ரூபாவை அவர்கள் செலவிடவேண்டியிருந்தது. இனி அவர்கள் அவர்களுடைய பயணக்கட்டணத்தை மாத்திரமே செலவிடவேண்டும். ஹோட்டல் கட்டணங்களை அரசாங்கம் கவனித்துக்கொள்ளும்.

தனிமைப்படுத்தல் செயற்பாடுகளுக்காக 14 மூன்று நட்சத்திர ஹோட்டல்களை பணியகம் தெரிவு செய்துள்ளது. ஒரு தடவைக்கு 800 பேர் அழைத்து வரப்படுவார்கள். ஹோட்டல்களில் இடப்பற்றாக்குறை ஏற்படின் இராணுவத்தினரால் பராமரிக்கப்படும் தனிமைப்படுத்தல் நிலையங்களில் தனிமைப்படுத்தப்படுவார்கள்.

கட்டார், குவைத், ஜோர்தான், பஹ்ரைன், லெபனான் மற்றும் சவுதி அரேபியா ஆகிய நாடுகளில் இருந்தே பெரும்பாலான இலங்கையர்கள் நாடு திரும்ப எதிர்பார்த்துள்ளனர். 7 நாட்களுக்கான தனிமைப்படுத்தல் கட்டணங்களை செலுத்த முடியாமை தொடர்பில் பல புலம்பெயர் தொழிலாளர்கள் முறைப்பாடு செய்ததையடுத்து பிரதமரின் ஆலோசனைக்கமைய வௌிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் பிரியங்கர ஜயரத்னவின் முயற்சியில் தற்போது இலவச தனிமைப்படுத்தல் வசதிகள் சாத்தியப்பட்டுள்ளன.

இலங்கை வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்து வௌிநாடு சென்றுள்ள இலங்கையர்களே இவ்வசதிகளை பெறுவர். தம்மால் தனிமைப்படுத்தல் கட்டணங்களை செலுத்த முடியாது என்று அந்தந்த நாடுகளில் உள்ள தூதரகங்களில் உறுதிப்படுத்தி கையெழத்து பெற்றிருக்க வேண்டும் என்றும் மங்கள ரந்தெனிய சுட்டிக்காட்டியுள்ளார்.

கொவிட் 19 தொற்று காலப்பகுதியில் வௌிநாடுகளில் இருந்து சுமார் 110,000 புலம்பெயர் தொழிலாளர்கள் நாடு திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

டெய்லி நியுஸ்

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image