எரிபொருள் QR குறியீடு மற்றும் வாகன இறுதி இலக்க முறைமை குறித்த புதிய அறிவிப்பு

எரிபொருள் QR குறியீடு மற்றும் வாகன இறுதி இலக்க முறைமை குறித்த புதிய அறிவிப்பு

எரிபொருளை பெற்றுக்கொள்வதற்கான தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரமான QR குறியீட்டு முறைமை நாளை (26) முதல் அமுலாகும் என அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

அத்துடன், வாகன இலக்கத்தகட்டின் இறுதி இலக்கத்துக்கமைய எரிபொருள் வழங்கும் முறைமை எதிர்வரும் ஆகஸ்ட் முதலாம் திகதிவரை தொடரும் என்றும் அதன் பிறகு முழுமையாக QR குறியீட்டு முறைமை மாத்திரம் அமுலாகும் என அவர் மேலும் தெரிவித்தார்.

முன்னதாக QR முறைமையில் எரிபொருள் வழங்கும் நடவடிக்கைகள் மேலும் சில நாட்களுக்கு தாமதமாகும் என தகவல் மற்றும் தொடர்பாடல் தொழிநுட்ப நிறுவனம் தெரிவித்தது. தொழிநுட்ப ரீதியான சில விடயங்கள் பூர்த்தி செய்ய வேண்டியுள்ளமை இதற்கான பிரதான காரணமாகும் என அந்த நிறுவனம் தெரிவித்தது.

இன்று முதல் தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர முறைமை நாடு முழுவதும் அமுலாகும் என வலுசக்தி அமைச்சர் முன்னதாக தெரிவித்திருந்தார். எவ்வாறாயினும், QR முறைமை தாமதமாவதன் காரணமாக எதிர்வரும் நாட்களுக்கு வாகன இலக்க தகடுகளின் இறுதி இலக்கத்தின் அடிப்படையில் எரிபொருள் விநியோகம் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையிலேயே, நாளை முதல் QR குறியீட்டு முறைமை அமுலாகும் என அமைச்சர் கஞ்சன விஜேசேகர, ட்விட்டர் பதிவொன்றின் ஊடாக அறிவித்துள்ளார். இதேவேளை, இன்றைய தினம் வாகன இலக்கத்தகட்டின் 6,7,8,9 ஆகிய இறுதி இலக்கங்களை கொண்ட வாகனங்களுக்கு எரிபொருள் விநியோகிக்கப்படுகிறது. இதேவேளை, வாகன இறுதி இலக்கத்திற்கு அமைய, எரிபொருள் விநியோகம் இடம்பெறுகின்ற போதிலும் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்பாக நீண்ட வரிசையில் வாகனங்கள் தரித்து நிற்பதாக எமது செய்தியாளர்கள் தெரிவித்தனர்.

சூரியன் செய்திகள்

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image