பெருந்தோட்டத் தொழிலாளர் விடயத்தில் தலையிடுமாறு ILO விடம் கோரிக்கை
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சமூக மற்றும் பொருளாதார பாதுகாப்புக்கு சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனத்தின் (ILO) பங்களிப்பும் அவசியம். அதற்கான உரிய தலையீடுகளை மேற்கொள்ளுமாறு ஐ.எல்.ஓவிடம் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கோரியுள்ளது.
அத்துடன், மலையகத் தமிழர்கள் இலங்கைக்கு வந்து 200 வருடங்கள் நிறைவை நினைவுகூரும் வகையில் முன்னெடுக்கப்படும் 'மலையகம் - 200' வேலைத்திட்டங்களில் சர்வதேச தொழிலாளர் சம்மேளனம் பங்கேற்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனத்தின் உயர்மட்ட பிரதிநிதிகளுக்கும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸினருக்கும் இடையிலான சந்திப்பு, கொழும்பில் உள்ள இ.தொ.கா. தலைமையகத்தில் இன்று (10) நடைபெற்றது.
ஸ்தாபனத்தின் சார்பில் அதன் இலங்கைக்கான பணிப்பாளர் சிம்ரின் சிங், ஆசிய பசுபிக் பிராந்தியத்துக்கான பிரதிநிதி ஏரியல் கெஸ்ட்ரோ, நிபுணர் ஷைட் சுல்தான் அகமட் ஆகியோரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் சார்பில் அதன் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமான், தலைவர் செந்தில் தொண்டமான், நிர்வாக செயலாளர் விஜயலக்ஷமி தொண்டமான், தொழிற்சங்க பிரிவின் சிரேஷ்ட பணிப்பாளர் எஸ்.ராஜமணி ஆகியோரும் பங்கேற்றனர்.
மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்கள் உட்பட தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், அவர்களுக்கான பாதுகாப்பு பொறிமுறை, சர்வதேச தொழில் சம்மேளனத்தின் வகிபாகம் உள்ளிட்ட விடயங்கள் சம்பந்தமாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டன.
பெருந்தோட்டத் தொழிலாளர்கள் விவகாரத்தில் ஐ.எல்.ஓ. வழங்கிவரும் ஒத்துழைப்புகளுக்கு நன்றி தெரிவித்த அமைச்சர் ஜீவன் தொண்டமான், எதிர்காலத்திலும் ஒத்துழைப்புகள் அவசியம் எனவும் கேட்டுக்கொண்டார்.