ஆசிரியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளும், அதற்கான தீர்வுகளும் - CTSU

ஆசிரியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளும், அதற்கான தீர்வுகளும் - CTSU

ஆசிரியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்தும், அதற்கான தீர்வு குறித்தும் இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் கருத்து வெளியிட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பில் தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்று இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின்  சங்கத்தின் தலைமை காரியலயத்தில் நேற்று (29) இடம்பெற்றது.

இங்கு கருத்து தெரிவித்த சங்கத்தின் உபசெயலாளர் யாழினி கங்கா சுதன் குறிப்பிடுகையில்,

Yalini.jpg

மாணவரின் ஒழுக்கம் மற்றும் போதைப்பொருள் பாவனை போன்ற பிரச்சினைகளுக்கு ஆசிரியர்கள் நேரடியாக நடவடிக்கைகளை எடுக்க முற்படுகின்ற போது பல்வேறு பிரச்சினைகளுக்கும் சிரமங்களுக்கும் உள்ளாகின்றார்கள். எனவே குறித்த மாணவர் தொடர்பில் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றபோது பெற்றோரை அழைத்து மாணவனை நல்வழிப்படுத்துவதற்கான பொறுப்பினை அவர்களுக்கு வழங்க வேண்டும்.

நேரடியாக ஆசிரியர்கள் தண்டனை வழங்க முற்படுகின்றபோது அல்லது நடவடிக்கை எடுக்க முற்படுகின்ற போது பொலிஸார், சிறுவர் பாதுகாப்பு அமைப்புகள், சிறுவர் துஷ்பிரயோகத்திற்கு எதிரான அமைப்புகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் ஆசிரியர் அதிபர்களுக்கு எதிராகவே செயல்படுகின்றன. அண்மைக்காலத்தில் இவ்வாறான பல சம்பவங்கள் இடம் பெற்றுள்ளன. இதனால் ஆசிரியர்கள் பல சிரமங்களுக்கும் மன உளைச்சலுக்கும் ஆளாகியுள்ளனர்.

உதாரணமாக இரத்தினபுரி மாவட்டத்தில் பிரபல பாடசாலை ஒன்றில் உயர்தர மாணவர் ஒருவரின் ஒழுக்கம் தொடர்பான நடவடிக்கை ஒன்றினை ஆசிரியர் ஒருவர் மேற்கொண்ட போது அவருக்கு எதிராக சமூக மட்டத்தில் தவறான பிரசாரங்களும் அவதூறுகளும் பரப்பப்பட்டன. இதனால் அந்த ஆசிரியர் மன அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளார். ஆனால் பெற்றோர் மற்றும் சமூகத்தின் நிறுவனங்கள் ஆசிரியருக்கு எந்த ஆதரவினையும் தெரிவிக்கவில்லை.

அதேபோன்று யாழ்ப்பாணத்தின் பிரபல பாடசாலை ஒன்றிலே மாணவரின் தவறான  நடவடிக்கை தொடர்பில் ஆசிரியர் ஒருவர் விசாரணை ஒன்றினை மேற்கொண்ட போது பாடசாலை நேரத்தில் மாணவனின் பெற்றோர் பாடசாலைக்குள் புகுந்து ஆசிரியரை தாக்கிய சம்பவமும் அதனை தொடர்ந்து ஆசிரியர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவமும் இடம்பெற்றது.

ஆனால்  இங்கு ஆசிரியர்  தொடர்பில் யாரும் அக்கறை காட்டவில்லை. எனவே இவ்வாறான அசௌகரியங்களை தவிர்ப்பதற்காக ஆசிரியர்கள் மாணவருக்கு நேரடியாக தண்டனை வழங்குவதை தவிர்த்து, மாணவரின் பெற்றோரை அழைத்து அவரை நல்வழிப்படுத்துவதற்கான பொறுப்பினை பெற்றோரிடமே வழங்க வேண்டும் என்றும். மாணவருக்கு உடல் ரீதியான உள ரீதியான தண்டனைகள் வழங்குவதை இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் எதிர்க்கின்றது என்றும் குறிப்பிட்டார்.

மேலும் மாணவருக்கு உடல் உள ரீதியான தண்டனைகள் எதனையும் வழங்கக் கூடாது என்பதே இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் நிலைப்பாடாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image