இலங்கையில் C190- தொழிற்சங்கங்களிடம் இணக்கம் வௌியிட்ட அமைச்சர்
தொழில் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வாவிற்கும் தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று (4) தொழில் திணைக்களத்தில் இடம்பெற்றது.
சர்வதேச தொழிலாளர் தாபனத்தினால் பிரகடனப்படுத்தப்பட்ட பணியிடங்களில் பால்நிலை ரீதியாக இடம்பெறும் துன்புறுத்தல் மற்றும் வன்முறைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான C190 பிரகடனத்திற்கு இலங்கையில் நடைமுறைப்படுத்துவது தொடர்பில் தௌிவுபடுத்துவதே இச்சந்திப்பின் பிரதான நோக்கமாகும்.
இப்பிரகடனத்தை இலங்கையில் நிறைவேற்றுவதன் முக்கியத்துவம் குறித்து வழங்கப்பட்ட விளக்கங்களை செவிமடுத்த அமைச்சர், அதனை இலங்கையில் நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகைளை முன்னெடுப்பதாக இதன்போது உறுதியளித்தார்.
அப்பிரகடனத்தை இலங்கையில் நிறைவேற்றியதன் பின்னரான செயற்பாடுகளுக்கு தொழிற்சங்கங்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம் என்றும் அமைச்சர் இதன்போது குறிப்பிட்டார்.
இதேவேளை, இச்சந்திப்பில் கலந்துகொண்ட ப்ரொடெக்ட் தொழிற்சங்கம் முறைசாரா தொழிற்றுறையான வீட்டுப்பணிப்பெண்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு நேரம் ஒதுக்கித் தருமாறு அமைச்சரிடம் கோரிக்கை கடிதமொன்றை கையளித்தமை குறிப்பிடத்தக்கது.