அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் சுமார் 8,000 ஆசிரியர்களை சேவையில் உள்வாங்கப்படவுள்ளனர் என்று கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த பாராளுமன்றில் நேற்றுமுன்தினம் (03) தெரிவித்தனர்.
கல்வியியற் கல்லூரிகளில் பரீட்சைகள் நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அதற்கமைய, 8000 பேரை ஆசிரியர் சேவையில் உள்வாங்கப்படவுள்ளனர் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் இரத்தினபுரி மாவட்ட அமைச்சர் ஹேஷா வித்தானகே பாராளுமன்றில் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு பதிலளித்தார்.
இதுதவிர, ஆசிரியர் சேவையில் இணைய விரும்பும் அபிவிருத்தி அதிகாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு, பரீட்சை நடத்தப்பட்டு, புள்ளிகளுக்கு அமைவாக மாகாண பாடசாலைகளில் இணைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
அவர்கள் சேவையில் இணைக்கப்பட்டு மூன்று வருடங்களுக்குள் தேசிய கல்வி நிறுவகத்தில் ஒரு வருட டிப்ளோமாவை பூர்த்தி செய்து ஆசிரியர் பயிற்சியை பூர்த்தி செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
கடந்த இரு ஆண்டுகளுக்கு சேர்த்து 8000 பேருக்கு பரீட்சை நடத்தப்படவுள்ளது. அடுத்த ஆண்டின் ஆரம்பத்தில் நியமனங்கள் வழங்கப்படவுள்ளன. ஆண்டுக்கு 4000, 5000 ஆசிரியர்கள் ஓய்வு பெறுகின்றனர். கடந்த ஆண்டு கட்டாய ஓய்வு பெறுவதற்கான வயது அதிகரிக்கப்பட்டமையினால் ஓய்வு பெறவிருந்தவர்கள் ஓய்வு பெறவில்லை. அதற்கமைய, கடந்த ஆண்டும் இந்த ஆண்டும் ஓய்வு பெறவுள்ளவர்களின் எண்ணிக்கை சுமார் 8000 என கணிப்பிடப்பட்டுள்ளது. அவ்வெற்றிடங்களுக்கு புதிய ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள். பட்டதாரிகள் தொடர்பில் அடுத்த வாரம் அமைச்சரவை பத்திரம் பூர்த்தி செய்யப்படும். அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக இருக்கும் அனைவரினதும் விண்ணப்பங்கள் வயது வித்தியாசமின்றி கோரப்பட்டு அகில இலங்கை ரீதியாக பரீட்சை நடத்தப்படும். பரீட்சை பெறுபேறுகளுக்கமைய, பொதுவான நேர்முகத்தேர்வு நடத்தப்பட்டு மாகாண பாடசாலைகளுக்குள் உள்வாங்கப்படுவார்கள்.
ஆசிரியர் சேவைக்கான தேசிய பல்கலைக்கழகமொன்று உருவாக்கப்படும். அதில் தற்போது இருப்பதற்கும் அதிகமாக விடயங்கள் உள்ளடக்க இயலுமாகும். அப்பல்கலைக்கத்தினூடாக மூன்று வருட கற்றலும் ஒரு வருட செயன்முறை பயிற்சியும் வழங்கப்படும். 4 வருடங்களில் பயிற்சி பெற்ற ஆசிரியரே வகுப்பறைக்குள் நுழைவார் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.