60,000 தொழில்வாய்ப்பில் எஞ்சியோரின் நியமனம் தொடர்பில் அரசின் நிலைப்பாடு
தொழிலற்ற 2020 ஆம் ஆண்டுக்கான புதிய பட்டதாரிகள் 5,460 பேருக்கு தொழில்வாய்ப்பை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு ஒன்றிணைந்த வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
ஒன்றிணைந்த வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் இணைப்பாளர் தென்னே ஞானாநந்த தேரர் அண்மையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
45 வயதைக் கடந்த பெருமளவான தொழிலற்ற பட்டதாரிகள் இருக்கின்றனர். அவர்களுக்கு தொழில் வாய்ப்பை பெற்றுக்கொடுப்பதற்கு இதுவரையில் அரசியல் ரீதியான அல்லது அமைச்சின் தீர்மானம் மேற்கொள்ளப்படவில்லை. தொடர்ச்சியாக காலம் தடுக்கப்படுகின்றது.
இதேநேரம், 2020 ஆம் ஆண்டுக்கான புதிய பட்டதாரிகள் 5,460 பேரளவில் இருக்கின்றனர். ஒரு லட்சம் வேலை வாய்ப்பில் வழங்கப்பட்ட 60,000 வேலைவாய்ப்புகளில் 53,000 பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டு இருக்கின்றது. எனவே எஞ்சிய 7,000 பேரில், இந்த 5,460 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்குமாறு நாங்கள், ஜனாதிபதி செயலகத்திற்கும், அரச சேவைகள் அமைச்சுக்கும் தொடர்ச்சியாக அறியப்படுத்தி வருகின்றோம்.
கடந்த மார்ச் 19ஆம், ஏப்ரல் 19ஆம் திகதிகளில் இது தொடர்பில் நாங்கள் அரச சேவைகள் அமைச்சு மற்றும் ஜனாதிபதி காரியாலயம் என்பனவற்றை கடிதம் மூலம் தெளிவுபடுத்தி இருந்தோம். குறித்து அரசியல் ரீதியான தீர்மானம் மேற்கொள்ளப்பட வேண்டும் என அமைச்சு குறிப்பிட்டது. அவ்வாறு செய்தால்தான் இது குறித்து தாங்கள் கவனம் செலுத்தலாம் என்றும் அமைச்சினால் தெரிவிக்கப்பட்டது.
இந்த விடயம் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக நாங்கள் ஜனாதிபதி செயலகத்திற்கு கடிதம் ஒன்றை கையளித்திருந்தோம். அந்த கடிதத்திற்கு இதுவரையில் பதில்கூட கிடைக்கவில்லை.
மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்க்கப்பட வேண்டும் என்பதைத்தானே கிராமத்துடன் கலந்துரையாடல் நிகழ்வில் ஜனாதிபதி எதிர்பார்க்கின்றார். இந்த வேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சினைகள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு எங்களுக்கான ஒரு சந்தர்ப்பத்தை வழங்குமாறு நாங்கள் ஜனாதிபதியிடம் கோருகின்றோம். இது தொடர்பில் ஜனாதிபதி செயலகம் எவ்வித தலையீட்டையும் செய்யவில்லை. அதேநேரத்தில் அமைச்சரவையில் இதுகுறித்து எவ்வாறான பேச்சுவார்த்தை நடத்தப்படுகின்றது என்பது குறித்து தெரியவில்லை. அமைச்சரவையில் கலந்துரையாடி இது தொடர்பில் தீர்மானம் ஒன்று எடுக்கலாம். ஏனெனில் 60,000 பேரை ஆட்சேர்ப்பதற்கான அனுமதி கிடைக்கப் பெற்றுள்ளது.
தற்போதைய கொவிட் பரவல் நிலைமைக்கு மத்தியில் நேரடியாக பேச்சுவார்த்தை ஒன்றை நடத்த முடியாவிட்டாலும், இணையதள முறைமையின் ஊடாக அது ஒரு பேச்சுவார்த்தைக்கான சந்தர்ப்பத்தை எமக்கு வழங்க வேண்டும் என்று நாங்கள் கோருகின்றோம் எனத் தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
பயிலுனர் பட்டதாரிகள் - டிப்ளோமாதாரிகளுக்கு விசேட அறிவித்தல்
2019இல் ஆட்சேர்க்கப்பட்டு நிரந்தர நியமனம் கிடைக்காதுள்ள நூற்றுக்கணக்கான பட்டதாரிகள்