நாட்டில் பயன்படுத்தப்பட்டு வரும் 6 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு இன்று (31) தொடக்கம் தடை விதிக்கவுள்ளதாக சுற்றாடல் அமைச்சு தெரிவித்துள்ளது.
ஒரு தடவை மாத்திரம் பயன்படுத்தக்கூடிய பொலிதீன், பிளாஸ்டிக் பொருட்கள், PET bottles (PolyEthylene Terepthalate), 20 மைக்ரோனுக்கு குறைந்த Lunch sheets, செசி பக்கெட்டுகள் (உணவு, மருந்து தவிர்ந்த), காது குடைய பயன்படுத்தப்படும் பட்ஸ்கள் (சிகிச்சைகளுக்கு பயன்படுத்தப்படாத), காற்றடைக்கப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் என்பவற்றுக்கு இன்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதற்கான வர்த்த்மானி அறிவித்தல் ஏற்கனவே வௌியிடப்பட்டுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்
சில நிறுவனங்களின் கோரிக்கைகளுக்கு அமைய தற்போது உற்பத்தி செய்யப்பட்டுள்ள குறித்த பொருட்களை பயன்படுத்துவதற்கு 3 மாத காலம் வழங்கப்படவுள்ளதாகவும் குறித்த பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கு தடை விதிக்கப்படவில்லையெனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாளொன்றுக்கு நகரப்பகுதியில் சேகரிக்கப்படும் திண்மக்கழிவுகளில்5.9 வீதம் பொலிதீன் பிளாஸ்டிக் பொருட்கள் உள்ளடங்குகின்றன. நாட்டில் நாளொன்றுக்கு 400 தொன் பொலிதீன் சேகரிக்கப்படுகிறது. PET போத்தல்கள் மாத்திரம் மாதத்திற்கு 1,250 தொன் பயன்படுத்தப்படுகிறது. அதில் 232 தொன் மட்டுமே மீள்சுழற்சி செய்யப்படுகிறது. நாட்டுக்கு 3 இலட்சம் தொன் பிளாஸ்டிக் மூலப்பொருட்கள் இறக்குமதி செய்யப்படுவதுடன் உற்பதிகளும் பாரியளவு இறக்குமதி செய்யப்படுகின்றன. இறக்குமதி செய்யப்படும் பிளாஸ்டிக் மூலப்பொருட்களில் 30 வீதமான உற்பத்திப் பொருட்களே ஏற்றுமதி செய்யப்படுகிறன இறக்குமதி செய்யப்படும் மொத்த பிளாஸ்டிகில் 24 சதவீதம் மட்டுமே மீள்சுழற்சி செய்யப்படுகிறது.
இவ்வாறிருக்க நாட்டில் இடம்பெறும் சுற்றாடல் மற்றும் சுகாதார பிரச்சினைகளை கவனத்திற்கொண்டு தற்பேதைய அரசு உரிய நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.