ஆசிரியர் - அதிபர்கள் 25ம் திகதி முதல் முன்னெடுக்கவுள்ள 6 தொழிற்சங்க நடவடிக்கைகள்
ஆசிரியர், அதிபர்களின் சம்பள பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான தொழிற்சங்க நடவடிக்கையின் அடுத்த கட்டம் குறித்து ஆசிரியர் அதிபர் தொழிற்சங்க முன்னணி கல்வி அமைச்சுக்கு அறியப்படுத்தியுள்ளது.
இது தொடர்பில் 16 தொழிற்சங்கங்களின் முக்கியஸ்தர்களது கையொப்பத்துடன், கல்வி அமைச்சின் செயலாளருக்கு இன்று (23) கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
அந்தக் கடிதத்தில் ஆறு முக்கிய விடயங்கள் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளன.
ஆசிரியர், அதிபர்களின் சம்பளப் பிரச்சினைக்கு தீர்வுகாணும் போராட்டத்தின் கோரிக்கைகளை வென்றெடுக்கும் வரையில் எதிர்வரும் 25 ஆம் திகதி முதல் கீழ்க்கண்ட தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என அறியப்படுத்துகின்றோம்.
1. ஆசிரியர் மற்றும் அதிபர்கள் கடமைகளுக்காக தங்களுடைய தனிப்பட்ட தொடர்பாடல் உபகரணங்களை பயன்படுத்துவதைத் தவிர்ப்பது.
2. காலை 7.30 முதல் பிற்பகல் 1.30 வரை மாத்திரம் அதிபர்கள் நிர்வாக நடவடிக்கைகளில் ஈடுபடுதல்.
3. காலை 7.30 முதல் பிற்பகல் 1.30 மணி வரை மாத்திரமே மாணவர்களின் பாதுகாப்பு தொடர்பில் பொறுப்புடையவராதல்.
4. வசதிகள் வழங்கப்படும் வரையில் இணையவழி கற்பித்தலில் இருந்து விலகி இருத்தல்.
5. ஆசிரியர் மற்றும் அதிபர்கள் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளிலும், அரச விடுமுறை தினங்களிலும் கடமைகளில் ஈடுபடாதிருத்தல்.
6. ஆசிரியர் மற்றும் அதிகாரிகள் வாரநாட்களில் காலை 7.30 முதல் பிற்பகல் 1.30 வரை கற்பித்தல் நடவடிக்கைகள் மாத்திரம் ஈடுபடல் (வெளி நிறுவனங்களில் இருந்து வரும் கடமைகள், பாடசாலைகளின வெவ்வேறு வேலைத்திட்டங்கள், அடையாள அட்டை தயாரித்தல், சுகாதாரப் பிரிவு நடவடிக்கை, வேலைத் திட்டங்கள் மற்றும் நிகழ்வுகளை ஏற்பாடு செய்தல், வலய மற்றும் கோட்ட காரியங்களுக்கு தகவல்களை வழங்குதல், தர ஆவணங்களை தயார் செய்தல், வருடாந்த மற்றும் ஐந்தாண்டு திட்டங்களை தயாரித்தல், பொருட்கள் மதிப்பாய்வு, பாடசாலை கல்விச் சுற்றுலா மற்றும் வேலைத் திட்டங்களுக்காக அழைத்துச் செல்லல், பாடசாலை அபிவிருத்தி குழுக் கூட்டத்தை நடத்துதல் போன்ற எந்த நடவடிக்கையிலும் ஈடுபடுவதை தவிர்த்தல்)
இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின், இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பொதுச்செயலாளர் மஹிந்த ஜயசிங்க உள்ளிட்ட 16 தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் இந்தக் கடிதத்தில் கையொப்பமிட்டுள்ளனர்.
இதையும் வாசியுங்கள் அனைத்து ஆசிரியர்களிடமும் கல்வி அமைச்சு விடுத்துள்ள கோரிக்கை
சிங்கள மொழியிலான அந்த கடிதம் கீழே இணைக்கப்பட்டுள்ளது.