வட மாகாண சுகாதார உத்தியோகத்தர்கள் 24 மணி நேர பணிப்பகிஷ்கரிப்பு!
சுகாதாரத்துறையினர் தொடர்ச்சியாக முன்னெடுத்து வரும் வேலைநிறுத்தப் போராட்டத்தின் ஒரு கட்டமாக இன்று (30) வடமாகாணத்தில் பணிப்பகிஷ்கரிப்புப் போராட்டம் முன்னெடுக்கபடுகிறது.
தரமான சுகாதார சேவைகளை மக்களுக்காக வழங்குவதில் தடை ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வுகள் கிடைக்கப் பெறாமைக்கு எதிராக, மாகாண மட்டங்களில் தொடர்ச்சியான முன்னெடுக்கப்பட்டு வரும் தொழிற்சங்க நடவடிக்கைக்கமைய இப்பணிப்பகிஷ்கரிப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
இப்பணிப்பகிஷ்கரிப்பு தொடர்பில் சுகாதார அமைச்சின் செயலாளர் டொக்டர் எஸ். எச். முனசிங்கவிற்கு கடிதமொன்றும் அனுப்பப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
,அதன்படி தாதி-நிறைவுகாண் மருத்துவ- துணை மருத்துவ சுகாதார உத்தியோகத்தர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும், கீழே குறிப்பிடப்படும் பிரச்சினைகட்கான தீர்வுகளை எதிர்பார்த்து டிசெம்பர் 01 ஆம் திகதியிலிருந்து தொடர்ச்சியாக தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தபோதிலும், சுகாதார அமைச்சின் பொறுப்ப்பு வாய்ந்த தரப்பினர் எமது நியாயமான வேண்டுகோள் தொடர்பாக மௌனம்காக்கின்றனர் என்றும் அச்சங்கத்தினர் சுட்டிக்காட்டியுள்ளர்.
இதனைக் கருத்திற்கொண்டு தொழிற்சங்க நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்துமுகமாக மாகாண மட்டத்தில் வேலை நிறுத்த போராட்டங்களை ஒருங்கிணைக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதுடன்,அடுத்த கட்டமாக நாளை வடமாகாணத்தில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
.1)2021 ஜூலை 05ஆம் திகதி அமைச்சரவை அங்கிகாரத்திற்கமைவாக, அ) பதவி நிலை உத்தியோகத்தர் உரிமையை உறுதிப்படுத்துவதற்குரிய, பதவி பெயரிடப்பட்ட சுற்றறிக்கையை வெளியிடாமை. ஆ) 12 வருடங்களில் வகுப்பு ஒன்றிற்கு தரமுயர்த்தும் முறைக்கேற்ப,1) நிறைவுகாண் மருத்துவ மற்றும் துணை மருத்துவ உத்தியோகத்தர்களுக்கான சுற்றறிக்கை வெளியிடுவதில் ஏற்பட்டுள்ள காலதாமதம் .2) முரண்பாடுகளை நீக்கும் வகையில் 2010/11/01 திகதி வரைக்கும் முற்தேதி இடும் வகையில் அத் தீர்மானத்தினை மீண்டும் அமைச்சரவைக்கு சமர்ப்பித்து அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்ளல். 2) சம்பள முரண்பாடுகளை நீக்குதல் தொடர்பான அமைச்சரவை அங்கிகரித்த 'றணுக்கே சம்பள குழு' அறிக்கையை இதுவரை நடைமுறைப்படுத்தாமை. 3) விசேட கடமை கொடுப்பனவை ரூபா 10,000/= ஆக உயர்த்துதல். 4) மேலதிக நேரக் கொடுப்பனவை நிர்ணயிக்கும் போது சகல சுகாதார உத்தியோகத்தர்களுக்கும் அடிப்படை சம்பளத்தின் 1/80 ஆக கணக்கிடல். 5) தொழில் முறைசார் பட்டத்திற்குரிய சம்பளத்திட்டம், பொருத்தமான பதவி/ வேலை வாய்ப்புகள் 6)சகல சுகாதார உத்தியோகத்தர்களையும் பிரதிநிதிப்படுத்தும் 'சுகாதார நிர்வாக சேவை' யை நிறுவுதல் ஆகியன சுகாதார அமைச்சிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளாகும்.
மேற்படி கோரிக்கைகளுக்கு தீர்வுகளைப் பெற்றுத்தர இதுவரை எவ்வித முயற்சிகளும் மேற்கொள்ளப்படாமைக்கு எதிராக, தாதி- நிறைவுகாண் மருத்துவ- துணை மருத்துவ வடமாகாண சங்க உறுப்பினர்கள் இன்று 24 மணி நேர அடையாள வேலை நிறுத்த பேராட்டத்தில் ஈடுபடுவதுடன், சுகாதார அமைச்சின் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளின் நோயாளர்கள் மீதான பொறுப்பு இன்மை பற்றியும் நாட்டு மக்களுடன் உரையாடவும் வட மாகாணத்தின் பிரதான நகரமான யாழ்ப்பாண நகரில் எதிர்பு ஆர்ப்பாட்ட ம் ஒன்றை நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் மாதம் முதலாம் திகதி தொடக்கம் வடமேல், மத்திய, ஊவா மற்றும் கிழக்கு ஆகிய மாகாணங்களில் பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டது.
ஜனவரி 5ம் திகதி வட மத்திய மாகாணத்திலும் 12ம் திகதி தென் மாகாணத்திலும் 19ம் திகதி மேல் மாகாணத்திலும் பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படவுள்ளதுடன் அதன் பின்னரும் தமது கோரிக்கைகள் முன்னெடுக்கப்படாவிடின் தொடர் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக சுகாதார உத்தியோகத்தர்கள் சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.