பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம்: அமைச்சர் வெளியிட்ட புதிய தகவல்

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம்: அமைச்சர் வெளியிட்ட புதிய தகவல்
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பில் மீண்டும் பேச்சுவார்த்தை இடம்பெற்று வருவதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
 
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்
 
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விடயத்தில், நீதிமன்றத்தில்  எழுந்த தொழில்நுட்ப ரீதியான காரணத்தினால், நாம் வெளியிட்ட இரண்டு வர்த்தமானி அறிவித்தல்களை இரத்துச் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. ஒரு அடியை பின்னோக்கி நகர்த்தி இரண்டு அடி முன்னோக்கி செல்லும் எதிர்பார்ப்புடன் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
 
தொழிற்சங்கங்கள் மற்றும் முதலாளிமார் சம்மேளனத்துடன் மீண்டும் நாம் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளோம். இந்த பேச்சுவார்த்தைகளின் முன்னேற்றம் மிகவும் சிறந்ததாகும். 1,350 அடிப்படை சம்பளம், 350 மேலதிக கொடுப்பனவு என்று ஆரம்பத்தில் இருந்து கலந்துரையாடப்பட்டது.
 
தற்போது அனைத்து முதலாளிமார்களும் முதலாவதாக அந்த 1,350 ரூபா அதாவது EPF / ETF வழங்கப்படுகின்ற அடிப்படை சம்பளத்திற்கு இணக்கம் தெரிவித்துள்ளனர். மேலதிக கொடுப்பனவு 350 ரூபா அல்லது அதற்கு அதிகமாக இருக்கலாம். அவர்கள் பறிக்கின்ற கொழுந்தின் அடிப்படையில், அவர்களின் வரவின் அடிப்படையில் அவர்கள் உழைக்கக்கூடிய தொகையாக வழங்கப்பட்டிருக்கின்றது. 
 
அது தொடர்பான இறுதிப் பேச்சுவார்த்தை இடம்பெற்று கொண்டிருக்கின்றது. எதிர்வரும் சில நாட்களுக்குள் அவர்களின் பதிலை பெற்றுக் கொடுக்க முடியும் என எதிர்பார்க்கின்றோம்.
 
அரசாங்கம் என்ற அடிப்படையில் 1,350 ரூபா அடிப்படை சம்பளமும் 350  ரூபா மேலதிக கொடுப்பனவும் வழங்குமாறு நாம் குறிப்பிட்டிருந்தோம்.  இது தொடர்பான சாதகமான முடிவை வெகு விரைவில் பெற்றுக் கொடுப்பதற்கு நாங்கள் எதிர்பார்க்கின்றோம்  என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image