2023 ஜனவரியில் ஓய்வுபெறவுள்ள அரச ஊழியர்களின் எண்ணிக்கை வௌியானது

2023 ஜனவரியில் ஓய்வுபெறவுள்ள அரச ஊழியர்களின் எண்ணிக்கை வௌியானது

அரச ஊழியர்களின் கட்டாய ஓய்வு வயதெல்லை 60 ஆக குறைக்கப்பட்டுள்ள நிலையில் 2023 ஜனவரி முதலாம் திகதியாகும் போது ஓய்வுபெற உள்ள அரச ஊழியர்களின் எண்ணிக்கை தொடர்பான தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதியின் பின்னர், தற்போது அரச சேவையின் உள்ள 20 ஆயிரத்திற்கும், 25 ஆயிரத்திற்கும் இடைப்பட்ட அளவிலானோர் ஓய்வுபெறவேண்டி ஏற்படும் என பொது நிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது.

எதிர்வரும் டிசம்பர் மாதம் 31ஆம் திகதியுடன் அரச ஊழியர்களின் கட்டாய ஓய்வு வயதெல்லையை 60 ஆக குறைத்து சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளதை அடுத்து, இந்த நிலைமை ஏற்படுவதாக பொது நிர்வாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவினால் முன்வைக்கப்பட்ட பாதீட்டில், அரச ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதெல்லை, 65 ஆக அதிகரிக்கப்பட்டது.

எனினும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் அண்மையில் சமர்ப்பிக்கப்பட்ட இடைக்கால பாதீட்டில், அந்த வயதெல்லையானது, 60 ஆக குறைக்கப்பட்டது.

இதற்கமைவான சுற்றறிக்கை பொது நிர்வாகம், உள்நாட்டு அலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சின் செயலாளர் பிரியந்த மாயாதுன்னேவினால் நேற்று வெளியிடப்பட்டுள்ளது. 

அரச உத்தியோகத்தர்களின் கட்டாய ஓய்வு வயதெல்லையை 60 ஆக குறைத்து பொது நிர்வாக அமைச்சினால் சுற்றுநிருபம் வெளியிடப்பட்டுள்ளது.

அரச உத்தியோகத்தர்களின் கட்டாய ஓய்வு வயதை 60 ஆகக் குறைப்பதற்கு, நிதியமைச்சரினால் கடந்த மாதம் 30ம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட இடைக்கால பாதீட்டில் முன்மொழியப்பட்டிருந்தது. அதற்கு நாடாளுமன்றமும் அங்கிகாரம் வழங்கியிருந்தது. அதன்படி ஓய்வூதிய பிரமாணக் குறிப்பில் தேவையான திருத்தங்களைச் செய்வதற்கு அமைச்சரவையும் அனுமதி வழங்கியது.

இதற்கமைய, கடந்த ஜனவரி மாதம் 6ம் திகதி வெளியிப்பட்ட பொது நிர்வாக சுற்றறிக்கை எதிர்வரும் டிசம்பர் மாதம் 31ம் திகதிக்குப் பின்னர் இரத்துச் செய்யப்படவுள்ளது. கட்டாய ஓய்வு வயதானது, அரசியலமைப்பின் மூலம் நீதித்துறை சட்டத்தின் மூலம் அல்லது குறிப்பாக நிர்ணயிக்கப்பட்டுள்ள நீதிச் சேவை உத்தியோகத்தர்கள் தவிர்ந்த ஏனைய அனைத்து அரச உத்தியோகத்தர்களுக்கும் இந்த திருத்தம் பொருந்தும்.

அடுத்த வருடம் ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் அமுலாகும் வகையில், அனைத்து அரச உத்தியோகத்தர்களும், கட்டாய ஓய்வு வயதெல்லையை 60 ஆக கருதி செயற்படுதல் வேண்டும். 60 வயதுக்கு மேல் தற்போது சேவையில் ஈடுபட்டுள்ள மற்றும் டிசம்பர் 31ஆந் திகதி அல்லது அதற்கு முன்னர் 60 வயது பூர்த்தியாகும் அரச உத்தியோகத்தர்கள், தங்களின் விருப்பத்தின்பேரில், குறிப்பிட்ட திகதிக்கு முன்னர் ஓய்வுபெற முடியும்.

அவ்வாறு ஓய்வுபெறவுள்ள அனைத்து உத்தியோகத்தர்களும், உரிய நடைமுறைப்படி, தங்களது ஓய்வுபெறும் விண்ணப்பங்களை, உரிய நியமன அதிகாரியிடம் அனுமதி பெற்று, அதனை ஓய்வூதிய பணிப்பாளர் நாயகத்திடம் சமர்ப்பித்தல் வேண்டும். 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image