ஆசிய பாராளுமன்ற பெண் உறுப்பினர்கள் ஒன்றியத்தின் வருடாந்த ஒன்றுகூடல் இலங்கையில்
"ஆசிய பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் வருடாந்த ஒன்றுகூடல் - 2023" அண்மையில் கொழுப்பில் ஆரம்பமானது.
அதன் அங்குரார்ப்பண நிகழ்வு அண்மையில் (09) இலங்கை பாராளுமன்றத்தில் இடம்பெற்றது. "ஆசிய பாராளுமன்றங்களில் பாலின சமத்துவத்தின் ஊடாக சமமான பிரவேசத்தை ஏற்படுத்தல் மற்றும் பல்வகைத்தன்மை" எனும் தொனிப்பொருளில் ஆசிய பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் இவ்வருட ஒன்றுகூடல் இடம்பெறுகின்றது.
இந்த ஒன்றுகூடலின் அங்குரார்ப்பண நிகழ்வில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ, இலங்கை பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியகலாநிதி) சுதர்ஷினி பெர்னாந்துபுள்ளெ, பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர, பாராளுமன்ற பணியாட் தொகுதியின் பிரதானியும் பிரதி செயலாளர் நாயகமுமான சமிந்த குலரத்ன, உதவிச் செயலாளர் நாயகம் ஹன்ஸ அபேரத்ன, ஆசிய பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் அங்கத்தவர்கள், வெளிநாடுகள் சிலவற்றின் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
உலகளாவிய ரீதியில் யுத்த நிலைமைகள் உள்ளிட்ட பெண்களுக்கு எதிராக ஏற்பட்டுள்ள பல்வேறு வன்முறைகளுக்கு எதிராக முன்னிற்பதன் முக்கியத்துவம் குறித்தும் உலகளாவிய ரீதியில் பாலின சமத்துவத்தை ஏற்படுத்துதல் தொடர்பில் கலந்துகொண்டவர்கள் கருத்துக்களை முன்வைத்தனர்.
இலங்கை பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தை ஸ்தாபித்ததன் ஊடாக இந்நாட்டில் பெண்களின் மேம்பாட்டுக்காக அடையப்பெற்ற கொள்கை ரீதியான தீர்மானங்கள் மற்றும் சேவைகள் தொடர்பிலும் இதன்போது நினைவுகூரப்பட்டது.
2023 ஆசிய பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் வருடாந்த ஒன்றுகூடலை வெற்றிகரமாக நடத்துவதற்கு பங்களிப்புச் செய்த சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன, இலங்கை பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் சுதர்ஷினி பெர்னாந்துபுள்ளெ, பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர ஆகியோருக்கு இதன்போது நினைவுச் சின்னங்களும் வழங்கப்பட்டன.
பாராளுமன்றத்தைப் பார்வையிட்ட ஆசிய பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் அங்கத்தவர்கள் உள்ளிட்ட குழுவினர் குழுப் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். அதன்பின்னர் ஆசிய பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் அங்கத்தவர்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு விஜயம் செய்து அங்கு அதன் உறுப்பினர்கள் மற்றும் சிவில் அமைப்புக்களைச் சந்தித்துக் கலந்துரையாடினர்.
அத்துடன், ஆசிய பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் அங்கத்தவர்கள் அரச நிறுவனங்கள், அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடுவதற்கும் விஜயங்களை மேற்கொள்ளவும் உள்ளனர்.
இலங்கை பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியம் மற்றும் ஆசிய பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியம் ஆகியன இணைந்து இம்முறை வருடாந்த ஒன்றுகூடலை ஏற்பாடு ஏற்பாடுசெய்திருந்தன.