தொழிற்சங்கம் ஒன்றை நிறுவுவதற்கு 100 உறுப்பினர்கள் இருப்பது அவசியம் என்று தொழில் மற்றும் வௌிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
இலங்கை தொழிற்சட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ள திருத்தங்கள் தொடர்பில் கருத்து வௌியிட்ட போதே அமைச்சர் இதனை சுட்டிக்காட்டியுள்ளார்.
ஏற்கனவே உள்ள தொழிற்சட்டத்திற்கமைவாக தொழிற்சங்கம் ஒன்றை நிறுவுவதற்கு ஆகக்குறைந்தது 7 அங்கத்தினர்கள் இருந்தால் போதுமானது. எனினும் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட பின்னர் 100 பேர் அவசியம். நாட்டின் சனத்தொகை 5.8 மில்லியனாக இருக்கும் போதே இச்சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. நாட்டின் தற்போதைய சனத்தொகையை கருத்திற்கொண்டு அங்கத்தவர்கள் எண்ணிக்கையை மாற்றுவதற்கு பிரேரணை உள்வாங்கப்பட்டுள்ளது.
மேலும் தொழிற்சங்க நிறைவேற்றுக் குழுவில் பெண்களின் பிரதிநிதித்துவம் 25 வீதமாக இருப்பது கட்டாயமாகும். அது மாத்திரமன்றி தொழிற்சங்க போராட்டமொன்றை முன்னெடுப்பதற்கு முன்னர் சேவை பெறுநர்கள் தௌிவுபடுத்தப்பட்டிருப்பதுடன் பெரும்பான்மை அங்கத்தவர்களின் விருப்பம் அவசியமாகிறது. அது தவிர சந்தாப் பணத்தை சம்பளத்தில் குறைத்து சங்கத்திற்கு வழங்கவும் அதனை ஊழியர்களின் விருப்பத்திற்கமை நடைமுறைப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.