காப்புறுதி பொது ஊழியர்கள் சங்க பொதுச்செயலாளர் இடமாற்றத்திற்கு கடும் எதிர்ப்பு!
அரச நிறுவனங்களை தனியார்மயப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக தொழிற்சங்கங்கள் தொடர்ச்சியாக குற்றம்சாட்டி வருகின்றன.
அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து தொழிற்சங்கங்கள் குரல் கொடுத்து வருகின்ற நிலையில், காப்புறுதி பொது ஊழியர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் திவாகர அதுகல இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள தொழிற்சங்கங்கள், அதற்கு கடும் எதிர்ப்பையும வெளியிட்டு வருகின்றன.
தொழிற்சங்க நடவடிக்கைக்காக கடமைநேர உத்தியோகபூர்வ மின்னஞ்சலை பயன்படுத்தினார் என்று தெரிவித்து திவாகர அதுகோரல கொழும்பிலிருந்து களவான என்ற பின்தங்கிய பிரதேசத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொதுச் சொத்துக்கள் மற்றும் மனித உரிமைகள் பாதுகாப்பு மத்திய நிலையம் தகவல் வெளியிட்டுள்ளது.
இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள வர்த்தக மற்றும் கைத்தொழில்துறை தொழிலாளர்கள் சங்கத்தின் தலைவரும், மனித உரிமைகள் சட்டத்தரணியுமான சுவஸ்திகா ஆருலிங்கம், இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபன முகாமைத்துவமானது, காப்புறுதி பொது ஊழியர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் திவாகர அதுகலவை இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் கடந்த 9ஆம் திகதி அவர் இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபன அலுவலகத்திற்கு சென்று தமது தொழிற்சங்க உறுப்பினர்களை சந்திக்க முற்பட்ட சந்தர்ப்பத்தில், நிறுவன முகாமைத்துவத்தால் அவர் தடுக்கப்பட்டதாகவும் சட்டத்தரணி சுட்டிக்காட்டி உள்ளார். இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனம் இந்த தொழிற்சங்க தலைவரை ஏன் இவ்வாறு அச்சுறுத்துகின்றது என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள காணி மற்றும் விவசாய மறுசீரமைப்பு திட்டத்தின் செயற்பாட்டாளர் சிந்தக்க ராஜபக்ஷ,
தற்போது நாட்டின் அரச நிறுவனங்கள் லாபத்தில் இயங்குகின்றனவா? அல்லது நட்டத்தில் இயங்குகின்றனவா? என்பது தொடர்பில் பார்க்காமல் அவற்றை தனியார்மயப்படுத்தும் வேலைத்திட்டத்தை அரசாங்கம் அமுல்படுத்துகிறது.
அதற்கு எதிராக அந்த நிறுவனங்களில் உள்ள தொழிற்சங்க பிரதிநிதிகள் குரல் கொடுத்து வருகின்றனர். அதில் முக்கியமான ஒருவர்தான் காப்புறுதி பொது ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் திவாகர அத்துகல . எனவே தொழிற்சங்கங்களை அடக்குவதே அரசாங்கத்தின் நோக்கமாக உள்ளது என்பதை அவர் மீதான நடவடிக்கை மூலம் அவதானிக்க முடிகின்றது. - என்றார்.
இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள ஸ்ரீலங்கா ரெலிகொம் தொழிற்சங்கத்தின் பிரதிநிதி ஜகத் குருசிங்க, பொதுச் சொத்துக்களை விற்பனை செய்வதற்கு இந்த அரசாங்கத்திற்கு இடமளிக்கப்படமாட்டாது.
அத்துடன், காப்புறுதி பொது ஊழியர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் திவாகர அத்துகல உடனடியாக பிரதான காரியாலயத்திற்கு சேவையில் மீள இணைக்கப்பட வேண்டும். அவர் மீதான பழிவாங்கல் நடவடிக்கை முடிவுக்கு கொண்டுவரப்படாவிட்டால், காப்புறுதித்துறை ஊழியர்கள் மட்டுமன்றி அனைத்துதுறை சார்ந்த தொழிற்சங்க ஊழியர்களும் வீதிக்கு இறங்க வேண்டிய நிலை ஏற்படும். - என தெரிவித்துள்ளார்.