பாடசாலை மாணவர்களுக்கு, மின்னஞ்சல் (EMAIL) கணக்குகளை உருவாக்கும்போது, பெற்றோரின் தகவல்களை உள்ளீடு செய்ய வேண்டாம் என காவல்துறை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நாடாளுமன்றக் குழுவில் தெரிவித்துள்ளனர்.
எனவே, குறித்த சந்தர்ப்பத்தின்போது, மாணவர்களின் சரியான வயது உள்ளிட்ட தகவல்களை வழங்குமாறு, நல்லிணக்கம் மற்றும் தேசிய ஒற்றுமை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில், காவல்துறை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
இணையவழிக் கல்வி முறைமை காரணமாக, மாணவர்களின், பயன்பாட்டுக்காக கைத்தொலைபேசிகள் உள்ளிட்ட கணினி சாதனங்களை அவர்களுக்கு வழங்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருப்பதாக அதிகாரிகள் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளனர்.
எவ்வாறாயினும், ஸ்மார்ட்போன் என்ற திறன்பேசிகளை வழங்கும்போதும், மின்னஞ்சலைத் தொடங்கும்போதும் பெற்றோர்களின் தரவை வழங்குவதன் மூலம், குழந்தைகள் எந்தவொரு இணையதளத்தையும் அணுகுவதற்கான வாய்ப்பைப் பெறுவார்கள் என்று காவல்துறை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அவ்வாறின்றி, பிள்ளைகளின் சரியான வயது உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், தேவையற்ற காணொளிகள், மற்றும் இணையத்தளங்களைப் பார்ப்பதற்கு பிள்ளைகளுக்கான அணுகல் தாமாகவே கட்டுப்படுத்தப்படும் என்றும் தெரிவித்தனர்.
தொலைபேசியைப் பயன்படுத்தும்போது இலங்கைத் தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவினால் குறித்த கைத்தொலைபேசி அங்கீகரிக்கப்பட்டுள்ளதா என்பதைச் சரிபார்க்க வேண்டியது அவசியமாகும்.
அதாவது எந்தவொரு குற்றச் செயலுக்கும் கைத்தொலைபேசிகள் பயன்படுத்தப்பட்டால், அதை விரைவாக சமாளிக்கும் திறன் இந்த கைத்தொலைபேசிகளுக்கு உள்ளது.
அதாவது தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவில் பதிவுசெய்யப்பட்ட கைத்தொலைபேசிகளில் சிம் அட்டைகளை இடும்போது, அது தொடர்பான தகவல்களை ஆணைக்குழு பெறுகிறது.
எனவே, கைத்தொலைபேசிகளைக் கொள்வனவு செய்யும்போது, அவை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவில் பதிவுசெய்யப்பட்டவையா? என்பதை உறுதிசெய்துகொள்ளுமாறும் காவல்;துறை அதிகாரிகள், குறித்த குழுவில் தெரிவித்துள்ளனர்.