விடைத்தாள் மதிப்பீட்டாளர்களுக்கு கொடுப்பனவு: விண்ணப்ப முடிவுக் காலம் அறிவிப்பு
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளுக்காக, மதிப்பீட்டாளர்கள் இணையத்தள முறைமையில் விண்ணப்பிப்பதற்கான காலம் எதிர்வரும் 18ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எச்.ஜே.எம்.சீ. அமித் ஜயசுந்தரவினால், இது குறிதது நேற்று வெளியிட்டுள்ள அறிவித்தலில், பரீட்சை மதிப்பீட்டாளர்களுக்கு, இணைந்த கொடுப்பனவாக நாளாந்தம், 2 ஆயிரம் ரூபாவை வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
விடைத்தாள் மதிப்பீட்டு நிலையத்திற்கு, நாளாந்தம் 80 கிலோமீற்றருக்கு அதிகமான தூரம் பயணம் செய்யும், மதிப்பிட்டு நிலையத்திலோ, அல்லது அதற்கு அருகிலோ தங்குமிட வசதி வழங்கப்படாத மதிப்பீட்டாளர்களுக்கு, நாளாந்தம் 2 ஆயிரத்து 900 ரூபாவை இணைந்த கொடுப்பனவாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மதிப்பீட்டுப் பணியினை ஆரம்பிப்பதில், தாமதம் ஏற்பட்டுள்ளதால், உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளை வெளியிடுவதிலும் தாமதம் ஏற்படும் என்பதால், குறித்த பணியில் விரைவாக இணையுமாறு பரீட்சைகள் ஆணையாளர் அறிவுறுத்தியுள்ளார்.
உள்ளூராட்சி அதிகாரசபைத் தேர்தலுக்காக நியமனப் பத்திரங்கள் சமர்ப்பித்துள்ள அரச அலுவலர்களுக்கான அடிப்படைச் சம்பளம் செலுத்த அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இது குறித்து அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீரமானம் வருமாறு, உள்ளூராட்சி அதிகாரசபைத் தேர்தலுக்காக வேட்பாளர்களாக அரச அலுவலர்கள் 3,000 பேர் நியமனப் பத்திரங்களைச் சமர்ப்பித்துள்ளதுடன், அவர்களுக்கு தாபனக்கோவை விதியின் ஏற்பாடுகளுக்கமைய சம்பளமற்ற விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
ஆனாலும், உள்ளூராட்சி அதிகாரசபைத் தேர்தல் தற்போது பிற்போடப்பட்டுள்ளமையால், அவர்களின் சம்பளமற்ற விடுமுறைக்கான காலம் நீடிக்கப்படுகின்றமையால் குறித்த அலுவலர்கள் பொருளாதார ரீதியான சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.
அதனால், உள்ளூராட்சி அதிகாரசபைத் தேர்தலுக்காக நியமனப் பத்திரங்களை சமர்ப்பித்துள்ள அரச அலுவலர்களுக்காக 2023.03.09 ஆம் தொடக்கம் 2023.04.25 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குரிய குறித்த அந்தந்த அலுவலர்களின் அடிப்படைச் சம்பளத்தைச் செலுத்துவதற்காக அரச பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சராக பிரதமர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.