நியாயமற்ற வரிக்கொள்கைக்கு எதிராக நுவரெலியாவிலும் போராட்டம் !
தொழிற்சங்கங்கள் ஆரம்பித்துள்ள போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து நுவரெலியா நகரில் கவன ஈர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தற்போது நாட்டில் வரிக்கொள்கை, மின்சார கட்டணம் அதிகரிப்பு, வங்கி வட்டி அதிகரிப்பு, அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம் உள்ளிட்ட விடயங்களை அடிப்படையாகக் கொண்டு நுவரெலியாவில் பல தொழிற்சங்கங்கள் இணைந்து தொழிற்சங்க போராட்டத்திற்கு ஆதரவு அழித்து நுவரெலியா பிரதான அஞ்சல் நிலையத்துக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர்.
இப்போராட்டம் காரணமாக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அவசர சிகிச்சை, மகப்பேறு என்பன மாத்திரம் எந்தவித இடையூறும் இன்றி வழமைபோல் இயங்கியது ஏனைய சேவைகள் பாதிக்கப்பட்டன. தபால் நிலையமும் , அரச , தனியார் பாடசாலைகளையும் மூடி இப்போராட்டத்திற்கு ஆதரவு வழங்கியிருந்தனர். இதனால் நுவரெலியா பிரதான தபால் அலுவலகம் மற்றும் நானுஓயா தபால் அலுவலகங்கள் செயலிழந்து , தபால் சேவை மற்றும் அலுவலக கடிதப் பரிமாற்றங்களை மேற்கொள்ள முடியாத நிலையும், பல்வேறு தேவைகளின் பொருட்டு தபால் நிலையத்திற்கு வருகை தந்த பொதுமக்கள் , வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் என பலரும் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றதை அவதானிக்க முடிந்தது.
வரி அதிகரிப்பு, வாழ்க்கை செலவு அதிகரித்துள்ளமை உள்ளிட்ட பல்வேறு காரணிகளை அடிப்படையாகக் கொண்டு அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஆசிரியர் சங்கமும் இணைந்தனர் குறிப்பாக சம்பள பிரச்சினை, உயர்தர பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் உள்ளிட்ட பல கோரிக்கையை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர் , இதற்கான நடவடிக்கைகள் தாமதமின்றி எடுக்கப்பட வேண்டும் இல்லாவிட்டால் விடைத்தாள் திருத்தும் பணிகள் தாமதமடைந்தால் , பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதிலும் தாமதம் ஏற்படும். எனவே உடனடியாக இதற்கான நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் தொடர்ந்தும் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்றும் இப்போராட்டத்தின் போது ஆசிரியர் தொழிற்சங்கங்கள் எச்சரிக்கை விடுத்தனர் ,
அத்துடன் நுவரெலியாவில் சில வங்கி சேவைகள் முடங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது
போராட்டத்தில் அரசாங்கத்துக்கு எதிரான பல பதாகைகளுடன் அரசு முன்னெடுக்கப்படும் வரி கொள்கை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றும் நிறுத்தப்படாத பட்சத்தில் எதிர் வரும் நாட்களில் தொடர் போராட்டத்தை முன்னெடுக்க உள்ளதாகவும் எச்சரித்தமை குறிப்பிடத்தக்கது .